
சவால்கள் இல்லாத வாழ்க்கையில் என்றும் சுவாரஸ்யம் இருக்காது. வாழ்க்கையின் சுவாரசியமே சவால்களை எதிர்கொள்வதில் தான் உள்ளது. சவால்கள் இல்லாத வாழ்க்கை ஒருவித சலிப்பையும் வெறுமையையும் ஏற்படுத்தும். தினமும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது சலிப்பு மற்றும் அலுப்பு ஏற்படும். செய்யும் வேலைகளில் திருப்பங்களும் சுவாரசியங்களும் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும். சுவைபட இருக்கும். வாழ்வில் முன்னேறவும், மகிழ்ச்சிக்கும் சவால்கள் மிகவும் அவசியம்.
உப்பு சப்பற்ற வாழ்க்கையில் முன்னேறவும், புதியவற்றை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்ட மாட்டோம். சவால்கள் தான் நம்மை முன்னேறவும், புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும், கடினமாக உழைக்கவும், நம்முடைய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவும். வாழ்வில் எதிர்ப்படும் சவால்கள்தான் நமக்கு உந்துதல் அளிக்கும். எதிர்ப்படும் சவால்களை எதிர்கொண்டு கடினமாக உழைத்து வெற்றி பெறும் பொழுது நம்முடைய மன உறுதி என்பது அதிகரிக்கிறது. அத்துடன் எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் அவற்றிலிருந்து மீண்டு வரவும் உதவுகிறது.
புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், புதிய பாதையில் முன்னோக்கி முன்னேறிச் செல்லவும் இந்த சவால்கள் தான் நம்மை தூண்டுகின்றன. இதனால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், சுவாரஸ்யமும் ஏற்படுகிறது. இதனால் சுவைபட வாழ்வதற்கான அர்த்தத்தையும் உருவாக்குகிறது. சோதனைகளும், சாதனைகளும், சவால்களும் தான் மனிதர்களை சிறப்பாக வடிவமைக்கின்றது. இல்லையெனில் வாழ்வு என்பது சுவாரஸ்யமற்ற வெறுமையான ஒன்றாக தோன்ற ஆரம்பித்து விடும்.
தினமும் ஒரே மாதிரியான வேலைகளை செய்வது என்பது வாழ்வில் உற்சாகத்தைத் தராது. சலிப்பையும், மன அழுத்தத்தையும் தான் தரும். எனவே சவால்களை ஏற்றுக் கொள்வதும், அவற்றை திறம்பட எதிர்கொள்வதும் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். வீட்டிலானாலும் சரி அலுவகங்களிலானாலும் சரி திருப்பங்களும், சுவாரசியங்களும் இல்லாமல் தினமும் ஒரே மாதிரியான வேலைகளை செய்கிறபோது அலுப்பும் சலிப்பும் வெறுப்பும் ஏற்படுவது இயற்கை. விரக்தியும் வேதனையும் ஏற்படும்.
மேலை நாடுகளில் இடைநிலை மடை மாற்றம் என்கின்ற ஒரு வழக்கம் உள்ளது. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதுவரை செய்து வந்த வேலையை உதறிவிட்டு சிறிதும் தொடர்பே இல்லாத வேறு ஒரு பணிக்கு செல்வதும் அதில் மனநிறைவு பெறுவதுமாக இருக்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்வில் சுவாரசியம் கூடுவதாக நம்புகிறார்கள். இவ்வாறு புதிய பணி மாற்றம் செய்து கொள்ளும் பொழுது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும், புதிய அனுபவத்தை பெறுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் வாழ்க்கையில் சுவை கூடுகிறது என்றும் கூறுகிறார்கள். புதிய சூழலும், புதிய பணியும் வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது என்று கருதுகிறார்கள்.
தினம் தினம் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழாமல் சின்ன சின்ன சுற்றுலாக்கள், பயணங்கள், புதிய இடங்களைப் பார்வையிடுதல், புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுதல், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், புதிய சுவாரசியமான பொழுதுபோக்கை உருவாக்கிக் கொள்ளுதல் என்று இருந்தால் வாழ்க்கையில் சலிப்பு ஏற்படாது.
புதிய பொழுதுபோக்கு என்பது ரொம்பவும் செலவான விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது, கட்டுரைகள் புனைவது, முதியோர் இல்லங்களுக்கு சென்று ஆறுதல் அளிப்பது, நல்ல புத்தகங்கள் படிப்பது என நம் பார்வையை விசாலமாக்கிக் கொண்டால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏற்படும்.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!