
நம் மனதினை கட்டுப்படுத்த முடியுமா? முடியாதா? என்பது ஒவ்வொருவர் மனதிலும் பெருங்கேள்வியாக உள்ளது. நம் மனதினை கட்டுப்படுத்த முடிந்தால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் மனதினை எதற்காக கட்டுப்படுத்த வேண்டும்? அனைவரும் சொல்வதால் மனதை கட்டுப்படுத்தினால் பிரச்னைகள் எல்லாம் சரி ஆகும் என்று தவறாக நினைக்கிறோம்.
உங்கள் மனதை அப்படியே விட்டு விடுங்கள். அதை கட்டுப்படுத்த யாராலும் இயலாது. ஒருவர் மனதை கட்டுப்படுத்தி விட்டேன் என்று கூறினால், அதை நீங்கள் நம்பாதீர்கள். மனம் என்பது ஒரு காட்டாற்று வெள்ளம் போல. காட்டாறு ஊற்றாக பிரவாகம் எடுத்து, எங்கெங்கோ செல்லும். மனமும் அப்படித்தான். அது எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்கும். மனதை அதன் வழியில் விட்டுவிட்டு அதை நல்ல விஷயங்கள் நோக்கி நகர்த்தி விடுங்கள்.
நம் மனதினை கட்டுப்படுத்த நினைக்கும் போதுதான், மனம் அதையே நினைத்து ஒரு வித அழுத்தத்திற்கு உள்ளாகிறது. கட்டுப்பாடற்ற மனதின் அழுத்தம் என்பது குறைவு தான். கட்டுப்படுத்த நினைக்கும் போது தான் குக்கரில் உள்ள அழுத்தம் போல அதிகரிக்கிறது.
மனதினை கட்டுப்படுத்துகிறேன் என்று அதை அழுத்தி வைக்க கூடாது. நம் மனதை போன்ற வேகமான, ஆற்றலான, அழகான ஒன்று இந்த உலகிலே கூட இல்லை. அதை கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் கருவியோ, கருத்துக்களோ கூட எதுவும் இல்லை. ஆனால் மனது படும் பாடு என நாம் அத்தனை கவலைகளை சுமக்கிறோம்.
பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் வெளியே செல்லும் போது யாரும் பேசக் கூடாது என்று தான் சொல்லி விட்டு செல்கிறார். ஆனால், வெளியே சென்றதும் எவரும் அடங்காமல் கூச்சல் போட்டுக் கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு பள்ளியிலும் இந்த சூழலில் நீங்கள் அமைதியை தேட முடியாது. ஆனால், ஆசிரியர் தலை தென்பட்டதும் அனைவரும் அமைதியாகி விடுவார்கள். தேர்வு கூடத்தில் யாரும் அமைதியாக இருங்கள் என்று சொல்வதில்லை. மாணவர்கள் அங்கு அமைதியாகவே இருப்பார்கள். இது தான் மனம். எப்போது கட்டுப்பட வேண்டும் என்று அதற்கு தெரியும்.
மனம் ஒரு குரங்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் அந்த குரங்கை கட்டுப்படுத்துவதை விட பழக்கப்படுத்தி வைப்பது தான் நல்லது. அப்படி ஒரு வேளை, நீங்கள் முழு மனதையும் கட்டுப்படுத்தி விட்டீர்கள் என்றால், உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. அதன் பின்னர் உங்களுக்கு இன்பம் துன்பம் எதுவும் இருக்காது. உங்கள் வாழ்வில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. நீங்க ஒரு ஜென் துறவி ஆகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
அதனால் மனதினை அதன் போக்கில் விட்டு மகிழ்ச்சியாகவும் தேவைப்படும் நேரத்தில் அமைதியாக இருக்கவும் கற்றுக் கொண்டாலே போதுமானது.