
முல்லைக்கொடி தான் படர்வதற்காக, அருகில் உள்ள கம்பினைத் தேடிச்செல்லும், கம்பி கிடைத்துவிட்டால், அதைப் பற்றிகொண்டும் மேலே படர்ந்து வளரும்.
அதுபோல்தான் நம் வாழ்க்கையும் அமைந்துள்ளது. படித்து விட்டால், யாராவது தேடிவந்து வேலை வாய்ப்புத் தருவார்கள் என வீட்டில் இருந்து விடக்கூடாது.
நம் திறமைக்கேற்ற வேலை எங்கே கிடைக்கும் என நாம்தான் தேடி அலைந்து பார்க்க வேண்டும். அமைதியாய் இருந்தால் எதுவும் கிடைக்காது.
வேலை வாய்ப்பினைத் தேடும்பொழுது எத்தனையோ அனுபவங்கள் உங்களுக்குக் கிடைக்கும். அப்படி கிடைக்கும் அனுபவங்களை, வாழ்வியல் பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
எதற்கும் மனம் கலங்கக் கூடாது. உடனே வேலை கிடைக்கவில்லையே என்று மனம் சோர்ந்து விடாதீர்கள்.
ஒரு நிறுவனத்தின் நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறீர்கள். அனைத்துக்கும் தயார் நிலையில்தான் சென்று இருக்கிறீர்கள். உங்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை என்றால், ஏன் அதற்காக வருத்தப்படவேண்டும்.
உங்களைப் போன்ற திறமைசாலிகளைத் தங்கள் நிறுவனத்தில், பயன்படுத்திக் கொள்ள மறுத்துவிட்ட அவர்கள்தான் பின்னாளில் வருத்தப்பட வேண்டும்.
எனவே, உங்கள் திறமையை முழுவதும் தெரிந்து கொண்டு. உங்களுக்கு வேலை தரக் காத்திருக்கும் மற்றொரு நிறுவனத்திற்கு, அந்த வாய்ப்பை நீங்கள் தரலாம் அல்லவா. அதை மறந்துவிட்டு, வேலை இப்பொழுது கிடைக்கவில்லையே என சோர்ந்து போகாதீர்கள். தொடர்ந்து நல்ல வாய்ப்பினைத் தேடிக்கொண்டே இருங்கள்.
ஏனெனில், உங்களைப் போன்ற திறமைசாலியைத் தங்கள் நிறுவனத்தில் சேர்த்துப் பயன்படுத்திக்கொள்ள அவர்களும் உங்களைத் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். எனவே தேடும் படலம் கிடைக்கும் வரை தளராமல தொடரவேண்டும்.
எப்பொழுதும், எந்த வாய்ப்பும் நம்மைத் தேடிவரும் என நினைக்காதீர்கள். ஒரு இளைஞன் கட்டிடக் கலை வல்லுநர் படிப்பு முடித்துவிட்டார். அவரது படிப்புக்கேற்ற வேலையைத்தேடி அலைந்தார்.
நல்ல வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. நல்ல திறமையானவர்தான். இருந்தும் அவர் திறமையை வெளிக்காட்டவும் ஒரு வாய்ப்பு வேண்டுமல்லவா?
விக்கிரமாதித்தவனைப் போல் அவரும் விடுவதாயில்லை. தொடர்ந்து அலைந்தார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து கட்டிடக் கலை மாதிரிப் படங்கள் நிறைய வரைந்தார்.
ஒரு முறை அவர் இல்லத்திற்கு வந்த அவரது உறவினர். அவர் வரைந்த கட்டிடக் கலை வரை படங்களைப் பார்த்துப் பாராட்டினார்.தான் கட்ட இருக்கும் இல்லத்தை, அவர் படத்தில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அது மாதிரி கட்டக் கூறினார்.
இப்பொழுது புதிய கட்டிடக் கலைஞரின் மேற்பார்வையில், அழகான வீடு அமைந்தது. செலவும் மிகவும் சிக்கனமாகவும் அமைந்திருந்தது. வீட்டின் உரிமையாளர் மகிழ்ந்து பாராட்டினார். அவருக்குத் தகுந்த சன்மானம் வழங்கிக் கெளரவித்தார்.
மேலும் பலரிடமும் கட்டிடம் கட்ட இவரை, சிபாரிசு செய்தார். தொடர்ந்து வேலை வாய்ப்புக் கிடைத்து. இன்று பெரிய கட்டிடக் கலை நிபுணர் ஆகிவிட்டார்.
நம் தேடல் தொடர்ந்தால், உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். மனஉறுதியுடன் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறலாம்.