
வாழ்க்கை என்பது வெறும் வானம் பார்த்த பூமி அல்ல. அது வண்ணக்கோலங்களை தன்னில் தேக்கிக்கொண்டு நம்மை வா வா என்று அழைக்கிற ஒரு வசந்தகாடு. அதனோடு வழக்கொன்றும் வைத்துக்கொள்ளாமல் சொந்தம் கொண்டாடப் பழகிக்கொண்டால் சோக மேகங்கள் கூட சுகராகங்களாக மாறி தேசிய கீதம் என்று ஆகும்.
அலுவலகங்களில் எடுபிடி வேலை செய்கிறவர்கள் கூட துடிப்பும் துள்ளலுமாய் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அதே சமயத்தில் உயர் பதவி வகித்தும், சிலர் உம்மணாமூஞ்சிகளாய் இருக்கிறார்கள்.
இந்த முரண்பாடுக்குக் காரணம் வாழ்க்கையின் இன்பங்கனைப் பற்றி அறியாமையும் அந்த இன்பங்களை ரசிக்கத் தெரியாமையும்தான்.
இன்பமும் துன்பமும், விருப்பும் வெறுப்பும் பணத்திலும், பதவியிலும் இல்லை. மனத்தில் இருக்கிறது. இந்தப் பக்குவக் குறைவுதான் பலபேரைப் பெருமூச்செறிய வைத்து பாழ்படுத்தி விடுகிறது. இவர்கள் ஆகாத விசயங்களுக்குக் கூட அலட்டிக் கொள்ளுகிறவர்கள். எதைக் கண்டாலும் குறை சொல்லியே குறுகிப் போகிறவர்கள்.
இவர்களைச் சொர்க்கத்தில் அதிபதிகளாய் நியமனம் செய்தால் கூட சந்தோசப்படமாட்டார்கள். சோம்பேறிகளாகவே இருப்பார்கள்.
சோதனைகளும் வேதனைகளும் வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளாமல் வாழ்நாளைத் தொலைத்துவிடுகிறவனோடு மட்டுமே சொந்தம் வைத்துக்கொள்கின்றன.
அர்னால்ட் க்ளாசோ என்கிற அறிஞர் கூட இதே கருத்தைத்தான் அடித்துச் சொல்லுகிறார்.
வாழைப்பழத்தைக் கொடுத்து சாப்பிடச் சொன்னால் அதை உரிக்க வேண்டும். வாயில் போடவேண்டும், பற்கள் அரைக்க வேண்டும். பின்னர் விழுங்க வேண்டும். இதனைச் சாப்பிடுவதற்கு இத்தனை சிரமங்களா? என்று அலுத்துக் கொள்கிறவன் எப்படி முன்னேறுவான்.
நாமும் பல சமயங்களில் நமது பணிகளை சுற்றத்தை சூழ்நிலைகளை அனுபவங்களை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண்பவர்களாக இருக்கிறோம்.
எதற்கெடுத்தாலும் அலுத்துக் கொள்கிறோம் குறை காண்கிறோம். அதனால் குறையாகிப் போகிறோம். கலங்கிக் கண்ணீர் வடிப்பதனால் காரியம் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. எனவே அந்தக் கையறு நிலையை நாம் கை கழுவுவதே நல்லது. சோம்பலால் சூம்பிப் போயிருக்கும் மனதில் சுகங்கள் கூட சோகங்கள்தான். இனிப்புகள் எல்லாம் கூட எட்டிக் காய்கள்தான், உற்சாகம் அங்கே ஊற்றெடுத்து விட்டால், சோகங்களும், துக்கங்களும் காணாமல் போய்விடும்.
சோம்பல் சாதாரண வாழ்க்கையில் கூட ஒரு சுமையைச் சேர்த்து விடுகிறது. செந்து விழுகிறதாய் நீங்கள் நினைக்கிற நேரங்களுக்குக் ஒரு சத்து வந்து விடுகிறது!
அழுகிப்போன அருவருப்புகளின் மீது காலாகாலமும் தூசுத் துகளாய் இருப்பது பெருமைக்குரியதல்ல. கண நேரமாவது எரிந்து ஒளி வீசி கரித்துண்டாய் விழுவதே வணக்கத்திற்குரியதாகும்.
வாழ்வு இலக்கியத்தில் காவியமாகப் பதிகிறவன் இறப்புக்குப் பின்னும் வாழ்கிறான். நாமும் வாழ்க்கை இலக்கியத்தின் காவியமாக வாழ்வது நமது கைகளில்தான் உள்ளது. முயற்சிப்போம் முன்னேறுவோம்!