
குழந்தைக்கு பேச வரும் முன்பே வரும் பல ஒலிகளில் ம்மா, ப்பா என்பவை அதன் நாக்கின் சுழற்சியை பொறுத்து உண்டாகும். சிசு தாயைத்தான் முதலில் பார்க்கிறது. அவளுடன்தான் பழகுகிறது. பேசத் தொடங்குகிறது. அதனால் இந்த ஒலி எளிதாக வருகிறது. நிபந்தனை அற்ற அன்பு மிகவும் கடினமானது. அது எந்த விதமான எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் முளைக்கும். அப்படிப்பட்ட அன்பு நிறைந்தவர்தான் தாய்.
உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இந்த "ம்" சத்தத்துடன்தான் தாயைக் குறிக்கும் சொல் ஏற்பட்டுள்ளது. மா, மம்மா, மாமா, மாதா என்று பலவற்றை உதாரணமாக சொல்லலாம். இந்தியில் மா, ஐஸ்லாந்தில் மம்மா, பஞ்சாபியில் மாய், உருதில் அம்மீ, வியட்நாமில் மீ, பிரேசிலில் மே, தமிழில் அம்மா என கிட்டத்தட்ட எல்லா உலக மொழிகளிலும் அம்மாவை குறித்த சொற்கள் உள்ளது. அம்மா என்ற தமிழ்ச்சொல் உலகத்தின் ஏறத்தாழ 30 மொழிகளில் திரிபு நிலையில் உள்ளது. ஸ்பெயின் நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாஸ்கு மொழியில் அம்மா என்ற தமிழ்ச்சொல் "அமா" என்று வழக்கில் இன்றும் உள்ளது.
நம்முடைய ஒவ்வொரு சிரிப்பிலும் அம்மாக்களின் ஏதாவதொரு விட்டுக் கொடுத்தால் நிச்சயம் இருக்கும். அம்மாக்களுக்கு ஆசை கிடையாது என எண்ணுகிறோம். அது உண்மையில்லை. தன் ஆயிரமாயிரம் ஆசைகளை மனதில் புதைத்து நமக்காக வாழும் தேவதைகள் இவர்கள்.
எனக்கு எதற்கு நீங்க சாப்பிடுங்க, இது உனக்கு நல்லா இருக்கும் வாங்கிக்கோ, சாப்டியா, இன்னைக்கு ஆபீஸிலிருந்து வர லேட் ஆகுமா, ஏன் டயர்டா இருக்க என்று ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும் அம்மாக்கள் தன் தேவைகளை மறந்து பிள்ளைகளுக்காக வாழும் உண்மையான அன்பு நெஞ்சங்கள்.
தன் குழந்தைகளுக்காக எதையும் செய்யத் துணியும் அம்மாக்களைத்தான் நாம் பலவீனமானவர்கள் என்று நினைக்கிறோம். அவர்களின் பலவீனம் உண்மையில் அன்பு செலுத்துவது மட்டுமே. ஒரு தாயின் அன்பு என்பது எப்போதும் நிபந்தனையற்றது. நம்மை எப்பொழுதும் எந்த வயதிலும் அக்கறையுடனும், அன்புடனும், பாசத்துடனும் பார்ப்பவள் அவள். நிபந்தனை அற்ற அன்பு என்பது குழந்தைகளுக்கு கேட்டது எல்லாம் வாங்கி தருவதல்ல. தோல்வி என்றால் என்ன என்பதே தெரியாதபடி வளர்ப்பதும் அல்ல. குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும், அரவணைப்பதும், தண்டிப்பதும் அவள் கடமையாகிறது.
சொல்லை விட செயலே சத்தமாக பேசும் என்பது பழமொழி. எனவே ஒவ்வொருவரும் அம்மாவுக்கு வார்த்தைகளால் மட்டுமல்லாமல் செயல்களாலும் நன்றி சொல்லலாம். அன்பாக இருத்தல், அம்மாவின் நலனில் அக்கறை காட்டுதல், இனிமையான வார்த்தைகள் பேசி, முடிந்தால் சின்ன சின்ன பரிசுகளை சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் கொடுத்து அவளை மகிழ்விக்கலாம்.
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயை உருவாக்கினார். தாயின் இயல்பான குணமே சுயநலமின்மைதான். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்காகவே யோசிப்பது, வாழ்வது என்று இருப்பவள்தான் தாய். அம்மா என்பவள் தன் எல்லா குழந்தைகளையும் சமமாக எந்த நிபந்தனையும் இன்றி நேசிப்பவள். நம் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுபவள். ஒவ்வொருவருக்குமே அம்மாவின் அணைப்பில் இருக்கும்வரை உலகமே அழகாகத்தான் தெரியும்.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற உறவு இல்லையென்றால் நாம் அனாதைதான். உலகை ஆள்வது அன்பென்றால் அந்த அன்பையே ஆள்வது தாய் மட்டுமே. அவள் பாசத்திற்கு நிகராக எதையும் கூறமுடியாது.
எந்த அம்மாவும் என் அம்மாவைப்போல் இருக்க முடியாது என்று எல்லோரையும் நினைக்க வைப்பதே இந்த அம்மாக்களின் அதிசயமாகும். இழந்தவர்கள் தேடுவதும், இருப்பவர்கள் தொலைப்பதும் தாயின் அன்பைத்தான். இருக்கும்பொழுதே அவளைக் கொண்டாட தெரிந்து கொள்ளுவோம்!