
தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்றார் வள்ளுவர். எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யும் மனிதர் எவரோ அவரால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பது தெளிவு. எந்த வேலையை எடுத்து செய்யத் தொடங்கினாலும் அதை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு புகழ்பெறும் நோக்கத்துடன் செய்யத் துணியவேண்டும். அப்பொழுதுதான் மனதிற்கு நிறைவும் நிம்மதியும் கிடைக்கும். அதன் மூலம் கிடைக்கும் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
"தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிட, தன் உழைப்பின் மதிப்பை உயர்த்தி காட்டும் ஒரு மனிதன்தான் சமூகத்தில் உயர முடியும்".
சாதாரணமாக எதிர்ப்படுவோரிடம் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டால் ஏதோ இருக்கிறேன் என்று சொல்பவர்கள்தான் அதிகம். எத்தனையோ துன்பங்கள் கடந்து விட்டாய். இருந்தும் மனதில் ஏதோ ஒரு பயம்.
இன்னும் வாழ்க்கை என்னவெல்லாம் கற்றுத்தரப் போகிறதோ என்று. நிம்மதியுடன் வாழ்கிறேன் என எளிதில் யாராலும் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் யாருக்கும் நிம்மதியை தந்து விடாது. நிம்மதி என்பது அவரவர் சாய்ஸ் என்று சொன்னால் மிகையாகாது.
இன்னும் சொல்லப் போனால் பேராசை பிறக்கும் இடத்தில்தான் நிம்மதி தொலைகிறது. ஆசை பேராசையாக பெருகும் போது ஒருவர் இருப்பதையும் இழந்து நிற்பார். அப்படி என்றால் ஆசையே படக்கூடாது என்று அர்த்தம் இல்லை. அளவோடு இருக்கும் பொழுது எல்லாமே நிம்மதி தரும். அளவு மீறும் பொழுதுதான் துன்பத்திற்கு ஆளாகிறோம். அது போல்தான் ஆசை என்பது அமுதம்; பேராசை என்பது ஆலகால விஷம். எதற்குமே ஆசைப்படாதவராக இருப்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய தைரியம் என்கிறார் ராமகிருஷ்ணன்.
கூரை செம்மையாக போடப்பட்ட வீட்டில் மழை நீர் இறங்காதது போல் நல்ல பண்புள்ள மனதில் ஆசைகள் நுழைய முடியாது .அளவு கடந்த ஆசையால் தான் நிம்மதியை இழக்கிறோம் .ஆதலால் அளவோடு ஆசைகள் இருக்கும் பொழுது வளமோடு வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதி. வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் உழைக்க வேண்டும். உழைத்து முன்னேறும் பொழுது தான் மனதிற்குள் தன்னிறைவு தோன்றும் .
எதிலும் தன்னிறைவு பெற்று விட்டால் நிம்மதி கிடைக்கும். ஏதாவது ஓர் பொருளை காண்பித்து இது நான் இந்த வேலை செய்தேன். இதற்காக கிடைத்த சன்மானம், பரிசு என்று சொல்லும் பொழுது அதில் கிடைக்கும் நிறைவும் நிம்மதியும் அலாதியானது. அதுதான் உழைப்பை மேன்மைப்படுத்துவதாக உள்ளது. எல்லா விதமான பெருமிதத்திற்கு உள்ளேயும் ஒளிந்துகிடப்பது என்னமோ உழைப்புதான். ஓடி ஓடி உழைக்கவேண்டும் என்று சொன்னது எல்லாமே மன நிம்மதிக்குதான்.
ஒருவன் தான் உழைத்து சம்பாதிக்காமல் முன்னோர்கள் சேர்த்து வைத்த செல்வத்தை அவ்வப்போது செலவிட்டு கொண்டே வந்தான். எந்த வேலையும் செய்யாமல் செலவிடுவதைப் பார்த்து அவனின் உறவினர் ஒருவர் ,நீ சொந்தமாக உழைத்து சேர்த்து வைத்து செலவு செய்து பார். இன்னும் நன்றாக செலவு செய்யலாம். உனக்கு மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று கூறினார் .எல்லோரும் செலவு செய்யாதே என்று கூறும் பொழுது அவர் மட்டும் வித்தியாசமாக அப்படி கூறியது அவனுக்கு ஒரு மனதிற்குள் உந்துதலை ஏற்படுத்த ,அவனும் உழைத்து சம்பாதிக்கத் தொடங்கினான். அளவுக்கு அதிகமாக சேமிக்க தொடங்கியதும் செலவு செய்வதை நிறுத்தினான்.
அப்பொழுது சொன்ன உறவினர் வந்து இப்பொழுது ஏன் செலவு செய்வதையே நிறுத்தி விட்டாய்? என்று கேட்டார். அதற்கு அவன் இது நான் உழைத்தது சம்பாதித்தது அதை செலவு செய்ய எனக்கு மனம் வரவில்லை. இனிமேல் வீணாக எதுவும் செலவு செய்ய மாட்டேன்.
இப்பொழுதுதான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. உழைப்பதால் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவும் பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு விட்டது என்று கூறினான். பெரியவர் அவன் திருந்திவிட்டதை எண்ணி தம் எண்ணம் பலித்ததை நினைத்து சிரித்துக்கொண்டு வீடு திரும்பினார். இதுதான் உழைப்பின் மகிமை. அதன் பிறகு அவனை ஊதாரி என்று கூறியவர்கள் கூட நல்ல நிலையில் வைத்துப் பார்க்க ஆரம்பித்தனர்.
உழைப்பே உயர்வு தரும்!