
மனதில் கற்பனை தோன்றத் தோன்ற நமது பிரச்னைகளுக்கு வழிகள் பிறக்கின்றன. கற்பனை நாட்டுத் தலைவனுக்கும் தேவை. வீட்டுத் தலைவனுக்கும் தேவை. குழந்தைகளின் கற்பனைகளை பொய்மை விளையாட்டு என்கிறோம். எழுத்தாளர்களின் கற்பனைகளை நாடகங்களாகும், சினிமாவாகவும் ரசிக்கிறோம். நாட்டுத் தலைவனின் எதிர்காலக் கற்பனையை தீர்க்க தரிசனம் என்கிறோம். கற்பனையை நாம் வெறும் பகல் கனவாகச் சுவைத்துவிட்டு நம் நடைமுறைக் காரியங்களைக் கவனிக்கலாம்.
கற்பனையை நாம் நிகழ வேண்டிய சம்பவங்களாக மனதில் விரித்து விட்டு, நாம் பலனை ஆர்வத்துடன் எதிர்நோக்கலாம். கல்லை முதலில் சக்கரமாக அமைத்தவனின் கற்பனையை எண்ணிப்பாருங்கள். முதன் முதலாக அகப்பட்டதை எல்லாம் பறித்துத் தின்பதற்கு பதிலாக பயிரிட்டு அறுவடை செய்தவனின் கற்பனையை எண்ணிப் பாருங்கள்.
எங்கோ இருப்பவர்களின் பேச்சைக் கேட்கும்படியாகச் செய்த ரேடியோ பற்றி யோசித்துப் பாருங்கள். மாடு, குதிரை இல்லாத வண்டி ஓடுமா என கற்பனை செய்த காரைப் பற்றி யோசியுங்கள். ஒரு காலத்தில் கற்பனையில் மட்டுமே இருந்தவைகள் எல்லாம் பிற்காலத்தில் சாத்தியமாயிற்று. கற்பனை செய்யும்போது மனித மனம் போட்டிருக்கும் எல்லைகளை மீறுகிறோம். முடியாது என நடைமுறையில் சிந்தித்த இருந்த விஷயம் எல்லாம் முடியும் என்று நம்மால் கற்பனையில் காண முடிகிறது.
கற்பனை இரண்டு வகைப்படும். ஒன்று பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்பது, இன்னொன்று இல்லாத ஒன்றை எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்ப்பது. இறந்தகால நிகழ்ச்சிகள் இல்லாத ஒன்றுதான். ஆனால் நிகழ்காலத்தில் அந்த நிகழ்வுகள் உணர்வை நாம் அனுபவிக்க முடியும். ஆனால் எதிர்காலக் கற்பனைபோல் அவை ஆக்க சக்தி படைத்தவை அல்ல.
பழைய சம்பவங்கள் மனதில் ஒரு பாதையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆகவே எதிர்காலக் கற்பனையைப் பழைய கால வெற்றியுடன் சேர்த்து சிந்திப்பது வெற்றிக்கு வழிவகுக்கும் எனகின்றனர் மனநூலார். நமக்குத் தெரிந்த பழைய நினைவுகளை கலைத்து வேறு விதங்களில் அவற்றைச் சேர்ப்பதன் மூலம் மனதில் புதிய கற்பனையும் ஆக்க சக்தியும் பிறக்கின்றன. கற்பனையை நாம் அளவோடு உபயோகிக்க வேண்டும்.
வாரத்தில் ஓரிருமுறை சிந்திப்பவன் நான் சர்வதேசப் புகழ் எனக்குண்டு" என்றார் பெர்னார்ட் ஷா". கற்பனை ஒரு வரப்பிரசாதம் அல்ல. மனதை நாளடைவில் அந்த வழியில் பழக்கப்படுத்துவதன் மூலம் நாம் கற்பனையை வளர்க்க முடியும். வளமான கற்பனை மூலம் வளர்ச்சி அடைய முடியும்.