
மகிழ்ச்சி நம் வீட்டில் விளைகிறது. இன்னொருவர் தோட்டத்தைத் தேடிப்போக வேண்டியதில்லை என்றார் டக்ளஸ் ஜெரால்டு. சந்தோஷத்தை பெறுவதற்கு நாம் எல்லோரும் உரிமை பெற்றவர்கள். நோய்களை அறியாதவன், துன்பங்களை அனுபவிக்காதவன், குழந்தைகளை நேசிப்பவன், காண்பதற்கு இனிமையானவர், இவ்வளவும் இருந்தால் அவர் மகிழ்ச்சி நிறைந்த மனிதன்.
நம்மில் பலர் அதிக கவலைப்படுவதாலும், தூக்க மாத்திரைகளை உபயோகப்படுத்தி வந்தாலும் நாமே சிக்கல்களை உண்டாக்குகிறோம். நீர், சுத்தமான காற்று, சூரிய வெளிச்சம் உறக்கம் இவைகள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் வெகுநேரம் கண்விழித்து நம் ஆயுளைக் குறைக்கிறோம். ஆயுளை நீட்டிப்பதில் மட்டும் என்ன நன்மை என்று கேட்கலாம். பின்னோக்கி பார்ப்பவர்களுக்கு வாழ்க்கை குறைந்ததாக தோன்றும். முன்னோக்கி காண்பவர்களுக்கு அது நீண்டதாகத் தெரியும்.
நமக்குத் திட்டவட்டமான தெளிவான குறிக்கோள் உடைய செயல்பாடு இல்லையென்றால் வாழ்க்கை நீண்டு கொண்டு போகலாம். இன்னொரு வாதமும் உண்டு நம்மிடம் பணம் இல்லாவிட்டால் மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல காரியங்களை செய்வது சாத்தியமில்லை என்று எண்ணுவது முற்றிலும் தவறு ஏனெனில் மக்கள் பணத்தைத்தேடி அலைவதே முக்கியப் பணியாக அது செய்துவிடும். வாழ்க்கையில் நாம் எல்லோரும் விரும்புவதை செய்ய முடியாதுதான். நாம் செய்வதைத்தான் விரும்ப வேண்டி உள்ளது. நாம் நம் கடமையைச் செய்யவேண்டும்
நாம் செய்யும் தவறு என்னவென்றால் நம் வாழ்க்கைப் பாதையை திட்டமிடாதததுதான். அப்படியே நாம் திட்டமிட்டாலும் வெற்றி பெறுவோம் என்பது என்ன நிச்சயம் வெற்றிக்குப் திறவுகோல் எது? வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைதான் வெற்றிக்குத் திறவுகோல். வெற்றி பெற்றவர்களின் மனஉறுதிதான் காரணம் என்று அவர்களைப்பற்றி படித்து அறிகிறோம்.
மற்றவர்களின் துன்பங்கள் மீது உங்களுடைய இன்பத்தைக் கட்ட முடியாது என்ற உண்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும். அண்டை அயலாளர்களை நாம் நேசிக்கத் தெரிய வேண்டும். இது எளிதானதல்ல. ஓரளவு இதில் வெற்றி பெறுவதற்கு பூகோளம், மன இயல் தத்துவம், வரலாறு போன்றவற்றை படித்து அடிப்படைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
வெற்றி பெற்றுவிட்டால் ஒருவருடைய தலை கனத்துப் போகுமேயானால் அதற்குச் சிறந்த மருந்து வானவியலைப் படிப்பதாகும். கோடிக்கணக்கான நட்சத்திரங்களுக்கு நடுவில் ஒரு சிறு புள்ளியாகத்தான் நம்முடைய கிரகம் இருக்கிறது. இதைவிட பலமடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் எவ்வளவோ உள்ளன என்பதை அறியும்போது அடக்கம் வந்துவிடும். மகிழ்ச்சி என்பது வர்ணிக்க முடியாத மனநிலையைக் பொறுத்தது. ஒவ்வொருவரிடம் அதன் அளவு வேறுபடும். மகிழ்ச்சியும் துயரமும் மிகச் சிறிய கோட்டினால் பிரிக்கப்பட்டுள்ளன மாறி மாறி வரக்கூடியது.
சினிமா நட்சத்திரங்கள், கோடீஸ்வரர்கள், இராஜ குடும்பத்தினர் தவிர வேறு யாரும் மகிழ்ச்சியைக் காணவே முடியாது என பலர் நினைக்கிறார்கள். அவர்கள் நவீன ஒலிம்பிக்சை தொடங்கி வைத்த கூபர்ட்டின் கூறியதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகவும் முக்கியமான விஷயம் அதில் வெற்றி பெறுவதல்ல.
பங்கு கொள்வதே ஆகும். வெற்றி மட்டும் முக்கியமல்ல. போராட்டமும் முக்கியம்தான். விஷயம் என்னவென்றால் வெற்றி பெறாவிட்டாலும் நாம் சிறந்த முறையில் போராடினோம் என்பதுதான். மேற்கூளிய விஷயங்களை தெரிந்துகொண்டாலே மகிழ்ச்சிதான்.