உங்க வாழ்க்கை ஏன் குழப்பமா இருக்கு தெரியுமா? காஃப்கா சொல்லும் அதிர்ச்சி உண்மை!

Kafkaesque
Kafkaesque
Published on

சில சமயம் நம்ம வாழ்க்கையில காரணமே இல்லாம சில பிரச்சனைகள் வரும். அதை ஏன் அனுபவிக்கிறோம், அதுக்கு என்ன தீர்வுன்னே தெரியாம ஒரு பெரிய குழப்பத்துல மாட்டிக்கிட்டுத் தவிப்போம். "இது ஒரு கனவா இல்ல நிஜமா?"னு நமக்கே சந்தேகம் வரும். இந்த மாதிரியான குழப்பமான, அர்த்தமே இல்லாத, பயமுறுத்துற சூழ்நிலைகளைத்தான் "காஃப்காஎஸ்க்" (Kafkaesque) அப்படின்னு சொல்றாங்க. இது ஃபிரான்ஸ் காஃப்கா (Franz Kafka) அப்படிங்கிற ஒரு எழுத்தாளரோட எழுத்துக்களை அடிப்படையா வச்சு உருவான வார்த்தை.

யார் இந்த ஃபிரான்ஸ் காஃப்கா?

ஃபிரான்ஸ் காஃப்கா 1883-ல பிராக் (Prague) நகரத்துல பிறந்தாரு. அவரோட அப்பா ஹெர்மன், ஒரு முதலாளி. "நீயும் என்னை மாதிரி ஒரு பெரிய முதலாளி ஆகணும்"னு காஃப்காவை வற்புறுத்துனாரு. ஆனா, காஃப்காவுக்கு அதுல இஷ்டம் இல்ல. அவரோட அப்பாவுக்கும் அவருக்கும் கடைசி வரைக்கும் ஒரு நல்ல உறவே அமையல. இதனால, காஃப்கா எப்பவுமே தனிமையிலயும், தாழ்வு மனப்பான்மையிலயும் வாழ்ந்தாரு.

அப்பாவுக்காக சட்டம் படிச்சாரு, இன்சூரன்ஸ் கம்பெனியில வேலை பார்த்தாரு. பகல்ல ஒரு பிடிக்காத வேலை, ராத்திரில எழுதுறதுன்னு அவரோட வாழ்க்கை போச்சு. தனக்குள்ள இருந்த பயம், குழப்பம், தனிமை இது எல்லாத்தையும் தன்னோட கதைகள்ல கொட்டித் தீர்த்தாரு. "தி ட்ரையல்" (The Trial), "தி கேஸில்" (The Castle), "மெட்டமார்ஃபோசிஸ்" (Metamorphosis) இப்படி அவர் எழுதின கதைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான உலகத்தைக் காட்டுச்சு.

காஃப்காவின் உலகம் எப்படிப்பட்டது?

காஃப்காவோட கதைகள்ல வர்ற கதாபாத்திரங்கள் எல்லாரும் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டு இருப்பாங்க.

  • தி ட்ரையல்: ஜோசப் கே அப்படின்ற ஒருத்தனை போலீஸ் அரெஸ்ட் பண்ணுவாங்க. ஆனா, அவன் என்ன தப்பு செஞ்சான்னு யாருமே சொல்ல மாட்டாங்க. அவனும் கடைசி வரைக்கும் தான் எதுக்கு தண்டிக்கப்படுறோம்னு தெரியாமலே அலைவான்.

  • மெட்டமார்ஃபோசிஸ்: ஜார்ஜ் சாம்சாங்கிறவன் ஒரு நாள் காலையில எழுந்து பார்த்தா, அவன் ஒரு பூச்சியா மாறியிருப்பான். ஆனா, அவன் பூச்சியா மாறிட்டோமேன்னு கவலைப்படாம, "ஐயோ, ஆபீசுக்கு லேட் ஆயிடுச்சே, பாஸ் திட்டுவாரே"ன்னு கவலைப்படுவான்.

இதையும் படியுங்கள்:
பூச்சியினமா ஈசல்? உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் அற்புத பூச்சி!
Kafkaesque

இந்தக் கதைகள் எல்லாமே நம்ம வாழ்க்கையோட ஒரு குறியீடுதான். நாமளும் பல சமயம் காரணமே இல்லாத சமுதாயக் கட்டுப்பாடுகளுக்குள்ள மாட்டிக்கிட்டு, பிடிக்காத வேலையைச் செஞ்சுகிட்டு, ஏன் வாழ்றோம்னே தெரியாம ஒரு எந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கோம்.

காஃப்காஎஸ்க் நமக்குச் சொல்வது என்ன?

காஃப்கா உயிரோட இருந்தப்போ அவரோட எழுத்துக்களை யாருமே பெருசா மதிக்கல. அவர் சாகுறப்போ, "என் எழுத்துக்கள் எல்லாத்தையும் எரிச்சிடுங்க"ன்னு அவரோட நண்பர் மேக்ஸ் பிராட் கிட்ட சொல்லிட்டுதான் செத்தாரு. ஆனா, நல்லவேளையா மேக்ஸ் பிராட் அதைச் செய்யல. அதனாலதான், இன்னைக்கு நமக்கு காஃப்கா கிடைச்சாரு.

காஃப்காஎஸ்க் நமக்கு ஒரு முக்கியமான உண்மையைச் சொல்லுது. இந்த உலகம் ஒரு குழப்பமான இடம். இங்க அதிகாரத்துல இருக்கிறவங்க நம்மளை ஒரு பொம்மை மாதிரி ஆட்டி வைப்பாங்க. நாமளும் கேள்வி கேட்காம அதுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். "நான் ஏன் இதைச் செய்யுறேன்?"னு ஒரு நிமிஷம் யோசிச்சா, நம்ம வாழ்க்கையோட அர்த்தம் புரியும்.

இதையும் படியுங்கள்:
மண்ணை மாசுபடுத்தாமல் செலவைக் குறைக்கும் 3 இயற்கை பூச்சி விரட்டிகள்!
Kafkaesque

காஃப்கா ஒரு அவநம்பிக்கைவாதியா தெரிஞ்சாலும், அவர் சொல்ல வர்றது என்னன்னா, "சூழலுக்கு அடிமையாகாதீங்க, விழிச்சுக்கோங்க" என்பதுதான். நம்மள சுத்தி நடக்கிற அநியாயங்களை, அர்த்தமற்ற விஷயங்களைக் கேள்வி கேட்கணும். இல்லன்னா, சாம்சா மாதிரி நாமளும் ஒரு நாள் வெறும் பூச்சியா மாறி, யாருக்கும் பிரயோஜனம் இல்லாம அழிஞ்சு போயிடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com