"வாழ்க்கை ரொம்ப சின்னதுபா, அனுபவிச்சு வாழணும்" என்று நம்மில் பலரும் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், நிஜமாகவே நாம் அப்படி வாழ்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்பதுதான் உண்மை. சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் சுமார் 30,000 நாட்கள் மட்டுமே. நீங்கள் முப்பது வயதைக் கடந்தவர் என்றால், அதில் 11,000 நாட்களை ஏற்கனவே செலவழித்து விட்டீர்கள். மீதமுள்ள நாட்களை எப்படிப் பயனுள்ள வகையில் செலவிடப் போகிறோம் என்பதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
'நாளைக்குச் செய்யலாம்', 'அப்புறம் பாத்துக்கலாம்' என்ற வார்த்தைகள் நமது வாழ்வின் மிக மோசமான எதிரிகள். காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது மட்டும் முக்கியமல்ல; அந்த நேரத்தை எப்படி அனுபவித்து வாழ்கிறோம் என்பதுதான் மிக மிக முக்கியம். உங்களின் மீதமுள்ள வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுவது என்பதைப் பற்றி சில முக்கியமான விஷயங்களைக் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நேரம் Vs மனித மனம்!
குழந்தைப் பருவத்தில் நாட்கள் மிகவும் மெதுவாக நகர்வது போலவும், வருடங்கள் முடிவதே இல்லை என்பது போலவும் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் பெரியவர்களாகிய பிறகு, நாட்கள் எப்படிப் பறக்கின்றன என்பதே நமக்குத் தெரிவதில்லை. இதற்கு ஒரு முக்கியமான அறிவியல் காரணம் இருக்கிறது. நமது மூளை எப்போதுமே புதிய அனுபவங்களை மட்டுமே மிகவும் ஆழமாகப் பதிவு செய்யும் தன்மையுடையது.
குழந்தைகளாக இருந்தபோது நமக்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஆனால் பெரியவர்களான பிறகு, அதே காலை உணவு, அதே வேலை, அதே பயணம் என நமது வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிவிடுகிறது. மூளை இவற்றைப் பதிவு செய்வதை நிறுத்திவிடுகிறது. இந்த சுழலில் இருந்து வெளியே வர, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது, புதிய மனிதர்களிடம் பேசுவது போன்ற வித்தியாசமான அனுபவங்களை உருவாக்குவது அவசியம். இதன் மூலம் நேரத்தின் அருமையை உங்களால் மீண்டும் முழுமையாக உணர முடியும்.
உறவுகளின் மதிப்பு Vs உணர்வுகள்!
நமது வாழ்க்கையின் மிக முக்கியமான சொத்து நமது வாழ்க்கை நேரம் மற்றும் நாம் சம்பாதித்து வைத்துள்ள உறவுகளும்தான். உறவுகளை ஒரு வங்கிக் கணக்கைப் போலக் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு அன்பான செயலும் ஒரு Deposit, ஒவ்வொரு சிறு தவறுகளும் ஒரு Withdrawal. டெபாசிட் செய்யாமல் பணத்தை எடுக்க முடியாதது போல, நாம் அன்பைக் கொடுக்காமல் எதையும் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
உறவுகளைப் பேணுவதற்கு விலையுயர்ந்த பரிசுகள் தேவை என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஒரு சிறிய குறுஞ்செய்தி, துன்பமான நேரங்களில் உடனிருப்பது போன்ற சிறு செயல்களே உறவுகளை மிகவும் வலுவாக்குகின்றன. அதேபோல, உணர்ச்சிகளைக் கையாள்வதும் மிக முக்கியம். கோபமோ, பயமோ தொண்ணூறு விநாடிகள் மட்டுமே உடலில் தங்கும். அதற்குப் பிறகும் நாம் கோபமாக இருக்கிறோம் என்றால், அது நாம் செய்யும் சுய தேர்வே ஆகும்.
ஆரோக்கியம் Vs கரியர்!
ஆரோக்கியம் என்பது வெறும் நீண்ட ஆயுளைப் பற்றியது மட்டுமல்ல; அதுவே நமது வாழ்க்கையின் உண்மையான சக்தி. தூக்கத்தை ஒருபோதும் தியாகம் செய்யாதீர்கள். அது உங்களின் மூளைக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ரீசார்ஜ். அதேபோல உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்யப் பழகுங்கள். உங்களின் வாழ்க்கை நேரம் எவ்வளவு சிறப்பாக அமைகிறது என்பது உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பொறுத்தே அமையும்.
கரியரைப் பொறுத்தவரை, இருபதுகளில் பணத்தை விட கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும். நீங்கள் கற்கும் ஒவ்வொரு புதிய திறனும் எதிர்காலத்தில் உங்களுக்கு ஒரு லாட்டரி சீட்டாக மாறும். ஒருவேளை நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு எவ்விதமான வளர்ச்சியும் இல்லை என்று தோன்றினால், அதை உடனடியாக விட்டுவிட்டு புதிய வாய்ப்புகளைத் தேடுவதுதான் புத்திசாலித்தனம்.
வாழ்க்கை, நம்மை மீறி நடக்கும் ஒரு விபத்து அல்ல; அது நாம் நமக்காக அழகாக வடிவமைத்துக்கொள்ளும் ஒரு அற்புதமான கலை. எல்லாவற்றிற்கும் சரியாகத் திட்டமிடுவதை விட, சிறிய சிறிய விஷயங்களைச் செயல்படுத்திப் பார்ப்பதே வெற்றிக்கான சிறந்த வழியாகும். பணத்தை விட உங்களின் நேரமே உங்களின் உண்மையான சொத்து என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.