
வாழ்க்கையில் நாம் பலரைச் சந்தித்திருப்போம். பேச்சாலேயே வாழ்வைக் கெடுத்துக்கொண்டவர்கள் மிகப்பலர். 'அவனுக்கு வாக்கிலே சனி' என்பார்கள். நல்லதைப் பேசியே அறியாதவர்கள் - நயமாகப் பேசிப் பழகாதவர்கள் நச்சுப் பேச்சிலும் நயவஞ்சகப்பேச்சிலும் அமிழ்ந்தவர்கள்.
இன்சொல் இருக்க வன்சொல் கூறுவது, புளித்த காயைத் தின்பதற்குத்தான் ஒப்பாகும் என்பது வள்ளுவர் நமக்கு அறமாக வழங்கும் அறிவுமொழியாகும்.
இன்சொல்லால் ஏற்படும் நன்மைகள் குறித்து 'இனியவை கூறல் என ஓர் அதிகாரத்தையே வைத்தார். செந்நாப்புலவன்.
எனவேதான், 'மனதிலே உறுதிவேண்டும்' என்று அறிவுறுத்திய பாரதிகூட வாக்கில் இனிமை வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.
இன்சொல்லால் உலகில் உயர்வு பெற்றவர்களிலேயே மிகச் சிறந்தவராக விளங்கியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அவர் தம் இன்சொல்லால்தான், மாபெரும் ஓர் இயக்கத்தையே உருவாக்கிக் கட்டிக்காத்தார்.
எதிரிகள் தரும் துயரையும் துச்சமாக எண்ணினார், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என மாற்றாரையும் மதித்தார்.
ஒருமுறை நேரு பண்டிதருக்கும் தனக்கும் உவமிக்கும்போது. 'அவர் கட்டிமுடித்த கோபுரம். நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்' என தன்னைப்பற்றி மிக அடக்கமாகக் கூறிக்கொண்டார்.
அண்ணாவின் இன்சொல்லால் தமிழ் கூறும் நல்லுலகமே மறுமலர்ச்சி பெற்றது.
உலகப் பெரியார் காந்தியடிகள் உட்பட இத்தகைய சான்றோர்கள் எத்தனையோ பேர் இன்சொல்லால் ஈர்த்தவர்கள். இந்த மேதைகள் பணச்சுவை காட்டி, சொற்பொழிவாற்றியவர்கள் அல்ல; பண்புச் சுவை கூட்டி இலட்சியக் கருத்துக்களை இங்கிதமாகப் பொழிந்தவர்கள்.
பேச்சிலே போலித்தன்மை இருக்கக்கூடாது. காரியத்தைக் கெடுக்கின்ற கடுஞ்சொல் கூடாது; அதிகாரத் தொனியோடு கூடிய ஆணவச்சொல் கூடாது.
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுபவனை மனிதன் என்று கூறக்கூடாது. அத்தகையவன் மனிதருள் பதர் போன்றவன் என்கிறார் உலகப் பொதுமறைக்கு உரிமையாளர். உயர்வு பெற வேண்டும், சிறப்புப் பெறவேண்டும் என்று குறிக்கோளை இலக்கை நாடிச் செல்பவர்களின் பேச்சு இனிமையாக இருக்கவேண்டும். பேச்சிலே அன்பு தவழவேண்டும்; இனிமை இழையவேண்டும்.
அப்படிப்பட்ட பேச்சு சுவையாக இருக்கவேண்டும். அதுவும் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் தன்மையில் அமையவேண்டும் ஒவ்வொரு சொல்லும் முத்துக்கள் போல உதிரவேண்டும்.
நம் எதிரிகள் கூட நம் பேச்சின் அணுகுமுறையால் நண்பர்கள் ஆகவேண்டும். எனவே பயனில்லாத வீண்பேச்சுக்களை விலக்க வேண்டும்.
பிறகுக்கு நன்மை வினையும்படி நயம்படப் பேசவேண்டும். நான்குபேர் போற்றும்படி பேசவேண்டும். பேசும்போது முகம் மலர வேண்டும். புன்னகை ஒளிர வேண்டும். பேரன்பு தவழவேண்டும்.
இன்சொல்லை மூலதனமாகக் கொண்டவர்கள்தான் பெரும் தனத்தை குவித்தார்கள். அரும்புகழை ஈட்டினார்கள். எனவே நமது இன்சொல்லே எப்போதும் நடமாடி இதழ்களில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் தவழட்டும்.