
கோபப்படுவது என்பது ஒரு இயல்பான உணர்ச்சிதான். தங்களையோ, தங்களுக்கு பிடித்தவர்களையோ யாரேனும் அவமதிக்கும்பொழுது கோபம் வரலாம். அதேபோல் நம்முடைய ஆசைகளுக்கு யாரேனும் குறுக்கே நின்றாலோ, பிறரைப் பற்றி தவறான புரிதல்கள் நமக்கு இருந்தாலோ கோபம் என்பது ஏற்படும்.
எப்பொழுதாவது அதிசயமாக கோபப்படுகிறவர்கள் நல்லவர்களாகத் தான் இருப்பார்கள். இல்லையென்றால் நன்றாக ஏமாற்றப்பட்டவராக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோபம் என்பது தேவைதான். அதற்காக எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டால் கோபத்திற்கு மதிப்பு கிடையாது. நமக்கும் மதிப்பு கிடைக்காது.
எல்லோருக்கும் பிடித்த மாதிரி யாராலும் வாழமுடியாது. அதற்காக எதற்கெடுத்தாலும் கோபப்பட்டால் நம் மனஅமைதிதான் போய்விடும். கோபத்தைப் பற்றி பல பழமொழிகள் நம்மிடம் உண்டு. 'கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு இருப்பான்' 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு'. சில நொடி நேர கோபங்கள் பல தலைமுறை தாண்டிய உறவையும் அடையாளம் தெரியாமல் அழித்துவிடும்.
கோபத்தை வெளிக்காட்டுவது ஒரு குளவிக் கூட்டில் கல்லெறிவதற்கு சமம். இதனால் கோபம் தலை தூக்கும்பொழுது அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்துப் பார்த்தால் கோபம் என்பது தானாகவே அடங்கிவிடும். கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரு வழி உண்டென்றால் அதை தாமதப்படுத்துவது தான்.
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்று புத்தர் கூறிய வார்த்தைகளில் நிறைய அர்த்தம் பொதிந்துள்ளது. இந்த உலகத்தில் கோபப்படாத மனிதரே கிடையாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்க முடியாது.
எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படுத்தும் முறையில் தான் வித்தியாசம் சில அழுவார்கள், பிறரை அடித்து துன்புறுத்துவார்கள், காச் மூச்சென்று கத்துவார்கள், கையில் கிடைத்ததை தூக்கிப்போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ ஆனால் கோபப்படுவது என்பது நல்ல குணம் இல்லை.
கோபப்படும்போது நம் இதயம் வேகமாக துடிப்பதால் அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் ரத்த அழுத்தம் அதிகம் இருந்தால் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகரித்து தூக்கம் பாதிக்கப்படும். உடல் நலத்தை பாதிக்கக் கூடிய இந்தக் கோபம் தேவைதானா என்று யோசிக்க வேண்டும். கோபப்படுவதால் உறவுகளில் விரிசல் ஏற்படும். இது நம் செயல் திறனை பாதிக்கும்.
உணவிற்கும் உற்சாகத்திற்கும் சம்பந்தம் உண்டு. ஆரோக்கியமான உணவுகள் ஆரோக்கியமான மனநிலையைத் தரும். மனதை சாந்தப்படுத்தும். மகிழ்ச்சியான சூழலும், மனநிலையும் வேண்டுமென்றால் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதும், எந்த விஷயத்தையும் நல்ல கோணங்களில் அணுகுவதும் சிறப்பு. அமைதியான மனநிலையை வேண்டுபவர்கள் சிறிது நேரம் தியானம் பழகலாம்.
மனதிற்கு பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை காட்சிகளை கண்டு களிக்கலாம். இவை நம் மன நிலையில் மாற்றத்தை உண்டு பண்ணும். கோபம் தணிந்ததும் அதற்கான காரணம் என்ன என்பதை யோசித்துப் பார்த்து நம் மீது தவறு இருப்பின் திருத்திக் கொள்ளலாம். பிறர் மீது தவறு இருந்தால் நடந்தது என்ன என்பதை தெளிவாக விளக்குவதுடன், அதனால் நம் மனம் காயப்பட்டதையும் பொறுமையாக எடுத்து சொல்ல உறவுகள் விலகிப் போகாமல் பலப்படும்.