
"வயிற்றுக்காக மனிதன் அங்கே கயிற்றில் ஆடுகிறான் பாரு "என்ற பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். நம் ஊரில் நிறைய சர்க்கஸ் மற்றும் தெருக்களில் நடக்கும் கழைக்கூத்தை கண்டு ரசித்திருப்போம். அந்த சாகசத்தை சில நேரம் வயிற்று பிழைப்புக்காக என்று நினைத்தது உண்டு. மேலும் சாதனைக்காகவே சாகசம் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் சாகசம் செய்து காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதே சமயம் உயிருக்கு பயப்படவும் கூடாது. உயிரை பணயம் வைத்துதான் அப்படி ஜெயிக்க முடியும். அப்படிப்பட்டவர்களால்தான் யாரும் சாதிக்க முடியாத சாகசங்களை செய்து காட்டவும் முடியும்.
பிரேசில் நாட்டை சார்ந்த சாகச கலைஞர்களான மூவர் சேர்ந்து துணிந்து சாகசங்களை செய்து காட்டி பாராட்டுகளை அள்ளி குவித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு புதிதாக ஏதாவது ஒரு சாகசம் செய்து காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இதற்காக பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற முரோடோ கண்டால்கோ மலைத்தொடரை தேர்வு செய்தனர்.
ரியோ டி ஜெனீரோ நகருக்கும் மோரோடோ கண்டால்கோ மலைத் தொடருக்கும் இடையே அந்தரத்தில் 200 மீட்டர் நீளம் உள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது நடக்க திட்டமிட்டனர். அதுபோல் ஒரு நாள் மூவரும் கயிற்றின் மீது சர்வசாதாரணமாக நடக்க தொடங்கினார்கள். சில நிமிடங்கள் கயிற்றின் மீது நடந்தும், சில நிமிடங்கள் கயிற்றில் தொங்கியபடி ஓய்வெடுத்தும் நிதானமாக அந்த 200 மீட்டர் தொலைவில் நடந்தனர். நூலிழை தப்பினால் மரணம் என்றாலும் சாகசத்தை சாதித்தே காட்ட வேண்டும் என்ற துணிச்சலால் இவர்கள் நாலு மணி நேரத்தில் இந்த சாகசத்தை செய்து முடித்தார்கள். இதை கீழிருந்து பார்த்தவர்களுக்கு சொல்ல முடியாத வியப்பு.
இப்படி இவர்கள் அந்தரத்தில் நடந்து சாகசம் செய்ததை அதை நேரில் கண்டவர்களால் மறக்கவே முடியாது. ஆனால் இதை படித்த பின்பு நம்மூரில் சர்க்கஸ் மற்றும் தெருக்களில் இதுபோன்ற தொழில்களை செய்பவர்களை கண்டால் அதை தொழில் என்று எண்ணாமல் அதையும் சாகசம் என்றே எண்ண தோன்றியது.
இதுபோன்ற நிகழ்வுகள்தான், பல்வேறு சிந்தனைகளை தூண்டிவிடுகிறது. ஒருவன் நாட்டை காக்க உயிரைக் கொன்றால் அவனை வீரன் என்று புகழ்கிறோம். அது நாட்டுக்கு தேவையானது . பட்டம் பதவி கொடுத்து அவனின் புகழை உயர்த்துகிறோம். அது தனி மனிதனின் சாகசம். அதையே ஒருவன் குரூரமாக நாட்டில் ஒருவனை துன்புறுத்தி கொன்றால் அவனை கொலைகாரன் என்று குற்றம் சாற்றுகிறோம். அது நாட்டுக்கு தீங்கானது. நடத்தைக்கு கேடானது. இப்படிதான் சாகசமும் தொழிலும் மாறுபாடு அடைகிறது.
செயல் ஒன்றுதான் என்றாலும் அதன் விளைவுதான் அதனை தீர்மானிக்கிறது. இப்படித்தான் இந்த கயிறின் மேல் நடப்பதும். அதை ஒரு தொழிலாக செய்தால் தினக்கூலியாக பார்க்கிறோம். அதையே இன்னும் சிறப்பித்து செய்யும்பொழுது சாகசமாக மாறிவிடுகிறது.
கயிற்றின் மேல் நடப்பது அது எவ்வளவு தொலைவில் நடந்தாலும் அவரவரின் மனப்பக்குவத்தை பொறுத்ததே .அவர்களின் பயிற்சியும், முயற்சியும் உடல் உழைப்பும்தான் அதை தீர்மானித்து சிறப்பிக்கிறது.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் போல் அவர்கள் செய்த பயிற்சியின் அளவே அது தொழிலாகவும் இருந்து விடுவது உண்டு. சாகசமாகவும் மாறிவிடுவதுண்டு. இரண்டுக்கும் வேண்டியது துணிச்சல் ஒன்றுதான். ஆதலால் துணிச்சலை கை கொண்டால் அது எந்த சாகசத்துக்கும் துணை போகும்.
துணிச்சல் என்பது
காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல;
புயலே அடித்தாலும்
அசையாமல் நிலையாக
நிற்கும்
இமய மலை போன்றது!
நீர் இருக்கும் வரை வேர்கள் ஓய்வதில்லை;
மனதில் துணிச்சல்
இருக்கும் வரை
மனிதன் தோற்பதில்லை. என்பதை நினைவில் கொள்வோம் பரிட்சையில் இருந்து வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்!