

எது வந்தாலும் கலங்காமல், என்ன நடந்தாலும் தளராமல் எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன்தான் நெஞ்சுறுதி படைத்தவன் என்று கூறுகின்றோம்.
அறிஞர் அண்ணா அவர்கள் அப்படிப்பட்ட நெஞ்சம் படைத்தவர் களையே 'எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள்' என்று கூறினார்.
நெஞ்சத்தில் உறுதியும், நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நடையும் வேண்டுமென்று பாரதியார் பாடினார்.
எதிரிக்காகப் பயந்து குகையினில் பதுங்கிய இராபர்ட் புரூசு என்ற மன்னன் சிலந்தி ஒன்று, வலையைப் பின்னிக் கொண்டிருக்கையில் அதனைப் பலமுறை தட்டியும் அதற்காகச் சளைக்காமல் அது கட்டி முடித்ததைப் பார்த்து வெளியே வந்து 'அற்பமான ஒரு சிறு பூச்சிக்கு இந்த மனவலிமை உள்ளபோது நாம் ஏன் தயங்கவேண்டும்' என்று புதுத் தெம்புடனும் மனஉறுதியுடனும் சென்று பகைவரை வெற்றி கண்டான்.
பதினாறு முறை இந்திய நாட்டின் மீது படையெடுத்து இந்தியாவின் செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்தும் ஆவல் தீராத கஜினி முகமது பதினேழாவது முறையும் படையெடுத்து வெற்றி கண்டான்.
இவர்கள் எல்லாம் சண்டையிடுவதற்கும், கொள்ளையடிப் பதற்கும் மனவலிமை படைத்திருந்தபோது வாழ்க்கையில் நல்ல காரியங்களை செய்வதற்கும், நினைப்பதற்கும் சில தடங்கல்கள், ஏமாற்றங்கள்,இழப்புகள் போன்றவற்றை வாழ்க்கையில் ஏன் நாம் தாங்கிக் கொள்ளக்கூடாது?
காதலில் தோல்வியுற்றேன் என்று வாழ்க்கையை வெறுக்கும் ஆண், பெண் இருபாலாருக்கும், தேர்வில் தோல்வியுற்றேன் என்று மனம் தளரும் மாணவ, மாணவிகளுக்கும், வேலை கிடைக்கவில்லையே என்று விரக்தியடையும் பட்டதாரி இளைஞர்களுக்கும், திருமணம் ஆகாமலேயே காலம் முழுவதும் கன்னியாக இருந்து விடுவோம் என்று மனம் உருகும் பருவப் பெண்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்.
"தானா விழாத பழத்தைத் தடியால் அடித்தாவது கீழே விழச் செய்ய வேண்டும். முயற்சிக்கு என்றுமே பயன் உண்டு என்பதை மட்டும் எப்பொழுதும் மறந்து விடவேண்டாம்."
ஒருவன் கண்ணுக்கு வாழ்க்கையெனும் பாதை தடங்கல் இல்லாமல் நீண்ட தூரம் பார்வைக்கெட்டிய மாத்திரத்தில் சுலபமாகக் காட்சியளிக்கின்றது. மற்றவன் பார்வைக்கு அதே பாதை கல்லும், முள்ளும், கொடிகளும் அடர்ந்ததாகக் காணப்படுகிறது.
அதைக் கண்டு பயப்படாமல் செடி, கொடிகளை வாள்கொண்டு வீசியெறிந்து, சுத்தப்படுத்தி, பாதையைக் கடந்து செல்வதுதானே மன வலிமை படைத்தவர்களுக்கு அழகு.
சோதனையும், வேதனையும் தாண்டி வெற்றியடைவதுதானே சாதனை புரிந்த வாழ்வாகும். இப்படிப்பட்ட வாழ்க்கைதான் உயர்ந்த வாழ்வு என அறியவேண்டும்.
நேர்மையாக, நாணயமாக, மற்றவர்கள் மதிக்கத்தக்க வாழ்க்கை நடத்த வேண்டுமென நினைத்து வெளியே கிளம்பி விட்டால் இந்தச் சமூகத்தில் உங்களுக்கென ஒரு வேலை இல்லாமலா போய்விடும்?
'யானை மேய்ற காட்டுல ஆட்டிக்குட்டிக்காக தழையில்ல' என்ற பழமொழியை உணர்ந்து பார்த்தல் நன்மை பயக்கும்.
அரசாங்க வேலைதான் வேண்டும் என நினைத்து அதற்காக ஆடு, மாடு, வீடு முதலானவற்றை விற்று அல்லது அடமானம் வைத்துப் படிப்பதைவிடப் பத்தாயிரம் மூலதனம் வைத்து சொந்தமாக ஏதேனும் தொழில் ஆரம்பித்தால் நீங்கள் பத்துப் பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளி ஆகலாம்.
நீங்கள் வாழப் பிறந்தவர்கள், இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்கள்.
மனத்தினில் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
தோல்வி என்பது ஒருவன் செய்துவரும் முயற்சியை விட்டுவிட வேண்டுமென்று கூறுவதில்லை. அதற்கு மாறாக இன்னும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பதை அது காட்டுகிறது.
ஆமை தன் ஓட்டிலிருந்து தலையை வெளியே நீட்டும் போதுதான் அது இருக்கும் இடத்தை விட்டு முன்னுக்கு நகர ஆரம்பிக்கிறது . இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை நம் வசப்படும்.