
நம் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் பொழுது மௌனம்தான் நம் மொழியாக இருக்க வேண்டும். விமர்சனத்திற்கு விளக்கம் அளித்து மேலும் சிக்கலாக்கிக் கொள்ளாமல் புன்னகையை பதிலாகத் தந்து விட்டு போக வேண்டியதுதான். அம்மாதிரி சமயங்களில் மௌனம் நம் மொழியாகட்டும். மௌனம் என்பது ஒரு சிறந்த மொழி.
பேசுவதைக் காட்டிலும் அதிக அர்த்தங்களை கொண்டது. வீரியமிக்கது. மௌனத்தின் மூலம் நாம் நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். எனவே மௌனம் உங்கள் மொழியாகட்டும்!
கோபத்தில் பேசி வார்த்தைகளை விடுவதை விட மௌனமாக ஒரு பார்வை பார்ப்பதே நிறைய விஷயங்களை சொல்லிவிடும். மௌனத்திற்கு நிறைய சக்தி உண்டு. அதேபோல் நம்மைச் சுற்றி உள்ளவர்களை அமைதியாக கவனிக்கும்பொழுது மற்றவர்களுடைய ஆழமான உணர்வுகளையும் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மௌனம் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். அது நம்மை அமைதியாகவும், கவனமாகவும் ஆக்குகிறது. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது அறிந்துகொள்ள உதவுகிறது. பேசிப் பேசி களைத்துப் போவதை விட மௌனமாக இருந்து நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த முடியும்.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை மௌனம் என்னும் சக்தி வாய்ந்த மொழி எளிதில் வெளிப்படுத்தி விடும். எதை எப்பொழுது பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது அவசியம். அதேபோல் எப்பொழுது பேசாமல் மௌனம் காக்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. 'மௌனம் சர்வாத்த சாதகம்' என்பார்கள். முக்கியமான நபர்களை கையாளும் பொழுது அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை விட அமைதியாக இருக்க கற்றுக்கொள்வது நல்லது.
தேவையற்ற இடங்களில் பேசாமல் மௌனம் காப்பது பல பிரச்னைகளை வரவிடாமல் செய்யும். மௌனம் ஒரு சிறந்த மொழி. அது நமக்கு பல நன்மைகளை தருகிறது. மௌனத்தை நமது மொழியாகப் பயன்படுத்தினால் நம் வாழ்க்கை அதிக பிரச்னைகள் இன்றி மகிழ்ச்சியுடன் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாக சொல்லிவிடும். வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் தினமும் சிறிது நேரமாவது வீண் பேச்சுக்களை ஒதுக்கி மௌனம் காக்க நம் மனதிற்குள் நிகழும் அதிசயத்தை உணரமுடியும்.
மௌனம் முட்டாள்களைக் கூட புத்திசாலியாக காட்டும் திறமை மிக்கது. நாம் செய்யும் தவறுகளை நமக்கு உணர்த்தும் சக்தி கொண்டது. சிந்திக்க நேரம் கொடுத்து பிரச்னைகளை அலசி ஆராய உதவுகிறது. மௌனம் ஒரு சிறந்த ஆசிரியர். அது நம் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துவதுடன், நமக்கு இசைவான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. குழப்பத்தில் இருக்கும்பொழுது மௌனம் காத்தால் மனம் தெளிவடைவதுடன் நமது பலம் மற்றும் பலவீனத்தை உணரமுடியும். உண்மையிலேயே மௌனம் என்பது சிறந்த தகவல் தொடர்பு ஆயுதமாகும்.
நம்முடைய கருத்துக்கு மதிப்பில்லாத இடங்களிலும், நம்மை மதிக்காதவர்கள் மத்தியிலும் மௌனமாக விலகி விடுவது நல்லது. நம் முதுகுக்கு பின்னால் விமர்சிப்பவர்களை வெற்றிகொள்ள வேண்டும் என்றால் மௌனத்தை கடைபிடிப்பதுதான் சிறந்த வழி. நாம் பேசும் வார்த்தைகள் நமக்கு எஜமானனாகிவிடும்.
எனவே, இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசுவது நல்லது. சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை என்ற கண்ணதாசனின் வரிகள் அற்புதமானவை. இனியாவது நாம் மௌனத்தின் பெருமையை உணர்ந்து வாழ்வில் செயல்படுவோம்.