சிக்கனம் சிறப்பான வாழ்வைத்தரும்!

Thrift leads to a better life!
Lifestyle articles
Published on

நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எப்படித் திறமையாகக் கையாள்கிறோம் என்பதே முக்கியம். ஒருவருக்குத் தான் சம்பாதிக்கும் பணத்தைத் திறமையாகக் கையாளத் தெரியாமல் போனால் அவருடைய வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக மாறிவிடும்.

முதலில் நாம் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவையான விஷயத்திற்குக் கூட செலவு செய்யத் தயங்கி அதைச் செய்யாமல் பணத்தை பத்திரப்படுத்தி வைப்பதற்குப் பெயர் கஞ்சத்தனம். தேவையான விஷயத்திற்கு பலமுறை யோசித்து பின்னர் அதற்காக செலவு செய்தால் அதற்குப் பெயர் சிக்கனம்.

மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாயை சம்பாதிப்பவர் கூட சிக்கனமாக செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்வதைக் காணமுடிகிறது. ஆனால் மாதம் லட்ச ரூபாய் சம்பாதிப்பவர் பணத்தை தேவையில்லாத ஆடம்பர விஷயத்திற்கு யோசிக்காமல் செலவழித்து மாதக்கடைசியில் கடன் வாங்கி அல்லல்படுவதையும் காணமுடிகிறது. சரியான திட்டமிடல் இன்மை, வறட்டு கௌரவம் இவையே இதற்குக் காரணமாகும்.

லால்பகதூர் சாஸ்திரி மிகவும் நேர்மையானவர். சிக்கனமானவர். எளிமையானவர். அவர் தன்னுடைய குடும்பத்தை நடத்த ஐம்பது ரூபாய் போதும் என்று ஐம்பது ரூபாயை சம்பளமாகப் பெற்று வந்தார். ஐம்பது ரூபாயை தன்னுடைய மனைவியிடம் கொடுத்து சிக்கனமான முறையில் குடும்பத்தை நடத்தவேண்டும் என்பார்.

ஓருமுறை சாஸ்திரியின் நண்பரொருவர் சாஸ்திரியிடம் ஐம்பது ரூபாயை கடனாகக் கேட்டார். தன்னிடம் இல்லை என்றார் சாஸ்திரி. அங்கிருந்த மனைவி “ஏதோ அவசரம் போலிருக்கிறது. பணத்தை அவருக்குக் கொடுங்களேன்” என்றார். “என்னிடமில்லை. உன்னிடம் இருந்தால் கொடு” என்றார் சாஸ்திரி. அதற்கு அவருடைய மனைவி உள்ளே சென்று ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
ஆண்களை பலவீனமாக்கும் 7 விஷயங்கள்!
Thrift leads to a better life!

நண்பர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் சாஸ்திரி தன் மனைவியிடம் “இந்த ஐம்பது ரூபாய் உனக்கு ஏது?” என்று கேட்டார். “மாதாமாதம் நீங்கள் தரும் ஐம்பது ரூபாய் பணத்தில் பத்து ரூபாயை சேமித்து வைத்திருந்தேன். அந்த பணம்தான் இது” என்றார்.

அடுத்தநாள் அலுவலகம் சென்ற சாஸ்திரி “என் மனைவி நாற்பது ரூபாயிலேயே சிறப்பாக குடும்பம் நடத்துகிறார். இம்மாதத்திலிருந்து நாற்பது ரூபாய் மட்டுமே எனக்கு சம்பளமாகக் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது அல்லவா?

எந்த ஒரு பொருளையும் தேவையில்லாமல் வாங்கி வீட்டில் வைக்கக் கடாது. ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னால் அந்த பொருள் அன்றாடம் பயன்படுமா அல்லது எப்போதாவது பயன்படுமா அல்லது தேவையே இல்லையா என்று ஒன்றுக்கு பத்து முறை யோசிக்க வேண்டும். மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அந்த பொருளை வாங்கவேண்டும்.

மாதாமாதம் வரும் வருமானத்தில் பத்து சதவிகிதத்தை முதன் வேலையாக சேமிக்கப்பழக வேண்டும். அந்த சேமிப்பையும் பாதுகாப்பான அரசு சார்ந்த நிறுவனங்களில் சேமிக்க வேண்டும்.

கூடுமானவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தப் பழகவேண்டும். பேருந்தைவிட ரயில் போக்குவரத்து சிக்கனமானது. நீங்கள் செல்லும் ஊருக்கு ரயில் வசதி இருந்தால் ரயிலில் செல்லுங்கள்.

நாம் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தால் யாரும் நம்மைப் பாராட்டப் போவதில்லை. அப்படியே நாலு பேர் நம்மைப் பாராட்டினாலும் அதனால் என்ன நன்மை என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவசரத்தேவைக்கு போதிய பணம் நம்மிடம் எப்போதும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அது முக்கியம்.

நிறைய பணம் நம்மிடம் இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது தவறு. சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவழித்து ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் வாழ்ந்தால் அதுவே சிறந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். சிக்கனமாக வாழக் கற்றுக் கொள்ளுவோம். சிக்கலில்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வோம்.

இதையும் படியுங்கள்:
என்ன ப்ரோ? நாளுக்கு நாள் வேகமா ஓடிக்கிட்டே இருக்கா? அது உண்மையா?
Thrift leads to a better life!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com