
இளைமையில் வறுமை கொடுமை. முதுமையில் தனிமை கொடுமை என்று சொன்னால் மிகையாகாது. அளவுக்கதிகமாக வறுமை வந்துவிட்டால் அதிலிருந்து எப்படியாவது மீளவேண்டும் என்று எல்லாவற்றுக்கும் துணிந்து செயல்படுபவர்கள் பலர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருந்ததையெல்லாம் இழந்தாயிற்று. இழந்ததை எல்லாம் மீட்டு, எழுந்து நிற்கவேண்டும் என்றால் வறுமையை ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். அதை சிறப்படையச் செய்யும். அதற்குத் துணிய வேண்டும். அதுபோல் ஹெச்.ஜி. வெல்சின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் எல்லோரையும் ஊக்குவிக்கும் விதமாக அமைகிறது.
ஹெச்.ஜி.வெல்ஸின் தந்தை கிரிக்கெட் விளையாட்டை தொழிலாகக் கொண்டவர். அவர் ஒரு சிறு பானை, சட்டி கடையை வைத்திருந்தார். அந்த கடையில் இருந்த ஒரு சிறு அறையில்தான் வெல்ஸ் பிறந்தார். அந்தக் கடையும் சிறிது காலத்திற்குப் பிறகு மூடப்பட்டுவிட்டது. எனவே அவருடைய தாய் ஒரு வீட்டில் வேலைக்கு அமர்ந்தார்.
குடும்பத்தை நடத்தும் பொறுப்பு 13 வயதிலேயே வெல்ஸின் தலையில் விழுந்தது. எனவே அவர் துணிக்கடையில் வேலைக்கு அமர்ந்தார். துணிக்கடை முதலாளியும் ஒரு மாதத்திற்குப் பிறகு அவரை வெளியே அனுப்பிவிட்டார். பின்பு ஒரு மருந்து கடையில் சேர்ந்தார். அங்கும் அப்படியே நடந்தது.
மற்றொரு துணிக்கடையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். அப்பொழுது அங்கே இருக்கும் கடை மேலதிகாரி பார்க்காத சமயத்தில் தனியாக ஓர் அறைக்குள் சென்று ஹெர்பட் ஸ்பென்சர் என்ற மகாகவி நூலை படித்துக்கொண்டு இருப்பாராம். அங்கும் அவரை அவர் முதலாளி வேலையை விட்டு நீக்கிவிட்டார்.
அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை உணவு அருந்தக்கூட இல்லாமல் வெறும் வயிற்றோடு 15 மைல்களுக்கு அப்பால் இருந்த தம்முடைய தாயிடம் சென்று அழுதார். இனியும் அந்த கடையில் வேலை செய்வதாக இருந்தால் உயிரோடு இருக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.
பின்னர் உடைந்த மனசுடன் தன் ஆசிரியருக்கு நீண்ட கடிதம் எழுதினார். தம்முடைய தாங்கொணா வறுமையையும், தான் இனிமேல் உலகில் வாழ விருப்பமில்லை என்பதையும் அவர் அதில் எடுத்துக்காட்டி இருந்தார்.
அவருடைய ஆசிரியரும் அக்கடிதத்தைப் படித்தார். பின்னால் பெரிய எழுத்தாளனாகக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது என்பதை கடிதத்தின் வாசகங்கள் எடுத்துக்காட்டின. இதைப் புரிந்து கொண்ட அவர், அவர் பள்ளியிலேயே வேலை கொடுத்தார். அப்பொழுதும் அவருக்கு அந்த வேலை ஒத்து வரவில்லை.
காரணம் பால் விளையாடும் பொழுது கீழே விழுந்த அவருடைய சுவாசப்பையும், சிறுநீரகத்தில் சில பிரச்னையும் ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் கைவிட்டனர். எனினும் பிழைத்துவிட்டார் வெல்ஸ். ஆனால் ஓடி ஆடி வேலை பார்க்க முடியாத சூழல் இருந்ததால் வேறு வழி இன்றி கதைகளும், கட்டுரைகளும் எழுத தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் ஓயாமல் எழுதி, அவர் எழுதியவை அவருக்கே பிடிக்காமல் போனதால் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிவிட்டார்.
பின்னர் அவர் எழுதிய நூல்களே ஆங்கிலக் கலையின் மணிகளாகத் திகழ்கின்றன. உலகப் பேரறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹெச்.ஜி.வெல்ஸ் தம் பேனாவினால் மட்டுமே இரண்டு லட்சம் பவுண்டுகள் ஈட்டியிருக்கிறார்.
இவ்வளவு துயரங்களையும் துடைத்தெறிந்து விட்டு எழுத்தின் வழியாக எழுந்து நிற்றல் என்பதை ஹெச்.ஜி.வெல்ஸின் வாழ்க்கைப் படிக்கட்டுகள் உணர்த்துகின்றன. அவர் எல்லா சூழ்நிலைகளிலும் உழைக்க தயாராக இருந்தார். கிடைத்த வேலையை செய்துகொண்டே வறுமையை துடைத்தெரியத் துணிந்தார். கடைசியில் அழியாப் புகழ் பெற்றார். வறுமையைக் கண்டு பயந்து நிற்கும் வாலிப பிள்ளைகளுக்கு இதெல்லாம்தான் நம்பிக்கை ஒளியாய் ஊக்கமூட்டும் சிறப்புப் பாடங்கள்.
ரோம் நகரம் ஒரே நாளில் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை நாம் அறிவோம். அதைப் போல்தான் புகழ் பெற்றவர்கள் எல்லோரும வசதியாகவே இருந்து அதைப் பெறவில்லை. வறுமையிலும், ஏழ்மையிலும் இருந்து மேல் உயரத்தை தொட்டவர்கள்தான் அவர்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றையெல்லாம் படித்து அறிவோம். அதன் வழி நடப்போம்.