

கோயிலுக்குச் சென்ற ஒருவர், “கடவுளே, நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன். என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டிருந்தார். மற்றொரு நபரும், “என்னுடைய வாழ்க்கை கஷ்டத்திலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; என்னுடைய கஷ்டத்தை நீதான் போக்க வேண்டும்” என்று மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
இப்படி வருபவர்கள் எல்லாரும், “எனக்கு கஷ்டம் இருக்கிறது! கஷ்டம் இருக்கிறது!” என்று கஷ்டத்தைப் பற்றியே இறைவனிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த இறைவன், திடீரென ஒரு ஒளி வடிவத்தில் தோன்றி, “நான்தான் கடவுள் பேசுகிறேன்! நீங்கள் அனைவரும் கஷ்டத்தில் உள்ளீர்கள் என்று என்னிடம் கோரிக்கை வைத்துள்ளீர்கள். யாருக்கெல்லாம் கஷ்டம் இருக்கிறதோ, அவர்கள் எல்லோரும் நாளை காலை 10 மணிக்கு உங்களுடைய கஷ்டங்களை மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு கோயிலுக்கு வாருங்கள்!” என்று கட்டளையிட்டார்.
இந்தச் செய்தி எல்லா மக்களுக்கும் பரப்பப்பட்டது. மறுநாள் காலை 10 மணிக்கு, கடவுளின் கட்டளைப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய கஷ்டங்களை மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு வந்தார்கள். கடவுள் இப்போது, “இந்த அறையில் மின்விளக்கு 10 நிமிடம் அணைக்கப்படும். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் உங்களுடைய கஷ்ட மூட்டைகளை மற்றவர்களோடு மாற்றிக்கொள்ளுங்கள்,” என்று கூறினார்.
மின்விளக்கு அணைக்கப்பட்டது. பத்து நிமிடத்திற்குப் பிறகு விளக்குகள் மீண்டும் போடப்பட்டன. ஆனால், யாரும் தங்களது கஷ்ட மூட்டைகளை மாற்றவில்லை; அப்படியே வைத்திருந்தார்கள் (ஏனெனில் மற்றவர்களின் மூட்டை தங்களை விடப் பெரியதாக இருக்குமோ என்ற பயம்).
பிறகு கடவுள், “அனைவரும் வரிசையாக உங்கள் மூட்டைகளைக் கொண்டு வாருங்கள், எடை போட்டுப் பார்ப்போம்,” என்றார். ஒவ்வொருவரும் மூட்டைகளை எடை போட்டார்கள். ஒருவருக்கு 40 கிலோ, மற்றொருவருக்கு 50 கிலோ, சிலருக்கு 10 கிலோ, சிலருக்கு இரண்டு கிலோ, சிலருக்கு அரை கிலோ, சிலருக்கு 85 கிலோ என வித்தியாசமாக இருந்தது.
வரிசையில் வந்து கொண்டிருக்கும்போது ஒருவர் வெறும் கைகளுடன் வந்து நின்றார். கடவுள் கேட்டார், “உன்னுடைய கஷ்ட மூட்டையைக் கொண்டு வரவில்லையா?” அதற்கு அவர், “இல்லை இறைவா, என்னுடைய கஷ்டங்கள் மூட்டைகளாகக் கட்டி ஒரு லாரியில் வந்து கொண்டிருக்கின்றன!” என்று கூறினார். எல்லோரும் திகைத்துப் போனார்கள்.
மறுபுறம், சிலர் கஷ்ட மூட்டைகளைக் கட்டிக்கொண்டு கோயிலுக்கு வரக்கூட முடியவில்லை; ஏனென்றால், அவர்கள் கால்கள் இல்லாத ஊனமுற்றவர்களாக இருந்தார்கள். சிலருக்குக் கடவுள் சொன்ன செய்தியே போய்ச் சேரவில்லை; ஏனென்றால், அவர்களுக்குக் காதுகள் கேட்காது. இன்னும் சிலரோ கோயிலுக்கு வர வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால், அவர்களுக்குக் கண்கள் தெரியாது.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பாரத்தைச் சுமந்துகொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கஷ்டம் என்பது நமது வாழ்க்கையைப் பண்படுத்த இறைவன் கொடுப்பது, நம்மைப் புண்படுத்த அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லாருடைய வாழ்க்கையும் இறுதிவரை சந்தோஷத்திலேயே செல்லாது; அதேபோல, கஷ்டமே இறுதிவரை நீடிக்காது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சந்தோஷம் வரும்போது மட்டும் அதை மனதார ஏற்கும் நம்மால், கஷ்டம் வரும்போது மட்டும் ஏன் ஏற்க முடியவில்லை? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.