
சிரிப்பு மனதை உற்சாகப்படுத்துகிறது; கலகலப்பாக வாழ்வை நடத்த வழிகாட்டுகிறது. மனம் விட்டுச் சிரிக்கின்ற பழக்கம், மருத்துவருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தைக் குறைப்பதோடு, உங்களுடைய வாழ்நாளையும் நீடிக்கச் செய்கிறது.
மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பது, வெற்றி பெறுவதற்கு மிகச் சிறந்த உபாயமாகிறது. மகிழ்ச்சி என்பது ஓர் மனநிலைதான். அது உங்களிடமே இருக்கின்றது. வேறு எங்கும் தேடி. பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. உங்களுடன் பிறந்தது அது.
வயது செல்லச் செல்ல, சருமம் சுருங்கிவிடும். அதுபோல மகிழ்ச்சி குறையக் குறைய வாழ்க்கையும் சுருங்கிவிடும் என்று அறிஞர் உஜ்மன் கூறியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்வின் வளர்ச்சியை காட்டுவதே மகிழ்ச்சிதான். நாம் ஒவ்வொரு முறையும் வெற்றி அடையும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறோம். வளர்ச்சி அடையும்போது மகிழ்கின்றோம். அதனால்தான் மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி என்கிறோம்.
மகிழ்வுடன் இருப்பதன் மூலம் ஆயுள் வளர்ந்துகொண்டே போகும். மகிழ்ச்சியுடன் இருந்தால் எந்தக் காரியத்தையும் எளிதாகச் சாதித்து விடலாம், மகிழ்ச்சியுடன் வேலை செய்தால் வேலைப்பளு தெரியாது.
மகிழ்ச்சி என்பது. இனிமையான எண்ணங்களை வைத்திருப்பதாகும். மகிழ்ச்சி என்பது நாமாகப் பெறுகின்ற ஒரு மனோபாவம். உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தேவையோ, அவ்வளவு மகிழ்ச்சியை உங்களால் பெறமுடியும்.
நீங்கள் ஒரே ஒருமுறைதான் வாழ்கிறீர்கள். நீங்கள் சோகமாய் இருக்கும்போது இதை நினைவில் கொள்ளுங்கள். உங்களையும் மற்றவர்களையும், மகிழ்ச்சி உள்ளவர்களாக மாற்ற, உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள்.
வாழ்க்கையில் நன்மையும். தீமையும் - வெற்றியும், தோல்வியும். ஒழுக்கமும், ஒழுக்கமின்மையும்- களிப்பும், கண்ணீரும் கலந்துதான் இருக்கும். உப்பை உங்களால் தனியாகச் சாப்பிடமுடியாது? ஆனால் அதை ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிடும்போது எப்படி ருசிக்கின்றோம்.
ஆம். தனியாகச் சாப்பிட்டால் ருசிக்காதவற்றை, உணவுடன் சேர்த்து சுவைபடுத்துகிறோம். தோல்விகளையும், தீமைகளையும் கூட வாழ்க்கையைச் சுவைப்படுத்துகின்ற விசயங்களாகவே நாம் கருத வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றிகளே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைக்கூட தாண்டாதவன். தோல்விகளை மட்டும் எதிர்பார்க்கின்றவன், வளர்ச்சி அடையாதவன்" என்கிறார் டாக்டர் மவுரஸ்.
எவன் ஒருவன் வாழ்க்கையின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் அனுசரித்துக்கொண்டு நகைச்சுவை உணர்வுடன் வாழ்கின்றானோ, அவனே மகிழ்ச்சியான மனிதன் என்று கருதலாம்.
'மகிழ்ச்சியான மனிதர்கள், மற்றவர்களின் உடலையோ, உள்ளத்தையோ காயப்படுத்துவதில்லை. மாறாக மகிழ்ச்சியை மற்றவர்களுக்குப் பரப்புகின்றனர்.
உலகம் எப்படி வேண்டுமாயினும் இருக்கட்டும். நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்கின்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், ஒவ்வொரு நாள் பொழுதும் நல்ல பொழுதாகவே விடியும்.
நீங்கள் மகிழ்ச்சி நிரம்பியவராக, உற்சாகம் பாராட்டும் ஆளுமையும் பெற்றவராக இருந்துவிட்டால், உங்களுடைய குடும்பமும் உங்களுடைய நிறுவனமும் மகிழ்ச்சியுடையதாக இருக்கும்.