
"இன்பங்கள் பெருகிட ஒருவர் அவரது துன்பத்திலிருந்து அறுபட வேண்டும். துன்பங்களை வெற்றி பெறுதலே இன்பத்தின் துவக்கம். அந்த இன்பம் மேலும் மேலும் பெருகிட துன்பம் பக்கமே சிந்தனைகளைச் சிறிதும் சிதறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு இன்பமாய் இருப்பது மற்றொருவருக்கு துன்பமாய் இருக்கக் கூடும். இன்பம் எது? துன்பம் எது? எவ்வாறு கணக்கிடுவது? கோடை காலத்தில் மழை பெய்வது எல்லோருக்கும் இன்பம். சுட்டெரிக்கும் வெயிலில், சற்றே இதமாய் சில்லென்ற காற்றும், நிழலும் கிடைத்தால் வெய்யலில் வெதும்பி வரும் மனிதருக்கு இன்பம்.
அந்த இன்பத்தைக் குறைத்து விடாமல் மேலும் பெருகிட, தேக்கி வைத்த அணை நீரை அவ்வப்போது விடுதல் போன்று, பாதுகாத்தல் என்பது பக்குவப்பட்ட மனிதரிடம் இருக்கும். மனம் என்பது ஒரு மாயக் கண்ணாடி. அது அவ்வப்போது தன் முகத்தை மாறி மாறிக் காட்டிக் கொண்டே இருக்கும். அளவிடற்கரிய அளவிலா செல்வமும், அளவிலா ஆனந்தமும் சமயத்தில் துன்பத்திற்கே வழிவகுக்கும். இருக்கிறதே என்பதற்காகவும், கிடைக்கிறதே என்பதற்காகவும், எல்லையில்லாமல் எல்லையைக் காண முயன்றால் அவை துன்பத்திற்கே அடிகோளும். அளவோடு ஆனந்தித்தால் அவை இன்பத்தைப் பெருக்கிட வழிவகுக்கும்.
இன்பம்... துன்பம்... இரு முனைகளின் எல்லைகள். அவைகள் அவரவர் மனதினால் உடலினால் கணக்கிடப்படுகின்றன. மது, புகை, மனிதருக்கு இன்பமா துன்பமா என கணக்கிட்டால் சிலருக்கு முதலில் இன்பமாகவும், முடிவில் துன்பமாகவும் முடிதல் காணலாம். இவைகளை செயல்படுத்துவதில் பொது நியதி புதைந்து போகலாம்.
பசுமாட்டை நோக்கி வரும் கன்றுக்குட்டி பால் குடித்தலில் இன்பம் காண்கின்றது. பசு மாடு சுரக்கவில்லை என்றாலும் மாட்டுக் காம்பினை இழுத்துச் சப்புவதிலேயே இன்பம் காண்கின்றது. பால் சுரப்பதற்கான தீவனங்கள் அந்த மாட்டிற்கு போதிய அளவு தரப்படவில்லையெனில் அம்மாடு துன்பம் காண்கின்றது.
ஆண்டவனைத் தினந்தோறும் தொழுது வரும் அடியார் இறை தொழுதலில் இன்பம் காண்கின்றார். அதில் இடையூறு ஏற்பட்டால் துன்பம் கொள்கின்றார். இறைக்கின்ற கிணறு சுரக்கின்றன. இறைக்க இறைக்க அந்தக் கிணற்று நீர் சுரக்க சுரக்க இன்பம் பெருகிக்கொண்டே இருக்கின்றது.
இன்பம் துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. அந்த வாழ்க்கை திருமண பந்தத்தில் இணையும் போது வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றது. பூரணத்துவம் என்பது இரு உள்ளங்கள் சார்ந்த வேட்கை. சிலர் திருமணம் செய்தும் குழந்தைப் பேறு இல்லாமல் துன்பத்தில் உலவுகின்றனர். சிலர் இக்காலத்திலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்று துன்பத்தில் உழல்கின்றனர். தவறான பழக்க வழக்கம், தவறான புரிதல் காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தம்பதிகள் இணைந்து வாழ்தல் எல்லோருக்கும் இன்பம். குழந்தைகள் இல்லையெனில் குழந்தைகளைத் தத்தெடுத்து இன்பத்தின் எல்லைகளைத் தொடலாம். குடும்பத்தில், தம்பதிகளுக்குள், உறவுகளுக்குள் புரிதல் என்பது இன்பத்தின் இருப்பிடங்கள்.
மக்கள் சேவையிலே பலரும் இன்பம் கண்டுள்ளனர். மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசு, தந்தைப் பெரியார், புத்தர், மகாவீரர், அன்னைத் தெரசா, பாலம் கல்யாணசுந்தரம் என
தங்களது வாழ்வை மக்கள் சேவையிலேயே பலரும் அர்ப்பணித்து வாழ்வில் இன்பம் கண்டுள்ளனர். அவர்கள் வாழ்வில், எண்ணங்களில், இன்பங்கள் பெருக்கிக் கொண்டே தான் இருந்தன, இருக்கின்றன. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலுமே இன்பத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கின்றன.
மனநிலையை ஒரு முனைப்படுத்த வேண்டும். எல்லா பாதைகளுமே அவரவர் மார்க்கத்தை நோக்கியப் பயணமே என ஒவ்வொரு மதமும் அறிவுறுத்துவது போல் எல்லா இதயங்களின் பயணமும் பிறரை துன்புறுத்தா இன்பங்களை நோக்கி இருத்தல் வேண்டும். வெய்யலில் உருக்கெடுத்து ஓடும் பனி நீர் போல் அவை தெளிவுற இருத்தல் வேண்டும். அறவழியில் இன்பங்கள் பெருகிட வேண்டும். அதனை நல்வழியில் நாம் துய்த்திட வேண்டும்.