
விடலைப் பருவத்தினருடன் மோதும் பெற்றோர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்!
"வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ”
என்று பெரிய மருது திரைப்படத்திற்கு வாலி எழுதிய பாடலிலும்,
“வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…
பூவுக்கு வாசம் உண்டு…
பூமிக்கும் வாசம் உண்டு…”
என்று ‘முதல் மரியாதை’ திரைப்படத்திற்கு வைரமுத்து எழுதிய பாடலிலும் இடம் பெற்றிருக்கும் ‘வெடலப் புள்ள’ என்பதற்கான பொருள் உங்களுக்குத் தெரியுமா?
வெடலப் புள்ள என்பது விடலைப் பருவம் என்று அழைக்கப்படும் வளரிளம் பருவத்துப் பெண்களை வட்டார மொழி வழக்கில் குறிக்கும் சொல்லாகும். இதேப் போன்று வளரிளம் பருவத்து ஆண்களை வட்டார மொழி வழக்கில் 'வெடலப் பசங்க' என்று சொல்கின்றனர்.
மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டத்திலிருக்கும் பருவத்தை விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்கின்றனர். இப்பருவத்துக்கான வயதெல்லை என்பது ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை.. அந்தந்தச் சமூகப் பண்பாடுகளுக்கேற்றபடி அமைகிறது.
பல காலங்களாக, பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி, விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மருவத்துவ அடிப்படையில் விடலைப் பருவமானது, 10 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட காலம் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது.
விடலைப் பருவக் காலத்தில் ஆண்களிடம் உயரம், எடை அதிகாிக்கும், தசைகள் வலுவடையும், தோள்கள் அகன்று காணப்படும், எண்ணெய் சுரப்பு அதிகம் ஆவதால் பருக்களும், சிறுகட்டிகளும் தோன்றும். வியர்வை மற்றும் உடல் நாற்றம் அதிகாிக்கும்., சோா்வு அதிகமாகக் காணப்படும். இனப்பெருக்க உறுப்புகள் (விந்தகம்) வளா்ச்சியடையும். குரல்வளை அகன்று குரல் சிறிது கடினமாக மாறும் என்று சொல்கின்றனர்.
இதேப் போன்று பெண்களிடம் உயரம், எடை அதிகாிக்கும், இடுப்பு பொிதாகி உடல் நெளிவு சுளிவுடன் கூடிய வடிவத்தைப் பெறும், எண்ணெய் சுரப்பு அதிகம் ஆவதால் பருக்கள் தோன்றும். வியர்வை மற்றும் உடல் நாற்றம் அதிகாிக்கும். சோா்வு அதிகமாகக் காணப்படும். இனப்பெருக்க உறுப்புகள் (அண்டகம்) வளா்ச்சியடையும். குரல் மென்மையாக மாறும், மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கும், மார்பகம் வளர்ச்சியுறும் என்று சொல்கின்றனர்.
சமூகவியலில், விடலைப் பருவம் என்பது, ஒரு பண்பாட்டுத் தோற்றப்பாடாகவே இருக்கிறது. இதனால் இதன் தொடக்கமும் முடிவும் உடல் ரீதியான எல்லைகளுடன் தொடர்புபடுத்தப்படுவது கடினமாக இருக்கிறது. இப்பருவம் சிறுவர் வளர்ந்தவர்களாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம்மாற்றம், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் சார்பான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் உயிரியல் மாற்றங்களும், உளவியல் மாற்றங்களுமே இலகுவாக அளவிடப்படக் கூடியவையாக இருக்கின்றன.
விடலைப் பருவத்து ஆண், பெண்களிடம் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களால், அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் குழந்தைப் பருவச் செயல்பாடுகளைக் கடந்ததாக இருக்கின்றன. மேலும், விடலைப் பருவத்தினர் பொருளாதாரத் தேவைகளுக்குப் பெற்றோர்களைச் சார்ந்திருப்பதால், அவர்களது செயல்பாடுகளுக்குப் பெரும் தடைகள் ஏற்படுகின்றன.
பெற்றோர்கள், விடலைப் பருவத்தினர்களைக் குழந்தைகளைப் போலவே எண்ணி அவர்களது செயல்பாடுகள் அனைத்தையும் கண்டிக்கின்றனர். இதனால், பெற்றோர்கள் தங்களது விடலைப் பருவ மகள் அல்லது மகனைச் சமாளிக்க முடியாமல் விரக்தியடைந்து மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். விடலைப் பருவத்தினருக்கும் பெற்றோர்களுக்கிடையே நடைபெறும் இப்போராட்டம் குடும்பத்தின் அமைதியையும் சீர்குலைக்கிறது.
இந்நிலையில், பெற்றோர்கள் விடலைப் பருவத்தினர்களுக்கு ஏற்ற வகையில் கண்டிப்புகளாக இல்லாமல், அன்புடன் கூடிய அறிவுரைகளை வழங்கி அவர்களுடன் இணைந்து செயலாற்றினால் நல்லது.