
நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறும்பொழுது பிரச்னைகள் பல ரூபங்களில் வரும். அவைகளை தகர்த்து எறிந்து அதைத்தாண்டி செல்வதில்தான் உங்கள் சாமர்த்தியம் மற்றும் மனவலிமை இருக்கிறது.
உங்கள் பிரச்னையை ஒரு பிரார்த்தனை தியானம் ஆக்குங்கள். அதாவது காலையில் உட்கார்ந்து அதைப்பற்றிய சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை நினையுங்கள். பிரச்னையின் பரிமாணத்தை பொறுத்து அதற்கு தீர்வு சுமார் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் கிடைக்கும். உங்கள் ஆழ்மன சக்தி அவ்வளவு மகத்தானது.
ஒரு ஞானியிடம், ஒரு சீடன்" குருவே, இந்த கேள்விக்கு என்ன பதில்?" என்று ஒரு கேள்வியை கேட்டு அதற்கு பதிலை வேண்டினான்.
அதற்கு குரு, கேள்வி எங்கே இருக்கிறதோ, அங்கேதான் பதிலும் இருக்கிறது என்றார். அதைப்போல, உங்கள் பிரச்னைக்கு தீர்வு அதன் அருகிலேயேதான் இருக்கும். தேவை கொஞ்சம் தியானத்தோடு அந்தப் பிரச்னையை அணுகவேண்டும் அவ்வளவுதான்.
உங்கள் பிரச்னையை குறித்து பிறரிடம் ஆலோசனை கேட்பதை விட உங்களிடமே ஆலோசனை கேளுங்கள். உங்கள் ஆழ்மனத்தை விட சிறந்த வலிமையான நண்பன் வெளியே யாரும் கிடையாது .இதை நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு, நம்பிக்கையோடு செயல்படுங்கள்.
தாமஸ் ஆல்வா எடிசன் 999 தடவை தோல்வி கண்டு 1000 ஆவது முறையில்தான் மின்சார பல்பு கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டார். அந்தத் தோல்விகளை அவர் எப்படி எடுத்துக்கொண்டார்? அந்தத் தோல்வியின் மேல் அவரை அறியாமலே அவர் தியானம் செய்தார்.
நீங்கள் உங்கள் ஆழ்மனத்தை விடாது வைராக்கியமாக நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் அணுகினால் அதனால் சும்மா இருக்க முடியாது. அது அதற்கு ஒரு தீர்வு கொடுத்துதான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. இதனால்தான் தோல்விகளே வெற்றியின் தூண்கள் என்ற பழமொழி உண்டாயிற்று.
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். அதாவது உங்கள் ஆழமனத்தின் மேல், உங்கள் உயிர்த்தன்மையின் மேல் நம்பிக்கை வையுங்கள். தன்மேல் நம்பிக்கை வைக்கத் தெரியாதவன் பிறர்மேல் நம்பிக்கை வைக்க முடியாது. இப்படிப்பட்டவர்களால், பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. இப்படிப்பட்டவர்கள் எதிலும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் கலங்குவார்கள், சஞ்சலப்படுவார்கள்.
உங்கள் பிரச்னைகளை முடிந்த மட்டும் உங்கள் பகுத்தறிவைக் கொண்டு உங்கள் முயற்சியில் முழுமையாக உங்கள் சக்தியைக் கொண்டு தீர்க்க முயலுங்கள். முடியவில்லை என்றால் உங்கள் ஆழ்மனத்திடம் விட்டு விட்டு நிம்மதியாக இருங்கள்.
இந்த உலகத்தில் தீராத பிரச்னை என்று எதுவும் இல்லை. ஒரு அறிஞர் காலம்தான் பெரும்பாலான பிரச்னைகளுக்கு மருந்து என்று கூறுகிறார். ஆகவே முடிந்த மட்டும் முயலுங்கள். பிறகு காலத்தின் கையில் ஒப்படையுங்கள். அது பார்த்துக்கொள்ளும்.