பழமொழி, பொன்மொழி கூட்டணி!

proverbs and quotes
proverbs and quotesImg credit: AI Image
Published on

மனித வாழ்க்கையைச் சிறப்பாக்கி, அவர்கள் இம் மண்ணுலக வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து, வரலாற்றிலும் இடம் பிடிக்க உதவுபவையே பழமொழிகளும், பொன்மொழிகளும்.

மனிதப் பிறவி என்பது அவ்வளவு எளிதானதல்ல. பல பிறவிகளைக் கடந்தே மனிதர்களாகப் பிறக்க முடியுமென்று, மாணிக்கவாசகர் திருவாசகத்தின் சிவ புராணம் மூலம் உணர்த்துகிறார்.

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்!எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!

புல்லில் தொடங்கி தேவர் வரை உயர்ந்தாலும், மனிதராய்ப் பிறந்து மகேசன் அடி நிழலை அடைவதே இன்பமென்கிறார்!

மனிதர்களுக்குத்தானே பழமொழிகளும் பொன்மொழிகளும். பழமொழி என்பது பழங்காலந்தொட்டுப் பரம்பரையாகப் பழக்கத்திலுள்ள அனுபவ உண்மைகளைச் சுருங்கக் கூறும் வாய்மொழி மரபாகும். பொன்மொழிகளோ, ஞானிகள், அறிஞர்கள், தலைவர்கள் கூறியுள்ள ஆழமான கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட அறிவுரைகளாகும்.

நல்ல நெறிகளைக் கூறும் பலவகை நீதி நூல்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், பாமரர்களுக்கும் புரியும் விதமாக, எளிய பேச்சு வழக்குச் சொற்களிலேயே வலம் வருவதால் பழமொழிகளுக்குத் தரணியில் தனி இடமுண்டு.

பொன்மொழிகளோ, எழுத்து பூர்வமாகவும், தத்வார்த்தமாகவும் அமைபவை. இது தேர்தல் சமயம்! கூட்டணிகளை விரைந்து உறுதியாக்க, அரசியல் கட்சிகள் அல்லும் பகலும் அயராது உழைக்கும் நேரம்!

இதையும் படியுங்கள்:
நீங்களும் புத்தராக மாறலாம்... ஓஷோ சொல்லும் அந்த ஒரு ரகசியம்!
proverbs and quotes

கூட்டணி என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தொடர்வது. ஆதாம், ஏவாள் கூட்டணியில், இணைவில்தானே இவ்வுலகம் வளர ஆரம்பித்தது. அதுபோலவே பழமொழி, பொன்மொழி கூட்டணி மனித வாழ்வைச் செம்மையாக்குவது.

சில சமயங்களில், நீதி நூல்களும் கூட்டணியில் சேர்ந்து கொள்ளும். உதாரணமாக ஒரு பாடல்!

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே

கதித்துக் களையின் முதிராதே! தீர்த்து

நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாம் தீரத்

தனிமரம் காடாதல் இல்.

இதில், ’தனிமரம் காடாதல் இல்’ என்பது பழமொழி. இப்படிச் சொன்னால் இன்னும் எளிதாக விளங்கும்; ’தனிமரம் தோப்பாகாது!

சரி! நல்ல வாழ்க்கைக்குப் பயன்படும் சில மொழிகளைப் பார்க்கலாமா!

* பசு தண்ணீரைக் குடித்து விட்டுப் பாலைத் தருகிறது. பாம்பும் தண்ணீரைத்தான் குடிக்கிறது; ஆனால் அது விஷத்தைக் கக்குகிறது. இன்புட் ஒன்றேதான். அவுட்புட் மட்டும் வேறுபட்டு விடுகிறது.

* கோழிக் குஞ்சுகளைத் திருடிய நரியை மன்னித்தால், நாளைக்கே அது ஆட்டைத் தேடி வரும்' என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

* நீங்கள் வளர்க்கும் நாய் உங்களையே பார்த்துக் குரைத்தால், அதற்கு வேறு யாரோ உணவிட ஆரம்பித்ததை உணருங்கள்.'

* கையடக்கச் சுண்டெலி எதிரே நிற்கும் பூனையைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறதென்றால், அருகிலேயே அது நுழைய வளை இருப்பதே காரணமாக இருக்கலாம்.

* வாழைப் பழத்தை விட தேன், இனிப்பும் சுவையும் மிக்கது என்பதை உங்களால் ஒரு குரங்கிடம் கூறி அதனை ஒத்துக் கொள்ள வைக்க முடியாது.

* மலர்ந்திருக்கும் மருவற்ற ரோஜாவின் மீது குறை காண முடியாதவர்கள்தான், அதன் முட்களைக் குறை சொல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
மணிக் கணக்குல செய்ய வேண்டிய வேலைய நிமிஷத்துல முடிக்கலாம் எப்படின்னு பாருங்க!
proverbs and quotes

* முட்டாள்கள் மட்டுமே நீர் நிலையில் ஆழத்தை அறிந்து கொள்ள இரண்டு கால்களையும் உள்ளே விடுவார்கள்.

* திறமையும், மன உந்துதலும் சாதிக்காததை ஒழுக்கம் நிச்சயமாகச் சாதிக்கும்.

பெறற்கரிய பிறவியைப் பெற்றிருக்கிறோம். படித்தும், அனுபவித்தும் அனுபவங்களைக் கற்றிருக்கிறோம். அவற்றை நமது வாழ்க்கைக்கு உரிய விதத்தில் பயன்படுத்துகிறோமா என்பது பெரும் கேள்விக்குறி. அவசரம் மற்றும் ஆத்திரம் காரணமாக அறிந்த பலவற்றையே தேவைப்படும் நேரங்களில் உபயோகிக்காமல் உதவாக்கரை பட்டத்தை எளிதாகப் பெற்று விடுகிறோம்.

இன்றிலிருந்து உறுதி எடுப்போம்!பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்துப் புவியில் உயர்வை அடைவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com