
நாம் விரும்புவது நமக்குக் கிடைக்க வேண்டும் அல்லது விரும்புவதை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கிறது. இது மிக இயல்பானது. நாம் நினைப்பது நிறைவேற திட்டமிடுதல், அதை நடைமுறைப் படுத்தக் கடும் உழைப்பு, தோல்வியில் சோர்ந்து விடாத தொடர் முயற்சி, ஒவ்வொரு நாளும் அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல், நம்மை வீழ்த்தும் தீய எண்ணங்களில் இருந்து விலகி இருத்தல் இப்படிப் பட்டியல் இடலாம். ஆனால், இவை அனைத்தையும் விட மிக முக்கியம் உள்ளது என்கிறது திருக்குறள்,
உள்ளியது எல்லாம் உடன் எய்தும்; உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
கோபம் என்னும் ஒன்று உன் மனத்துக்குள்கூட இருக்கக்கூடாது. 'மனத்தில் கோபத்துக்கு இடம் கொடுக்காமல் இருந்தால்தான், நீ விரும்புபவை நிறைவேறும்' என்பது திருவள்ளுவரின் உறுதியான கருத்து. செயல்களில், சொற்களில் மட்டுமல்ல, மனத்தில் கூட கோபம் இருக்கக்கூடாது என்னும் அவனது அறிவுரை மிக ஆழமானது. அப்படியிருந்தால்தான், 'உள்ளியது உடனே நிறைவேறும்...' என்கிறார்.
வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், சிலர் மீதேனும் மனத்துக்குள் நமக்குக் கோபம் இருக்கத்தான் தான் செய்கிறது. மனத்துக்குள்ளேயே தங்கி இருப்பதால், சரியான வாய்ப்பு கிடைத்தால் பீறிட்டு வெளியே வந்துவிடுகிறது. மனத்துக்குள்ளும் கோபம் தங்காமல் பார்த்துக்கொண்டால், வாழ்க்கை இனிமையாகத்தான் இருக்கும்.
நூறு ஆண்டுகள் நிறைந்தது ஒருவருக்கு. அந்த வயதிலும் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு விழா எடுத்தார்கள். அவரது நலம் நிறைந்த வாழ்க்கை குறித்து பேட்டி எடுக்க வந்திருந்த ஓர் இளைஞன், அவரிடம் அதற்கான காரணம் கேட்டான். பெரியவர் சொன்னார்,
'நான் எதற்கும் யாரிடமும் கோபப்படுவதே இல்லை. ஒப்புக்கொள்ள முடியாத மாற்றுக் கருத்தைச் சொன்னாலும், கோபப்படுவதில்லை, அவரிடம், 'நண்பரே; நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்று சொல்லி, வாதத்தைத் தவிர்த்து விடுவேன்' என்றார்.
ஆனால், வந்த இளைஞனுக்கு அந்த பதிலில் நிறைவு ஏற்படவில்லை. 'இல்லையில்லை... நூறு ஆண்டுகள் வாழ, வேறு காரணங்கள் இருக்க வேண்டும்' என்றான்.
உடனே பெரியவர் சொன்னார், 'நண்பரே, நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!"
சற்றே யோசித்துப் பாருங்கள். எப்போதுமே, மாற்றுக் கருத்துக்களால் சினம் உண்டாவதில்லை. அவை தொடர்பான சொற்களும், செயல்களுமே சினத்தை வளர்த்தெடுக்கின்றன.
சினத்துக்கு வள்ளுவன் ஒரு பட்டம் கொடுத்திருக்கிறான். என்ன தெரியுமா? 'சேர்ந்தாரைக் கொல்லி!" ஆகவே. யாரிடம் கோபம் இருக்கிறதோ அவரையே அந்த சினம் அழிக்கிறது. நாம் சினத்துக்கு ஆட்பட்டு விட்டால் சொற்கள் நம் வாய்க்கு ஆட்படுவதில்லை; செயல்கள் நம் மனதுக்கு ஆட்படுவதில்லை. ஆகவே, சினத்தை சிதைத்து விட்டு நிம்மதியாக வாழ்வோம்.