

நிம்மதி இல்லையென்று புலம்பும் அனைவருக்கும் இந்த கட்டுரை வழிகாட்டியாகிறது. பிறரை திருப்திப்படுத்தும் வாழ்க்கையிலிருந்து விலகி, நமக்காக வாழ வேண்டும் என்பதைக் கூறுகிறது. இருப்பதிலே திருப்தி, எதிர்பார்ப்பில்லாத அன்பு, சிறு உதவிகள், நேர்மறை சிந்தனை, தெளிவான லட்சியம், தோல்விகளில் இருந்து பாடம் கற்றல் ஆகியவை நிம்மதியை நம்மைத் தேடி வரச் செய்கின்றன.
நிம்மதி இல்லேன்னு புலம்பறீங்களா? இந்த யோசனைகள் உங்களுக்குத்தான்.
பணக்காரனோ ஏழையோ ஒவ்வொரு மனிதனும் நிம்மதியைத் தேடித்தான் ஓடுகிறோம். என்ன செய்தால் நிம்மதியாக வாழலாம் என்ற தேடலில் வாழ்வின் பெரும்பகுதி கழிகிறது. இதுதான் நமக்கு நிம்மதியான வாழ்க்கை தரக்கூடியது என்பதைப் புரிந்துகொள்ள நாம் தரும் விலை அதிகம்தான்.
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து, அது கிடைக்காமல் ஏமாந்து நிம்மதியைத் தொலைக்கிறோம். நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்து கவலைப்பட்டு நிம்மதியை இழக்கிறோம். இப்படி நிம்மதியைத் தேடுவதிலேயே நிறைய நல்ல தருணங்களை இழக்கிறோம்.
சரி, நிம்மதியான வாழ்க்கை வாழ என்ன செய்யலாம்? சில யோசனைகளைக் கடைப்பிடித்தால் நிம்மதியான வாழ்க்கை நம்மைத் தேடி வரும்.
மற்றவர்களுக்காக வாழாமல் நமக்காக வாழவேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்களைத் திருப்திப்படுத்தவே எப்போதும் மெனக்கெடுகிறோம். பிறரிடம் நம்மை நிரூபிப்பதற்காகவே மெனக்கெடுகிறோம்.
இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழப் பழகவேண்டும். நம்மிடம் இல்லாததை, நமக்கு சாத்தியப்படாததை நினைத்து, அதை நோக்கி ஓடிக்கொண்டிருந்தால் நிம்மதி நம்மைவிட்டு ஓடிவிடும்.
உண்மையான அன்புடன் பிறரிடம் பழகுங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு நேர்மறை ஆற்றலை வளர்க்கும். அது நம் மனதை அமைதிப்படுத்தி நிம்மதியைத் தரும்.
மற்றவர்களுக்கு நம்மாலான சின்னச்சின்ன உதவிகளைச் செய்யலாம். நாம் செய்யும் சின்ன நல்ல விஷயம்கூட நமக்கு நிம்மதியைத் தரும்.
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு கவலைப்படுவது கூடவே கூடாது. குறிப்பாக நம்மைவிட ஒருபடி மேலே உள்ளவர்களுடன் ஒப்பிட்டால், நம்மிடம் இல்லாததை மட்டுமே மனம் பட்டியலிடும். அது நிம்மதியைத் திருடிக் கொள்ளும்.
நம் லட்சியம் எது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். அதை அடைவதற்கான முயற்சியில் எப்போதும் ஆர்வமுடன் செயல்படவேண்டும். விடாமல் முயற்சி செய்தால் அதில் முன்னேற்றம் கிடைக்கும். அது நம்மை லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நம் மனம் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும்போது மனம் லேசாக இருக்கும். நிம்மதி கூடவே வரும்.
எப்போதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவேண்டும். நமக்குப் பிடித்த உணவு, உடை, பிரயாணம், நட்பு, பொழுதுபோக்கு என இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டும். கண்டிப்பாக நிம்மதி நம்முடனேயே இருக்கும்.
கடந்தகால இழப்புகள், தவறுகள், ஏமாற்றங்கள் இவற்றிலிருந்து வெளியே வந்துவிடுங்கள். கடந்தவைகளை யோசித்துக் கவலைப்பட்டால் நிகழ்காலம் கடந்து போய்விடும். இந்த நாள் இந்த நிமிடம் ரசித்து வாழ்வோம்.
சின்னச்சின்னத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். அடுத்த முறை அதைத் திருத்தி சிறப்பாகப் பணியாற்றுவோம். தினமும் புதிதாக ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்வோம். இந்த ஆர்வம் நம்மை சுறுசுறுப்பாக வைக்கும். தேவையற்ற சிந்தனைகளை விரட்டிவிடும். நிம்மதிக்கு ஆணிவேரே இதுதானே.
பிறரை மாற்றும் முயற்சியில் காலத்தை வீணடிக்க வேண்டாம். இது நம் நிம்மதியைக் கெடுத்துவிடும். நம்மைச் சுற்றியிருப்பவர்களை நமக்குத் தோதாக மாற்றி விட்டுத்தான் நாம் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் அது நடக்கவே வாய்ப்பில்லை.
யாருக்காகவும் நம் நிம்மதியை இழக்கவேண்டாம். நமக்கான நிம்மதி நம் கையில்தான் இருக்கிறது. யாரும் நமக்குத் தர முடியாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், தேவையற்ற எதிர்பார்ப்புகளையும் ஒப்பீடுகளையும் கடந்து, உங்கள் சொந்த மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் எப்போதும் மன அழுத்தமின்றி லேசான மனதுடன் வாழப் பழகலாம். உங்களின் தினசரி வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் நிலைத்திருக்கும் உன்னத மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.