ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களைப் போற்றி வணங்க வேண்டிய முக்கிய நாளாகும்..
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிகச் சிறந்த நாளாகும்.
அமாவாசை நாளில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழைகள், அந்தணர்களுக்கு தானங்கள் வழங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதாவது ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு புறப்பட்டு வருவதாகவும், இவர்கள் மஹாளாய அமாவாசை வரை பூமியிலே தங்கியிருந்து தங்களின் சந்ததியினருக்கு ஆசி வழங்கி அவர்களின் வாழ்வில் இருக்கும் துன்பங்களை தீர்த்து வைப்பதாகவும் ஐதீகம்.
ஆன்மீக ரீதியாகவும் ஆடி அமாவாசை என்பது மிகவும் சக்தி வாய்ந்த மாதமாகும். இந்த நாளில் விரதம் இருந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தலையெழுத்தே மாறும் என்பது நம்பிக்கை.
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்று இவ்விருகிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷண சக்தியும் மிக அதிகமாக இருக்கும். எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல. ஆனால் புதிய காரியங்களைத் துவங்குதல் கூடாது.
செய்ய வேண்டியது:
ஆடி அமாவாசை அன்று அதிகாலை எழுந்து நதிகள், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி அருகில் தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கான பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும் .
ஆற்றங்கரை கடற்கரை கோயில் குளக்கரைகளில் தர்ப்பை புல், தண்ணீர் மற்றும் சமைத்த சாத உருண்டைகளை (பிண்டம்) முன்னோர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இந்த பொருட்களை கொடுக்கும் போது இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மந்திரங்கள் சொல்ல வேண்டும். இதுவே ஆடி அமாவாசையின் முக்கியத்துவம். வீட்டிலும் செய்யலாம்.
முன்னோர்களுக்கு பகல் நேரத்தில் படையல் இட்டு வழிபடும்போது கண்டிப்பாக காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். ஏழைகளுக்கும், அந்தணர்களுக்கும் உணவு, உடை, காலணி போன்றவற்றை தானம் அளிக்கலாம் .
பசு மாட்டிற்கு அகத்திக்கீரை சாப்பிட கொடுக்கலாம். அன்று மாலை நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று நம்முடைய முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அவர்களுக்காக விளக்கேற்றி வைக்க வேண்டும். இது அவர்களுக்கு மோட்சத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
நாம் செய்யும் வழிபாடுகளால் பித்ருலோகத்தில் பலவிதமான துன்பங்களை நம்முடைய முன்னோர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால் நாம் செய்யும் வழிபாடுகளால் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். இது நம்முடைய சந்ததிகளுக்கு புண்ணியத்தை தரும். சுன்று பாகற்காய் நூறு வகை காய்களுக்கும், பிரண்டை 300 வகை காய்களுக்கும், பலாக்காய் 600 வகை காய்களுக்கும் சமம் என்பார்கள் . ஆக இந்த மூன்று காய்களையும் அன்று சமையலில் சேர்த்துக் கொள்ளலாம் . வாழைக்காயும்சேர்ப்பது அவசியம்.
அன்று குல தெய்வத்தையும் மனதார வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
செய்யக் கூடாதது:
பிறரிடம் கடன் வாங்கக் கூடாது.
பிறருக்கு கொடுக்கவும் கூடாது.
அன்று வாசலில், பூஜை அறைகளிலும் கோலம் போடக்கூடாது.
காகத்திற்கு எச்சில் படாமல் உணவு வைக்க வேண்டும்.
அன்று தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
அசைவ உணவு சமைக்க கூடாது. சாப்பிடவும் கூடாது.
காகத்திற்கு சாதம் வைத்த பிறகுதான் பித்ருக்களுக்கு படையல் இடவேண்டும். அதற்கு முன்பாக படையல் இடக்கூடாது.
உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். கோபம் ,பதற்றம் இல்லாமல் முடிந்தால் மௌனமாக இருக்கவும்.
எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து தர்ப்பணம் கொடுப்பதோடு, அன்னதானம் செய்தால் சிறந்த பலனை தரும். நம் சந்ததிகளுக்கும் நல்லது நடக்கும்.