
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரம்மாண்டமான பாக்ரா அணைக்கட்டைப் பார்க்கும்போது, அதனுடன் சம்பத்தப்பட்ட ஒரு மனிதன் நினைவு கட்டாயம் தோன்றாமல் போகாது, மனிதனின் கட்டுமானச் சாதனங்களில் ஒன்றான இந்த அணையை வடிவமைத்துக் கட்டுவதற்கு அரும்பாடுபட்டவர் அமெரிக்க பொறியியல் வல்லுனர்.
இந்தியாவின் வட பகுதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பலனளித்து வரும் பாக்ரா அணைக்கட்டு, அவர் மேற்கொண்ட மிகச சிறப்பான கட்டுமானப் பணிகளில் ஒன்றாகும்.
அந்த அணைக்கட்டை வடிவமைப்பதில் உள்ள சிக்கலான பொறியியல் பிரச்னைகள், பிரம்மாண்டமான அளவில் அதைக்கட்ட வேண்டியிருப்பது ஆகியவை ஹார்வி ஸ்லோகத்திற்குப் பெரும் சவால்களாகத் தோன்றின. அந்தச் சவால்களை அவர் ஏற்றார்.
அபாரமான கற்பனைத் திறன், அறிவுக் கூர்மை, சளைக்காத உழைப்பு ஊற்றெடுக்கும் ஆற்றல் இவற்றினால் ஹார்லிஸ்லோகம் தனது தொழிலில் தனித்து விளங்கினார்.
பாக்ரா அணைக்கட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அவரோடு தெருங்கிப் பழகிய இந்திய நண்பர்கள் அவரைத் திருவாளர் அணைக்கட்டு என்றுதான் அழைத்தனர்.
பாக்ரா அணைக்கட்டு உருவாக்கிக் கொண்டிருந்தபோது. அணைக்கட்டுத் திட்டப்பகுதியில் பெரும் நெருக்கடியொன்று ஏற்பட்டது ஆற்றின் இடக்கரைப் பக்கமாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த அணையில் உள்ளறைப் பகுதியில் திடீரென்று ஆற்று வெள்ளம் நிரம்பியது.
ஹார்வி எண்பது ஆட்களை வைத்துக் கொண்டு நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்தார். குறைந்தபட்சம் முன்னூறு பேராவது இல்லாமல் அந்தப் பணியை நிறைவேற்ற முடியாது என்று பொறியாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். ஆனால் குறைந்த ஆட்களுடன் ஹார்வி அப்பிரச்னையைச் சமாளித்தார். இவரைப் போல வேறு யாருமே இந்தக் காரியத்தைத் திறன்பட செய்திருக்க முடியாது.
பாக்ரா அணைத்திட்டத்தின் இறுதிக் கட்டங்களில் ஸ்லோகம் தனது உடல் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் திட்டப்பகுதிக்கு வந்து அங்கு நடக்கும் பணிகளை மேற்பார்வையிட்டார் . வழக்கம்போல் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஸ்லோகமின் உயிர் பிரிந்தது.
பாக்ரா அணையிலிருந்து அதன் ஆயக்கட்டுப் பகுதிகளுக்குப் பாய்கிற பாசன நீரும், சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கும் பாக்ரா அணையின் மின்விசையும், இரும்பு போல வலிமையான நெஞ்சுறுதி படைத்த அந்த மாபெரும் மனிதனை நினைவுகூரும் சாட்சியங்களாக விளங்குகின்றன. ஒரு செயலைத் தொடங்கிவிட்டால் அதனை வெற்றியுடன் முடித்து வைப்பதே ஒருவனின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
சாதனையைச் செய்து முடிப்பதென்பது, ஏதோ மலர்த்தோட்டத்தில் பூப்பறிப்பது போன்றதல்ல; அது அடர்ந்த காட்டில் அரிய மூலிகையைத் தேடிக்கண்டுபிடிப்பது போன்றதாகும்.