

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது, வெண்ணெய் திருடும் குட்டிக் கண்ணன், நண்பர்களுடன் விளையாடும் கண்ணன், கோபியர்களைச் சீண்டும் கண்ணன் எனப் பல அழகான காட்சிகள்தான். இவை வெறும் புராணக் குறும்புகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.
ஆனால், குழந்தை கிருஷ்ணரின் இந்தச் செயல்களை குழந்தை வளர்ச்சி மற்றும் உளவியல் பார்வையில் சிந்தித்துப் பார்த்தால், அவற்றுக்குள் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருப்பதை உணர முடியும்.
குழந்தைகளின் இயல்பான குணங்களில் ஒன்று ஆர்வம். சுற்றியிருப்பதைத் தொட்டு, பார்த்து, சுவைத்து, கேள்வி கேட்டு அறிந்துகொள்ளும் ஆர்வம்தான் அவர்களின் கற்றலுக்கான அடிப்படை. கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடுவது போன்ற கதைகள், புதிய விஷயங்களை அனுபவித்துப் பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தை நினைவூட்டுகின்றன.
அதேபோல், நண்பர்களுடன் சேர்ந்து குறும்பு செய்வது சமூக வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் பார்க்கலாம். குழந்தைகள் விளையாடும்போது பகிர்ந்துகொள்வது, மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்வது போன்ற பல திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.
கண்ணனின் பால்யக் கதைகளில் நண்பர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம், குழந்தைப் பருவத்தில் நட்பின் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.
குறும்புகள் குழந்தைகளின் படைப்பாற்றலுடனும் தொடர்புடையவை. பெரியவர்கள் விதிக்கும் வழக்கமான எல்லைகளுக்குள் மட்டுமே சிந்திக்காமல், தங்களுக்குத் தோன்றியதை முயற்சி செய்து பார்ப்பதன் மூலம் குழந்தைகள் புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள்.
கண்ணன் எளிதில் அடைய முடியாத இடத்தில் இருக்கும் வெண்ணெயை எடுப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடுவது போன்ற கதைகள், பிரச்னைக்குத் தீர்வு காணும் திறனை நினைவுபடுத்துகின்றன. எனினும், குழந்தைகளின் எல்லா குறும்புகளையும் நல்லவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் பொருள்.
தவறான செயல் எது, ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை எது என்பதை அன்புடன் விளக்குவதும் பெற்றோரின் முக்கியப் பொறுப்பு. குழந்தையின் ஆர்வத்தை அடக்காமல், சரியான பாதையில் வழிநடத்துவதே ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளின் குறும்புகளுக்கு பெரியவர்கள் தரும் பதிலும் முக்கியமானது.
ஒவ்வொரு தவறுக்கும் கோபப்படுவதற்குப் பதிலாக, அந்தச் செயலைச் செய்ய குழந்தை ஏன் முயன்றது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் கவனத்தைப் பெறுவதற்காகவும், சில நேரங்களில் சலிப்பைத் தவிர்ப்பதற்காகவும் குழந்தைகள் குறும்புகளில் ஈடுபடலாம்.
அவர்களுடன் பேசுவது, கேள்விகளைக் கேட்பது, விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குவது போன்றவை குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும். கண்ணனின் பால்யக் கதைகளில் யசோதையின் பங்கு இதற்கு அழகான உதாரணமாகத் தோன்றுகிறது. கண்ணன் குறும்பு செய்தாலும், அவனை அன்புடன் அணுகும் தாயாக யசோதை சித்தரிக்கப்படுகிறார்.
அன்பும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்பதையும் இந்தக் கதைகள் நினைவூட்டுகின்றன. குழந்தைக்கு சுதந்திரம் கொடுப்பதோடு, அதன் செயல்களுக்கு பொறுப்புணர்வையும் கற்றுக்கொடுப்பது அவசியம்.
இன்றைய குழந்தைகள் திரை நேரம், போட்டி, பாடப்பளு போன்ற பல்வேறு சூழல்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் இயல்பான விளையாட்டு நேரத்தையும் கற்பனை உலகத்தையும் பாதுகாப்பது முக்கியம். கண்ணனின் குறும்புகள், குழந்தைகள் சிரித்து விளையாடுவதற்கும், கேள்வி கேட்பதற்கும், தங்கள் உலகத்தை ஆராய்வதற்கும் இடம் தேவை என்பதை நினைவூட்டுகின்றன.
அந்த சுதந்திரத்தில்தான் அவர்களின் தனித்தன்மை மலர்கிறது; அதைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்களால் நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க முடியும்.
குட்டிக் கண்ணனின் குறும்புகளில் மற்றொரு முக்கியமான அம்சம், பெரியவர்களின் உலகத்தையும் குழந்தைகளின் உலகத்தையும் இணைக்கும் பாலமாக இருப்பது. வெண்ணெய் திருடியதாக புகார் வரும் காட்சிகள் குழந்தையின் செயல்களைப் பற்றி பெரியவர்கள் பேசுவதையும், அதற்கு குழந்தை தன்னுடைய விதத்தில் பதில் சொல்வதையும் காட்டுகின்றன.
இன்றைய உளவியலும் குழந்தையிடம் பேசும்போது அவர்களின் வயதுக்கும் புரிதலுக்கும் ஏற்ற மொழியைப் பயன்படுத்த வேண்டும் என வலியிறுத்துகிறது.
குழந்தை தவறு செய்தால் உடனடியாக தண்டிப்பதை விட அந்த செயல் ஏன் தவறு என்பதை விளக்குவது நல்ல பழக்கங்களை உருவாக்க உதவும். அன்புடன் அழைக்கப்படும் எல்லைகள் குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் தன்னம்பிக்கையையும் அளிக்கின்றன.
மேலும் கண்ணனின் கதைகளில் காணப்படும் விளையாட்டு உணர்வு இன்றைய குழந்தைகளுக்கும் மிகவும் தேவையான ஒன்று. விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது சிந்தனை, கற்பனை, உடல் இயக்கம், மொழித்திறன், சமூக உறவு ஆகியவற்றை வளர்க்கும் இயல்பான கற்றல் முறை ஆகும்.
எனவே குழந்தைகளின் ஒவ்வொரு குறும்பையும் தொந்தரவாகப் பார்க்காமல் அதன் பின்னால் இருக்கும் தேவையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கண்ணனின் குறும்புகள் நமக்கு சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தருவதோடு, குழந்தைப் பருவத்தின் இயல்பையும் புரிந்துகொள்ளச் செய்கின்றன. ஆர்வம், நட்பு, படைப்பாற்றல், துணிச்சல் ஆகியவற்றை வளர்க்கும் வாய்ப்பாக குழந்தைகளின் குறும்புகளைப் பார்க்கலாம்.
குழந்தையின் ஒவ்வொரு குறும்புக்குப் பின்னாலும் உள்ள குழந்தை உளவியல் தேவையைப் புரிந்து கொண்டு, தண்டிக்காமல் அன்போடு வழிநடத்தும் தெளிவை பெற்றோர் பெறுவார்கள்.