
மகிழ்ச்சி என்பது வெளியே தெரியும் பொருள் அல்ல. சிலநேரங்களில் அழகான பெண்ணுக்கு பொருத்தமில்லா மணமகன் அமைந்தது பார்த்து வருத்தப்படுவோம். விசாரித்தால் அது காதல் திருமணமாக கூட இருக்கலாம். இந்தப் பெண் அவளை எப்படி விரும்பினாள் என்றுகூட நினைப்போம். அந்தப்பெண் மகிழ்ச்சியான தருணத்தில் அந்த ஆணைச் சந்தித்திருக்கவேண்டும்.
மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தவுடன் உலகமே காலடியில் இருப்பதாக இறுமாப்படைவர்களும் உண்டு. அவர்கள் ஆணவத்துடன் இருப்பதாகத் தெரியும். ஆனால் அது ஐஸ்க்ரீமைப் பார்த்தவுடன் துள்ளிக் குதிக்கும் மனநிலை என்பது முதிர்ச்சியடைந்தவர்களுக்கு தந்தான் தெரியும். வெளியே தெரியும் மகிச்சியினும் உள்ளே ஊறும் நிறைவு இனிமையானது. மகிழ்ச்சியை நெறிப்படுத்தத் தெரிந்தால் எந்த நொடியிலும் கலங்காமல் வாழமுடியும்.
ஒரு இளைஞனுக்கு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதால் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவனால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தி. சுவாதீனமற்றவன் போல் நடந்து கொண்டான். அவன் நடத்தையைக் கண்டு பயந்த அவன் வீட்டார் புகழ்பெற்ற மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர்" உன் வியாதியை குணப்படுத்த முடியாது. இன்னும் இரு வாரங்களில் நீ இறந்துவிடுவாய். வீட்டுக்குப் போ" என்றார். அவனிடம் ஒரு கடிதமும் தந்தார்.
இதைக் கேட்டதும் இளைஞனின் மகிழ்ச்சி யெல்லாம் ஆவியாகிவிட்டது. வழியில் மருத்துவரின் நண்பரைப் பார்த்து அவர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தான். அவர் அதைப் படித்து சிரித்தார். அந்தக் கடிதத்தில் "இந்த இளைஞன் ஆனந்த மனநிலையில் எல்லையைத் தாண்டி இருந்து விட்டார் . இது அவர் இதயத்தைப் பாதித்துவிட்டது. நான் அவன் இறந்து விடுவான் என்று சொன்னேன். அது அவரை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த அதிர்ச்சி அவருடைய அதிகப்படியான மகிழ்ச்சியைக் குறைத்து இதயத்தை சமநிலைக்கு கொண்டுவரத்தான். உன்னிடம் வருவதற்குள் சரியாகியிருப்பான்" என்று எழுதியிருந்தது.
மகிழ்ச்சியைக் கட்டுப்பாட்டில் வைத்து நெறிப்படுத்தி அதை நீட்டிக்கச் செல்ல இயலும். எப்போதும் இன்புற்று இருப்பவர்கள் வெளியே தங்கள் சந்தோஷத்தைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. சிரிக்கும் பலருடைய கண்களில் இருக்கும் நிறைவேறாத பக்கங்களைக் காணமுடியும்.
என் மகிழ்ச்சியை எல்லோருக்கும் தம்பட்டம் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலையே ஆன்மிக மனநிலை. அதற்காக மகிழ்ச்சியில் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பதல்ல. சின்னச் சின்ன நிகழ்வுகளையும் திருவிழாவாக்கத் தெரிந்தவன், பகிர்ந்து கொள்வதையே மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக மாற்றிக்கொள்கிறான்.
கொண்டாட்டம் என்பது குடிப்பதும், கும்மாளமிடுவதும் அல்ல. முழு நிலவை மும்முரமாக தரிசிப்பது, வெறும் நீரைக் கூட தீர்த்தமாக பெருகுவதும்தான். நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதை விட எவ்வளவு விழிப்புணர்வுடன் சாப்பிடுகிறோம் என்பதுதான் நம் கொண்டாட்டத்தின் உயரத்தைக் தீர்மானிக்கிறது.
அப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை செறிவடைகிறது.அடுத்தவர்களை துன்புறுத்தாத கொண்டாட்டமாக, மற்றவர்களை எரிச்சலடையச் செய்யாத மகிழ்ச்சி அனைவரையும் ஈர்க்கின்ற பேரின்ப நிகழ்வாக மலரும்.