எங்கும் வாபி சாபி! எதிலும் வாபி சாபி!

எளிமை
எளிமை
Updated on

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு அம்சம் வாபி-சாபி. (WABI SABI)

வாபி-சாபி என்பது ஜப்பானிய வார்த்தை.

வாபி என்றால் எளிமையை ஏற்றுக் கொள்வது.

சாபி என்றால் உழைத்து உழைத்து காலத்தினால் பொலிவிழந்தவற்றில் உள்ளார்ந்த அழகைக் காண்பது.

அதாவது இன்னும் நேர்த்தி, இதைவிட இன்னும் அழகு என்று பூரண அழகையே நோக்கமாகக் கொண்டு விரட்டி ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை ஒரு கணம் நிறுத்தி, பழையதில் அழகைப் பார்; இருப்பதை ஏற்றுக் கொள் என்று சொல்கிறது வாபி சாபி.

இரண்டு வார்த்தைகளும் இணைந்து இயற்கையில் ஏற்படும் வளர்ச்சியையும் காலத்தால் ஏற்படும் பழைய தன்மையையும் ஏற்றுக் கொள்வதைக் குறிக்கிறது.

புத்தமதத்தின் ஜென் பிரிவில் இந்த வார்த்தை உருவாக்கப்பட்டு ஏற்கப்பட்டு எல்லாத் துறைகளிலும் ஊடுருவி இருக்கிறது இன்று!

டீ கோப்பைளை நேர்த்தியாக வரிசைப்படுத்தி அனைவருக்கும் டீ அளிப்பதிலிருந்து, ஓவியங்களை சீராக வைப்பது, எளிமையான கவிதையில் அழகு காண்பது உள்ளிட்ட அனைத்திலும் இன்று வாபி சாபி ஒளிர்கிறது.

இயற்கையிலான சீரற்ற தன்மையும் கூட அதன் ஒரு அங்கம் தான் என்று ஏற்றுக் கொள்வதே வாபி சாபி.

இதையும் படியுங்கள்:
நீங்கள் உண்மையில் யார் என்பதை அறிய உங்களிடமே கேட்க வேண்டிய 15 கடினமான கேள்விகள்!
எளிமை

இளம் பிட்சு ஒருவர் ஒரு தோட்டத்தை மிக மிக சுத்தமாக ஆக்க கஷ்டப்பட்டார். ஒவ்வொரு சருகையும் ஒவ்வொரு சுள்ளியையும்,உதிர்ந்த மலரையும் எடுத்து அப்புறப்படுத்தினார்.

தனது குருவிடம் அதைக் காட்டினால் மிகவும் சந்தோஷப்படுவார் என்று நினைத்த அவர் தனது குருவை அழைத்தார். தோட்டத்தைக் காண்பித்தார்.

குரு தோட்டத்தை முற்றிலுமாக ஒரு நோட்டம் விட்டார்.

பின்னர் அங்கிருந்த செர்ரி மரம் மீது ஏறி அதை ஒரு உலுக்கு உலுக்கினார்.

இலைகளும், மலர்களும், பழங்களும் மேலிருந்து பல்வேறு பக்கங்களிலும் உதிர்ந்தன.

தோட்டத்தின் தரையெங்கும் இலைகளும் செர்ரி பழங்களும் சிதறிக் காட்சி அளித்தன.

“ஆஹா! இப்போது அழகாக இருக்கிறது!” என்றார் குரு.

சீடனுக்கு வாபி சாபி புரிந்தது.

முராடோ ஜுகோ (Murato Juko - 1423-1502) என்பவர் தான் வாபி சாபியை முறைப்படுத்தி அதற்கு ஒரு தனி அங்கீகாரத்தை வழங்கிய குரு ஆவார்.

இவர் வாழ்ந்த காலம் பதினைந்தாம் நூற்றாண்டு.

ஜப்பானில் தேநீர் விருந்தில் வைக்கப்படும் ஜாடி மிக்க ஆடம்பரம் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் ஒரு சிறு கீறல் இருந்தால் கூட அது அப்புறப்படுத்தப்பட வேண்டியது தான்.

இதை மாற்றினார் முராடா ஜுகோ!

இதையும் படியுங்கள்:
எப்போதும் 'mood அவுட்'தானா? அதிலிருந்து வெளிவர எத்தனையோ வழிகள் இருக்கே!
எளிமை

பளபளப்பில்லாத சாதாரண ஜப்பானிய பீங்கான் கோப்பைகளில் டீயை ஊற்றி விருந்தினர்களுக்கு அளித்து ஒரு புதிய முறையை அவர் அறிமுகப்படுத்தினார்.

கீறல் விழுந்த ஜாடியை அலங்காரமாக வைத்து அதற்கு ஒரு மதிப்பை அளித்தார் அவர்.

இதை அனைவரும் வரவேற்றனர். வாபி சாபி பிரபலமாயிற்று.

இன்று உலகெங்கும் அமெரிக்கா முதல் இதர பல நாடுகளிலும் வாபி சாபி பின்பற்றப்பட ஆரம்பித்து விட்டது.

பழமைக்கு மரியாதை. எளிமைக்கு மதிப்பு.

எங்கும் வாபி சாபி! எதிலும் வாபி சாபி!!

logo
Kalki Online
kalkionline.com