
நாம் வாழும் உலகம் நம் முன் காட்சிகளாக எவ்வளவு பரந்து விரிந்து இருக்கிறதோ அதைப்போலவே நம்முடைய மனதும் உணர்வுகளால் பரந்து விரிந்து இருக்கிறது. சில நேரங்களில் நாம் கண்முன் காணும் உலகத்தைக் கூட ஆரவாரம் இன்றி நிசப்தமாக காண முடிகிறது. ஆனால் மனமானது எப்பொழுதும் அமைதியின்றி, குழப்பங்களோடு நிம்மதியின்றி தவிக்கிறது. அப்படியானால் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு என்ன செய்யலாம்? என்று சிந்தித்துப் பார்த்தால் அதற்கு இதுதான் ஒரே வழி!
ஒரு நாள் ஒரு ஆசிரமத்தில் ஜென் துறவி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக அந்த நாட்டின் அரசர் குதிரை மேல் பயணம் செய்து வந்து கொண்டிருந்தார். துறவியின் ஆசிரமத்தை பார்த்ததும் அவரிடம் ஆசி பெறுவதற்காக குதிரையை நிறுத்தி கீழே இறங்கி ஆசிரமத்துக்குள் சென்றார்.
தன்னை ஆசீர்வதிக்கும்படி அந்த அரசன் துறவியிடம் கேட்டுக் கொண்டார். அரசனை ஆசீர்வாதம் செய்த ஜென் துறவி சிறிது நேரம் அரசனுடைய முகத்தை உற்றுப் பார்த்தார். பின் அரசரிடம், ஏன் உங்களது முகம் இவ்வளவு ஆரவாரமாக, அமைதியின்றி காட்சியளிக்கிறது? உங்களுக்கு ஏதேனும் மனக்குறை இருக்கிறதா? என்று கேட்டார்.
அரசரின் மனதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தது. ஆனால் எதை முதலில் சொல்ல வேண்டும் என்று அரசருக்கு தெரியவில்லை. அரசர் அமைதியாக இருப்பதை பார்த்த ஜென் துறவி உள்ளே சென்று ஒரு ஒரு குடுவையை எடுத்து வந்தார். பின் அரசரிடம் நான் இதை உங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கிறேன்! இது செராமிக்கால் செய்யப்பட்ட குடுவை, உங்களுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கும். இப்போது நீங்கள் செல்லுங்கள், உங்களுக்கு மறுபடியும் என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் அப்பொழுது நீங்கள் வரலாம், என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
அதனைப் பெற்றுக்கொண்ட அரசன் அக்குடுவையை தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அக்குடுவை பலவித வேலைப்பாடுகளோடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. தினமும் பூஜை செய்யும்போது தண்ணீர் எடுத்து வருவதற்கும், மலர்களைப் பறிப்பதற்கும் என பல்வேறு விதமாக அரசன் அக்குடுவையை உபயோகப்படுத்தினான். சில நாட்கள் சென்ற பின் திடீரென ஒரு நாள் தண்ணீர் எடுத்து வரும்போது கால் தவறி அந்த குடுவை கீழே விழுந்து உடைந்து விட்டது. அதைப் பார்த்த அரசனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவரால் அந்த இழப்பை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
மறுபடியும் ஜென் துறவியை சந்திப்பதற்காக ஆசிரமத்தை நோக்கி சென்றார். ஆசிரமத்திற்குள் நுழைந்த உடன் துறவி முன் நின்று ஐயா, நீங்கள் கொடுத்த இந்த குடுமை எனக்கு பல்வேறு வழிகளில் உதவிகரமாக இருந்தது, சில நேரங்களில் அதன் வேலைப் பாடுகளுக்காகவே நான் அதனை அருகில் வைத்து ரசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அது உடைந்து விட்டது. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.
அரசன் கூறியதை அமைதியாக கேட்ட ஜென் துறவி நான் அதை உங்களிடம் கொடுக்கும்போதே அது ஒரு நாள் உடைந்து விடும்! என்பது தெரிந்துதான் கொடுத்தேன். அதுதான் அதனுடைய ஆயுட்காலம், அது எதற்காக வந்ததோ அதன் பயன் முடிந்துவிட்டது. இனிமேல் அக்குடுவையால் பயனில்லை.
ஆனால் ஒன்றை நினைத்துப் பாருங்கள். நீங்கள் உண்மையிலேயே வருத்தப்படுவது உடைந்த குடுவைக்காக அல்ல! குடுவை உடைந்த அந்த காலத்தை கடந்து வர முடியாததால்தான்! நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். பல நேரங்களில் நல்லதை கூட முழுமையாக அனுபவித்துவிட்டு எளிதில் கடந்து வந்து விடுகிறோம்.
ஆனால் நமக்கு நடந்த தோல்விகளையோ, அவமானங்களையோ நம்மால் அவ்வளவு எளிதில் கடந்து வர முடிவதில்லை. அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு நாட்களிலும் நாம் குழப்பத்துடனும் மனஅமைதி இல்லாமலும் நிம்மதி இல்லாமலும் வாழ்வதற்கு காரணம் கடந்த கால சுமைகளை இறக்கி வைக்காமல் சுமந்துகொண்டே இருப்பதுதான்! நீங்கள் ஒரு நாட்டிற்கே அரசர்! இந்த மானுட வாழ்க்கை எத்தகையது என்பதை பற்றிய புரிதல் உங்களுக்கு நிறையவே இருக்கும்.
அப்படி இருந்தும் ஏன் கடந்த கால சுமைகளை முதுகில் தூக்கிக்கொண்டு நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறீர்கள்! எதை எங்கே தொலைக்க வேண்டுமோ, அதை அங்கேயே தொலைத்து விடுங்கள்! வருங்காலம் நிச்சயம் ஒளி நிறைந்ததாகவே இருக்கும் என்று நம்புங்கள்!
நம்முடைய வாழ்க்கையிலும் உடல் மற்றும் பொருளாதார தேவைகளைத்தாண்டி அடுத்தபடியாக நம்மை அதிகமாக நிம்மதி இழக்கச் செய்வது ஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் இழந்த பொருள்களும், பெற்ற அவமானங்களுமே! எந்த ஒரு செயலும் காட்சிகளாக நம் கண்ணை விட்டு மறையும்போதே அவற்றிற்கு நம் மனதில் இருந்து விடுதலை கொடுத்துவிட்டால் நிம்மதியான ஒரு வாழ்க்கையை நாமும் வாழலாம்!