
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்குமாமே! ஆம் சரிதான் அதில் இன்பமும் துன்பமும் கலந்து வருவதே ஆண்டவன் கட்டளை.
எல்லாம் அவன் செயல். அந்த வாழ்க்கையில் பல விஷயங்கள் வரும் போகும். நிலைத்திருக்கும் என நினைப்பது நிலைத்திருக்காது. நிலைத்திருக்காது என நினைப்பது நிலைத்துவிடும். இதுவும் இறைவனின் திருவிளையாடலே!
ஓடமும் ஒரு நாள் கப்பலில் ஏறுமே! அதேபோல வாழ்க்கையில் ஒருமுறை வருவது சில விஷயங்களே. அவைகள் போனால் திரும்பாது. அதுதான் தாய், தந்தை, மனைவி, இளமை, முதுமை, இவைகளை நினைத்து அதன் வகையில் நம்மிடம் அதன் சாராம்சங்கள் நிலைத்திருக்கச் செய்வது மனிதனின் கையில்தான் உள்ளது.
தாய் ஸ்தானம் புனிதமானது. அந்த தாய் திரும்ப கிடைக்கமாட்டாள். அந்த தாய்மையானது நமக்கு தன் உதிரத்தை பாலாக்கி நம்மை வளா்க்கிறாள். அந்த தாய்மையின் புனிதம் நினைத்து அவளைப் போற்றுவோம்.
தந்தை நம்முடைய வாழ்வில் மிகப்பொியதூண்.
அன்பு, பாசம், காட்டி நல் ஒழுக்கம் கற்றுக்கொடுத்து நமக்கான முகவரி தருபவர். நமக்கு திரும்ப கிடைப்பாரா, அவரையும் போற்றலாமே!
மனைவி மிகப்பொிய வரப்பிரசாதம். தாய்க்குப்பின் தாரம்தானே!
நம்மை நம்பி வருபவளுடன் நல்ல விதமாக வாழவேண்டாமா?
அன்பு பாசம் காட்டி அரவணைப்போடு நமது வாாிசை சுமப்பவளை நாம் தொலைக்கலாமா, அவளையும் போற்றலாமே!
அடுத்ததாய் வருவது இளமை அதை நேர்மறை சிந்தனையோடு வரவேற்கலாமே! சோ்க்கவேண்டியதை, காலத்தில் சோ்த்து, நல்ல மகன், நல்ல கணவன், நல்ல அப்பா என்ற பெயரோடு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்திட தேவையான சேமிப்பை பெருக்கிட, திட்டமிட்ட வாழ்வோடு இளமையை பயன்படுத்துங்கள். இளமை ஒவ்வொரு நாளும் காலண்டரில் தேதி கிழிப்பதுபோல குறைகிறதே!
ஆக இளமையில் கற்றுக்கொள்ளாத பாடம் நமக்கு முதுமையில் தோல்வியை பரிசளிக்க தயங்காதே! அடுத்து வருவது முதுமை, நாம் எவ்வளவு தடுத்தாலும் நிற்காது. அந்த நேரத்தில் நமக்கு துணையாய் இருப்பவர்களை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது.
முதுமையில் நமக்கு வரவேண்டியது அனுசரிப்பு, பொறுமை, விவேகம், நிதானம் இவைகளே.
இந்த தாரக மந்திரம் நமக்கான இறைவனின் கொடை. முதுமையில் வரக்கூடாதது வறுமை, வரவேண்டியது பொறுமை. ஆக எது எது திரும்ப வரும், வராது என்ற நிலை அறிந்து நிலைப்பாடு தவறாமல் வாழ்வதே சிறப்பு!