
ஒரு மனிதன் சிறப்பாக வாழ்ந்தான் என்பதற்கு சில அடையாளங்கள் தேவை. அதற்கான பழக்கவழக்கங்கள் அத்தியாவசியம் .அவை சொல்லும் செய்தி என்ன என்பதை கவனிப்போம்.
தனித்தன்மை:
ஒருவர் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழவேண்டும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று ஓரம் கட்டும் நிலைக்குத் தள்ளப்படுவான். வள்ளலார் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பதற்கு இணங்க வாழ்ந்து காட்டியவர். முகத்தில் தோன்றிய ரோமங்களை நீக்கி, அத்துடன் ஒரே ஆடையால் உடம்பு முழுவதையும் மறைத்து தனித்துவமாக வாழ்ந்து முடித்தவர். மற்றவர்கள் இயல்பாக கவிதை எழுதிக் கொண்டிருந்த பொழுது பாரதி மட்டுமே தனித்து விடுதலை வேட்கையோடு கவிதை முழங்கினான். பாரதியின் கவிதைகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அந்த தனித்துவம்தான் காரணம்.
திருத்தம்:
செய்வன திருந்தச் செய்யவேண்டும். வேலையை அரைகுறையாகவும், அலட்சியமாகவும் செய்யும்போது நம்முடைய ஒழுக்கத்தையும், மனோபாவத்தையும் படிப்படியாகவும் இதுவும் தாக்க துவங்குகிறது. அதனால் தன்னம்பிக்கையும் பறந்து ஓடிவிடும். இவையெல்லாம் இல்லாத இடத்தில் நிறைந்த தன்மையும் இல்லாது போய்விடும். ஆதலால் எதையும் திருத்தமாக செய்ய வேண்டும்.
ஒழுங்குடன் வேலை செய்:
வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் எந்த நபராக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு வேலை என்னும் ஒழுங்கை தங்களுக்குத் தாங்களே பிறப்பித்துக் கொண்டு, மனம் ஒன்றி வேலை செய்தால் அவர்களே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். உழும்போது வீடு கட்டுவது பற்றி யோசிக்கக் கூடாது. அப்படி யோசித்தால் கலப்பை கொழு மாட்டின் காலில் குத்தி உழுவதே நின்றுவிடும்.
நேரம்:
தம்முடைய ஊழியன் ஒருவன் தாமதித்து வேலைக்கு வந்ததற்கு தன்னுடைய கடிகாரத்தை சாக்காக கூறினான் நீ வேறு ஒரு கடிகாரத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் நான் வேறு ஒரு (கிளார்க்) குமாஸ்தாவை வைத்துக் கொள்வேன் என்று கூறினார் வாஷிங்டன். ஆதலால் பள்ளி, கல்லூரி, அலுவல், பயணம் என்று எதற்கு சென்றாலும் காலத்தோடு செல்வதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.
உடல் நலம்:
இயற்கை உணவுடன், குழந்தைப் பருவத்தில் நடை வண்டி விளையாட்டு, சிறுவனாகும்போது கிளித்தட்டு, சடுகுடு சிறுமியாக இருந்தால் தாயக்கட்டு, கண்ணா மூச்சு, இளைஞன் ஆகும்போது சிலம்பம், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என இளைஞர்கள் வீரர்கள் ஆவதற்கும், அவர்கள் உடல்கள் வலிமை பெறுவதற்கும் விளையாட்டுகளை வெளியில் வந்து விளையாட வேண்டும். அப்பொழுதுதான் உடல் வலிமை பெறும். ஆரோக்கியமாக இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம்.
கடமை:
பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மகனும், மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பெற்றோரும், உடன் பிறந்தோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை உடன்பிறந்தானும், மனைவிக்கு செய்ய வேண்டியவற்றை கணவனும், தாத்தா பாட்டிக்கு செய்ய வேண்டியவற்றை பேரப்பிள்ளைகளும் அன்றாடம் செய்து முறைப்படி வாழ்ந்து வந்தால் கூட்டு குடும்பம் செழிக்கும். அப்படி செழிக்கும் பொழுதுதான், நம் தெருவையும், ஊரையும், உலகத்தையும் நேசிப்போம். ஊருக்காக ஆற்ற வேண்டிய கடமையையும் எண்ணத்தில் நுழைப்போம்.
இவற்றை அன்றாடம் கடைபிடித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
வளைந்து நெளிந்து சென்றால்தான்
செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும்...
பாதையிலும் சரி...
வாழ்க்கையில் சரி...
இதுதான் காலத்தின் கட்டாயம்!