ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கின்ற மனோபாவம் நமக்குள் எழுவதைதான் தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்கிறோம். இந்த தாழ்வு மனப்பான்மையானது, மனிதர்கள் சிலருக்கு குழந்தைப் பருவம் முதலே ஆரம்பித்து விடுகிறது என உளவியலாளர்கள் கருதுகிறார்கள்.
அதற்கு நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகளே காரணமாக இருந்து, அது அவர்களுடைய தாழ்வு மனப்பான்மைக்குச் சாதகமாக அமையும் பட்சத்தில்... தாழ்வு மனப்பான்மை வேரூன்றி விருட்சமாக வளர்ந்து விடுகிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்த தாழ்வு மனப்பான்மை, ஒருவருடைய தன்னம்பிக்கைக் குறைவுக்கும், உடல் மற்றும் மன நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஆபத்தாகவும் அமைந்துவிடுவது உண்டு. அதனால் அவர்கள் வாழும் சமுதாயத்துடன் ஒன்றிப் போவதற்கு, பெரும் சிக்கலை தந்து விடுகிறது.
இந்த பாதிப்பு ஆண், பெண் என்ற இரு பாலரையும் விட்டு வைப்பதில்லை என்றாலும், இதனால் பெரும்பாலும் பெண்களே பல மனச்சிக்கல்களுக்குள் சிறைப்பட்டு விடுகிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு குணம் உள்ளது. வித்தியாசமான திறமையும் அறிவும் உள்ளது. பெண் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இந்த உண்மையை உணராமல், சில பெண்கள்… நாம் இவளைப்போல் சிவப்பாக இல்லையே, உயரமாக இல்லையே, பெரிய கல்வியறிவு இல்லையே என்ற எண்ணங்களால் மன உளைச்சலை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட எண்ணமே... அவர்களுக்குள் இருக்கிற தனிப்பட்ட திறமைகளை, நம்பிக்கைகளை அழித்துவிடுகிறது. ஒருவரை தோற்றம் வைத்து முடிவு செய்வது என்பது சமூகத்தில் பொதுவாக காண படக்கூடிய ஒரு பழக்கம் தான். அது சிலநேரம் நமது மனதை உறுத்துவதும் .. வருத்தம் தருவதும் உண்மையே!
ஒருவருடைய புற தோற்றம் என்பது, பெரும்பாலும் அவருடைய பெற்றோர் மற்றும் அவர் குடும்பத்தை அல்லது பிராந்தியத்தை (ஊர், மாநிலம், நாடு இப்படி ) சார்ந்தே அமைகிறது.
இன்னொருவரை போல் உடல்வாகும்... உயரமும், நிறமும் உங்களுக்கு இல்லை என்பது உங்களுடைய குறைபாடு அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறர் மதிப்பை பெற நினைத்து, இயற்கையாக அமைந்த உருவத்தை வெளி பூச்சில் மாற்றி… வீண் செலவு மற்றும் ஆடம்பரத்தில் நிம்மதியை தொலைத்தவர்கள் நிறைய உண்டு.
ஆகவே தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட ,உங்கள் வாழ்வில் நீங்க உயர, உங்களையே நீங்கள் உயர்வாக எண்ண வேண்டும் என்பது அவசியம். அதற்கு இங்கே சில வழிகளை நாம் பார்க்கலாம் .
தோற்றத்தை வைத்து நம்மை எடை போடுபவர்களை தோற்கடிக்க முதலில் செய்ய வேண்டியது... அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்று யோசிப்பதை விட்டு விட்டு நீங்கள் நீங்களாக இருங்கள். ஏனென்றால் தோற்றத்திற்கும் திறமைக்கும் சம்மதமில்லை என்பதை நீங்கள் முதலில் உணருங்கள்.
அது போலவே நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதையும் நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் முதலில் உங்களை ரசியுங்கள். அதனால் ஏற்படும் தன்னம்பிக்கை உணர்வே உங்களை தைரியமாக நடமாட வைக்கும்.
இன்னொருவர் போல் அந்நிய மொழியை நம்மால் சரளமாக பேச முடியவில்லை என்று கவலை கொள்ளாதீர்கள். உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை , கிண்டல் கேலி தாண்டி தைரியமாக பேசும் மன உறுதி தேவை அவ்வளவுதான்.
முக்கியமாக விமர்சனங்களை கண்டு பயப்படாதீர்கள். உங்களால் இது முடியாது. உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக்காட்ட தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
எனக்கு மட்டும் வாழ்க்கை சோதனையாக இருக்கிறது , எப்போதும் சோகம், துன்பம் தவிர.. சந்தோசங்கள் என்று எதுவும் இல்லை என்று நினைத்து கவலை படாதீர்கள்.
ஏனென்றால் எல்லாவிதத்திலும் சந்தோஷமான வாழ்க்கை அல்லது எதிர்பார்க்கிற மாதிரி இனிமையான வாழ்க்கை என்று இங்கு யாருக்குமே அமைந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம்.
தோல்வியா .. துன்பமா ..ஏமாற்றமா.. தனிமையில் ஒரு சொட்டு கண்ணீர் விட்டு அழுது தீர்த்து விடுங்கள். இன்னொருவர் உதவியை ..ஆறுதலை ..ஆதரவை எதிர் பார்க்காதீர்கள்.
இங்கு யாரும் யாருக்காவும் துணை நிற்கமாட்டார்கள். அப்படியே இருக்க நினைத்தாலும் ... எப்போதும் அதற்கான நேரமோ, சூழ்நிலையோ அல்லது வசதி வாய்ப்போ அவர்களுக்கு இருக்குமா என்பதும் உறுதி இல்லை.
உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் (புத்தரின் பொன்மொழி) .
முதலில் நீங்கள் எதில் பலவீனமாக உணருகிறீர்களோ அதை உங்கள் பலமாக மாற்ற உறுதி கொள்ளுங்கள். நீங்கள் எதை தீவிரமாக நம்புகிறீர்களோ... நடத்த நினைக்கிறீர்களோ அது உங்களால் முடியும் என்பது உலகம் கண்ட உண்மை.
உங்களை பலவீனமாக சித்தரிப்பவர்களை ... உங்களால் முடியாது என்று பரிகாசம் செய்பவர்களைப் பார்த்து பயந்து ஓட நினைப்பது அல்லது அவர்கள் கண்ணில் படாமலே வாழ நினைப்பது ஒரு தற்காலிகமான விடுதலைதான்.
அதே சமயம் அவர்களோடு வாக்குவாதம் செய்து உங்களை நிரூபிக்க நினைப்பதும் தேவையில்லாத ஒன்று.
இந்த திரைப்பட பாடலின் கருத்துகள் உங்களுக்கு ஊக்கம் தரலாம்.
"உனக்குள்ளே சக்தி இருக்கு..
அதை உசுப்பிட வழி பாரு!"
அட எவனுக்கு என்ன குணம்
எவனுக்கு என்ன பலம்
கண்டதில்லை ஒருவருமே.
ஒரு விதைக்குள்ள அடைபட்ட
ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொறு மனமே!”
ஆகவே உன்னை நீ அறிந்தால் உயர்வு நிச்சயம் !!