
பொய்யை சொல்லவும் நாம் தயங்குவது இல்லை; ஏற்றுக் கொள்வதிலும் தயக்கம் இல்லை. ஆனால் உண்மையை பேசவும் ஏற்றுக் கொள்ளவும் தயங்குகிறோம்.
இனிமையான பொய் - ஆம், பலர் பொய் சொல்வதில் பேரின்பம் அடைகிறார்கள். அன்றாட வாழ்க்கையிலேயே உதாரணத்திற்கு எடுத்து கொண்டால் நம்மிடம் யாராவது எதாவது ஆலோசனையோ அல்லது உதவி கேட்டாலோ ஒரு சில பேர் வாய் கூசாமல் எனக்கு எதுவும் தெரியாது; என்னிடம் எதுவுமில்லை; நான் வீட்டிலேயே இல்லை என்று பலவிதமாக பொய் கூறுவார்கள். கூறிவிட்டு மனதிற்குள் சந்தோஷப்படுவார்கள். இவர்களுக்கு பயம்; தெரியும் என்றோ அல்லது இருக்கிறது என்று சொன்னாலோ இதைப் போல் அடிக்கடி கேட்பார்களோ என்று. ஆகவே தப்பித்து கொள்வதற்காக பொய்யை சொல்லி விட்டு நிம்மதியாக இருப்பார்கள். ஆனால், இந்த பொய்யின் விளைவு பின்னால் கசப்பாக இருக்கும்.
ஒருவர் நம்மை பொய்யாக புகழும் போது நமக்கு இனிமையாக இருக்கிறது; ஆனால் அவர் நம்மை பற்றி நமக்கு பின்னால் அடுத்தவர்களிடம் என்ன கூறி இருக்கிறார் என்பது தெரிய வந்தால் அது கசப்பாக இருக்கும். இதையே அவர் உங்களுக்கு நேராக உண்மையை கூறினால் அவ்வளவுதான், பெரும் பிரச்சினை ஆகி விடும்.
பொய்யை சொல்லவும் நாம் தயங்குவது இல்லை; ஏற்றுக் கொள்வதிலும் தயக்கம் இல்லை. ஆனால் உண்மையை பேசவும் ஏற்றுக் கொள்ளவும் தயங்குகிறோம்.
பொய்க்கு மேல் பொய் கூறுவது அடுக்கடுக்காக ஸ்வீட் சாப்பிடுவதற்கு இணையாகும். ஸ்வீட் சாப்பிட சாப்பிட இனிப்பாக இருக்கும் ஆனால் பின் விளைவோ விபரீதத்தில் முடியும். அதைப் போலத் தான் பொய்யும்.
உண்மையை பொறுத்தவரை கசப்பான பாகற்காயை உண்பதற்கு இணையாகும். பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருக்கும் ஆனால் அதன் விளைவோ அற்புதம். உண்மையை கூறுவதற்கும், ஏற்றுக் கொள்ளவதற்கும் நம்மிடம் தைரியம் இருப்பதில்லை.
எப்படி நிறைய பேருக்கு பாகற்காய் பிடிக்காதோ அதைப் போல் உண்மையையும் பிடிக்காமல் போய் விட்டது.
தற்போதைய சூழ்நிலையில் பொய் சொல்பவர்களைத் தான் இந்த உலகம் அதிகமாக நம்புகிறது. காரணம், அவர்கள் போடும் வேஷம், உண்மை பேசுபவனுக்கு வேஷம் போடத் தெரியாது. பொய் சொல்லி காக்காபிடித்து வாழ்பவர்கள் மத்தியில் உண்மையைச் சொல்லி தடுமாறுபவர்கள் ஏராளம். ஆனால், உண்மை தடுமாறினாலும் தடம் புரளாது.
ஒரு உண்மையை மறைக்க ஒரு பொய் போதுமானது. ஆனால் ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்யை கூற வேண்டி இருக்கும்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை என்ற பழமொழியை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு வேடிக்கை! இன்றைய சூழ்நிலையில் போஜனத்திற்காக சில பேர் பொய் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகுகிறார்கள்.
சில சந்தர்ப்பங்களில் பொய் கூறினால் தவறு இல்லை; உண்மையை கூறினால் ஒருவரின் உயிருக்கு ஆபத்து வரும் இல்லயென்றால் அளவுக்கு மீறிய பிரச்சினை உண்டாகும் என்றால், அந்த நேரத்தில் பொய் கூறலாம். ஆனால் அதற்காக அதையே வாடிக்கையாக வைத்து கொள்ளக் கூடாது.
உண்மை கசந்தாலும் இனிப்பு தான்; ஆனால் பொய் இனிப்பாகவே இருந்தாலும் கசப்பு தான்!