
நமக்கு உடன்பாடானவை மட்டுமே நல்லது: ஏற்கத்தக்கது என்கிற பிரமையிலிருந்து நாம் முதலில் விடுபட வேண்டும். காரணம் இயற்கையின் அமைப்பே நன்மையும் தீமையும் கலந்ததுதான்.
ஆற்றில் வரும் வெள்ளம் பயிர்த்தொழிலுக்குப் பயன்பட்டாலும், அந்த வெள்ளமே பெருக்கெடுக்கும்போது பயிர்களை அழித்தும் விடுகிறது. அதற்காக வெள்ளத்தை நாம் வெறுப்பதில்லை. அதனால் விளையும் நன்மைகளை எண்ணி அது ஏற்படுத்தும் தீமைகளை மறந்துவிடுகிறோம்.
இயற்கை கற்றுத்தரும் பாடம் இது.
எந்த மனிதனும் நூற்றுக்கு நூறு கெட்டவனுமல்ல; நுாற்றுக்கு நுாறு நல்லவனுமல்ல. அதுபோல் நன்மையும் தீமையும் கலந்த கலவைதான் இயற்கை.
ஆகவே, மனிதனை ரசிக்கும்போது அவனிடமுள்ள குறைபாடுகளையும் படைப்பின் அங்கமாக ஏற்றுக்கொண்டால் சிக்கல்கள் தோன்றாது.
மனித உறவுகள் விட்டுக் கொடுப்பதில்தான் சிறப்பைப் பெறுகின்றன . ஒரு மனிதனிடமுள்ள நல்லவற்றுக்காக அவனை நாம்நேசிக்கும் போது அவனிடமுள்ள தீயவை கூட நம்மை பாதிக்காத நிலையினைப் பெற்று விடுவதை நாம் பார்க்க முடியும்.
உங்கள் மனைவியிடம் சில குறைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். உங்கள் மனைவியை நீங்கள் முழுமையாகத்தான் நேசிக்க முடியுமே தவிர அவளுடைய குறைகளை நீக்கிவிட்டு நான் அவளை நேசிக்கிறேன் என்று சொல்ல முடியாது.
அவளுடைய குறைகள் அவளுடைய அமைப்பின் ஓர் அங்கம். குறைகளுடனும் அவளை அவளுக்காகவே நீங்கள் நேசிக்கும் போதுதான் தாம்பத்தியம் அபஸ்வரம் இல்லாத இனிய சங்கீதமாயிருக்கும். இது மனைவி கணவனிடம் கொண்டுள்ள உறவுக்கும் பொருந்தும். ரசனை என்பது ஒரு மனோபாவம்.
ஒரு ஓவியத்தை ரசிக்கிறோம். முழுமையான ஓவியமாகத்தான் அதை ரசிக்க முடியுமே தவிர அதில் சம்பந்தப்பட்டுள்ள பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அங்கே ரசனை தோன்றுவதற்கு வழியிருக்காது.
ஒரு மலரை முழு மலராகத்தான் ரசிக்க வேண்டுமே தவிர தனித்தனி இதழ்களாக ரசிக்க முடியாது.
மனிதர்களையும் அப்படித்தான் ரசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனித உறவுகள் நிலைக்கும், நீடிக்கும்.
'குற்றம் பார்க்கில் சுற்றமில்லை' என்று சொல்வார்கள். சுற்றம் என்பது உறவுதான். வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவனுக்கு குற்றங்களை பெரிதுபடுத்த நேரமிருக்காது.
சிலரால் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். இருட்டைப் பார்த்தே பழகிவிட்டவர்கள் சிலர். இவர்கள் ஆக்ராவுக்குச் சென்றாலும் தாஜ்மகாலைப் பார்க்க மாட்டார்கள். அங்குள்ள குப்பங்களையும் சாக்கடைகளையும் மட்டுமேதான் பார்ப்பார்கள்.
ரசனை உணர்ச்சி இல்லாவிட்டால் நல்லவை கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். நல்லதையே பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். தீமைகளும் குறைபாடுகளும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனோபாவம் கொண்டவர்களால்தான் வாழ்க்கையை ரசிக்க முடியும்.
ரசிக்கத் தெரிந்தவனே மகிழ்ச்சியாகவும் இருக்கத் தெரிந்தவன். மகிழ்ச்சி என்பது விலை மதிக்க முடியாத ஆபரணம் ரசனை என்பதுவாழ்க்கையில் நிம்மதியைப் பெற்றுத்தரும் காமதேனு. நாம் இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழவே வந்து பிறந்திருக்கிறோம் எதற்கெடுத்தாலும் வாடி உட்கார்ந்திருப்பதற்காக அல்ல.