
பொதுவாக மக்களிடையே பிறரை திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகளில் ‘கழுதை’ என்ற வார்த்தை தான் முதலிடம் பிடிக்கும். அதிலும் சிலர் 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்ற பழமொழியினை சொல்லியும் திட்டுவார்கள். ஆனால் இந்த பழமொழிக்கும், கழுதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அந்த வகையில் கழுதையை வைத்து நாம் நிறைய பேச்சு வார்த்தையில் பேசுகிறோமே தவிர கழுதையை பற்றி நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கழுதைகள் கனிவானவை, கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள் மற்றும் முற்றிலும் அன்பானவை. மேலும் மனிதர்களாகிய நாம் கழுதையின் அணுகுமுறை மற்றும் மீள்தன்மையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
மிகவும் புத்திசாலித்தனமான விலங்கான கழுதைக்கு சிந்திக்கவும் திட்டமிடவும் முடியும். ஒரு கழுதை தனது பாதையில் உள்ள ஒரு தடையை அடையாளம் கண்டு அதற்கேற்ப தனது பாதையை மாற்றுவது அசாதாரணமானது மற்றும் அவை தங்கள் பயணத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மிகவும் திறமையானவை.
மனிதனின் வளர்ச்சிக்காக உழைக்கும் விலங்குகளில் கழுதை (Donkey) இனமும் ஒன்று. கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். குதிரைகளை விட சிறியதாக இருந்தாலும், கழுதைகள் உறுதியான கால்களைக் கொண்டவை மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பில் அதிக சுமைகளைச் சுமக்க முடியும்.
மற்ற விலங்குகளை காட்டிலும் கழுதை ஆனது அதிகப்படியான பொறுமையினையும், அதன் மேலே அதிக எடையினை சுமக்கும் திறன் கொண்டது. ஆதலால் கழுதை பொறுமைக்கு மிகவும் பெயர் பெற்ற ஒன்றாகும்.
கழுதையின் விலங்கியல் பெயர் ‘ஈக்வஸ் அசினஸ்’. இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். உலகில் 40 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கழுதை இனங்கள் உள்ளன. முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-ல் இருந்து 142 செ.மீ உயரம் வரையும், 27 முதல் 40 ஆண்டுகள் வரையும் வாழும் தன்மை கொண்டது. அவை பெரும்பாலும் "ஹீ-ஹா" என்று விவரிக்கப்படும் சத்தமான ஒலியை எழுப்புகின்றன. ஆனால் கழுதை குறைவான உணவுகளை தான் சாப்பிடுகிறது. அதுபோலவே மற்ற விலங்குகளை விட அதிக சத்தத்தினை எழுப்பும் குணம் கொண்டது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டு விலங்குகளாக இருந்த கழுதைகள், பிற்காலத்தில் மனிதனால் வீட்டு விலங்குகளாக மாற்றப்பட்டன. எந்திரங்கள் வருகைக்கு முன், உலகம் முழுவதும் நிலத்தின் வழி பயணிக்கும் வர்த்தகர்களின் சுமைகளை ஏற்றிச்செல்ல பொதி சுமக்கு கழுதைகள்தான் வாகனமாக இருந்தன.
உழவு, விளை பொருட்களை சுமந்து நீண்ட தொலைவுக்கு செல்வது, விளை பொருட்களை ஏற்றிச்செல்லும் வண்டிகளை இழுப்பது, கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகளிலும், நகர்ப்புறங்களில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வது, குப்பை சேகரிப்பு ஆகிய வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. கழுதைப்பாலின் சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகளை அறிந்து ரோமானியர்கள் வீடுகளில் கழுதைகளை பாலுக்காக வளர்த்தார்கள். இங்கிலாந்து நாட்டின் சில பகுதிகளில் தாய்ப்பாலுக்கு நிகராக கழுதைப்பால் பயன்படுத்தப்பட்டது.
கழுதைகள் நம்பமுடியாத அளவிற்கு புத்திசாலிகள், அவை தங்களுக்கு முன்னால் உள்ள நிலப்பரப்பையும், தங்கள் முதுகில் உள்ள சுமையையும் மதிப்பிட முடியும், மேலும் சமநிலையை இழக்காமல் இருக்க தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளும்.
கழுதைகள் நம்பமுடியாத அளவிற்கு வலிமையானவை. இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கழுதை சிரமம் இல்லாமல் அதன் உடல் எடையை விட இரண்டு மடங்கு சுமையை சுமக்க முடியும் என்று கூறுகிறது. மேலும் அவை குதிரையை விட அதிக எடையைச் சுமக்க முடியும்! வண்டிகள் அல்லது பிற கருவிகளை இழுக்கவும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
குறைந்த வருமான நாடுகளில் உள்ள கழுதைகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் உள்ள கழுதைகளை விட அதிக சுமைகளைச் சுமந்து, கடுமையான சூழ்நிலையில் வேலை செய்கின்றன. கழுதைப் பாலின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
ஒரு காலத்தில் உழைப்புத்திறனுக்கு என்று வளர்க்கப்பட்ட கழுதைகள், தற்போது பல்வேறு நாடுகளில் கழுதைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், அழகு சாதன பொருட்களுக்காக வளர்க்கப்படும் விலங்காக மாறி உள்ளன.
கழுதையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது: கடின உழைப்பு, விசுவாசம், சகிப்புத்தன்மை, சமாதானம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க உதவும்.