
அது ஒரு கண்காட்சி. உள்ள ஏகப்பட்ட கடைகள், அரங்குகள் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போகும் பலரும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பலவற்றையும் பார்க்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். நேரம் முடிந்ததும் திரும்பிப் போகிறார்கள். அன்றைக்கு வாங்கிய டிக்கெட்டிற்கான நேரம் முடிந்துவிட்டது. மீண்டும் கண்காட்சிக்குப் போக வேண்டுமென்றால், அடுத்த நாள்தான் போகலாம். அதற்கு இன்னொரு டிக்கெட் வாங்கியாக வேண்டும்.
இது வேறு இடம். ஒரு நட்சத்திர ஹோட்டல். நீச்சல் குளத்தருகில் பஃபே நடைபெறுகிறது. பல வகையான உணவுப் பொருள் அழகாக, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. மெல்லியதாக ஆவி பறக்கும், பல நிறங்களில் இருக்கும், வித விதமான உணவுகள். பார்ப்பதற்கே அழகாக உள்ளன. வாசன மூக்கைத் துளைக்கிறது. பஃபேயில் கலந்துகொண்டு சாப்பிட ஒருவருக்கு 450 ரூபாய்.
பலரும் அங்கே சாப்பிடப் போகிறார்கள். வரிசையில் நின்று இளம் சூடாக இருக்கும் பீங்கான் தட்டை எடுத்துக் கொள்கிறார்கள். கூடவே நாப்கினையும். ஒவ்வொரு கவுண்டராக நகர்கிறார்கள். எவ்வளவோ வகை வகையான பதார்த்தங்கள் காய்கறிகள், பழங்கள், கறி, மீன், சாதம், புலவு, சாலட் ஸ்கிரீம்கள். அந்த நேரம், என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அத்தனையையும் அவர்கள் சாப்பிடலாம்.
பஃபே மூடப்படும் நேரம்வரை அவர்கள் அங்கே இருக்கலாம். சாப்பிடலாம். மறுநாள் அதே சாப்பிடுமிடத்திற்கு அவர்கள் நுழைய வேண்டுமென்றால், இன்னொரு டிக்கெட் 450 ரூபாய்க்கு வாங்க வேண்டும்.
இந்த இரண்டு உதாரணங்களுக்கும் ஒரு பொது தன்மையை உண்டு .சிலர் எல்லாவற்றையும் செய்கிறார்கள். வேறு சிலர் தேர்வு செய்த சிலவற்றை மட்டும் செய்கிறார்கள்.
சிலர் கண்காட்சிக்குப்போய், இருக்கும் எல்லா ஸ்டால்களையும் மேலோட்டமாக ஒரு பார்வை பார்ப்பார்கள், எதையும் குறிப்பாக, ஆழமாகப் பார்க்க மாட்டார்கள். அவர்களும் கண்காட்சிக்கு வந்தார்கள். போனார்கள். அவ்வளவுதான். வேறு சிலர் இருக்கிறார்கள். உள்ளேபோய் தங்களுக்குச் சுவாரசியமானதை, தேவையானதைத்தேடி, ஆழ்ந்து பார்ப்பார்கள். ரசிப்பார்கள். போனதும் அந்த இடத்துக்கு நேராகப்போய். அங்கேயே அதிக நேரம் செலவிடுவார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட முயல மாட்டார்கள்.
பஃபே போனாலும் அப்படித்தான். சிலர் அங்கே பரப்பி வைக்கப் பட்டிருக்கும் அத்தனையிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுப்பார்கள். அவர்கள் தட்டு முழுக்க பல பொருள்கள் நிறைந்திருக்கும். ஒன்றோடு ஒன்று கலந்து, எது என்ன என்று புரியாதவாறு சேர்ந்திருக்கும்.
வேறு சிலர் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுப்பார்கள். தேர்வு செய்வது எல்லாம் இருக்கும்தான். அதற்காக நாம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டு, எல்லா இடங்களையும் முழுமையாகப் பார்க்காமல் இருப்போம்.
நாம் செய்ய வேண்டியது அகல உழுவதா? இல்லை ஆழ உழுவதா? என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையும் கண்காட்சி போன்றுதான். நிறைய ஸ்டால்கள் உண்டு. வாழ்க்கை கண்காட்சிக்கும் நேரக்கட்டுப்பாடு உண்டு. குறிப்பிட்ட காலத்திற்குள் பலதையும் முடித்தாக வேண்டும். எதைச் செய்வது? எதை விடுவது ? என்ற தெளிவான பார்வை இருப்பவர்கள் முன்னேறுகிறார்கள். ஒருவர் எல்லாவற்றை செய்ய முடியாது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.