
காலை படுக்கையிலிருந்து எழுந்த தருணமே தயாராக இருக்கும், அன்றைய நாளுக்கான சவால்கள். சிக்கல் மட்டுமல்ல வழியும் அங்கேதான் இருக்கும். எல்லா பிரச்னைகளுக்கும், தீர்வு உண்டு. நல்ல சங்கதியோ, கெட்ட விஷயமோ சூழ்நிலைக்கேற்ப பிரச்னை உருவாக வாய்ப்புகள் இருக்கலாம். நமக்கு எதிராக, சூழ்நிலை மாறும்போது, முதலில் சவாலை ஏற்க மனசை தயார்படுத்தி, நிதானமாக யோசிக்க கடந்து வருவதற்கான வழிகள் கண்முன்னே விரியும்.
சின்னதோ, பெரிதோ, சவால்களை உருவாக்க பெருங்காரணமாக இருப்பது பிரச்னைகளே. சின்ன விஷயம்தான். எப்படி சமாளிக்கலாம்னு என்னை யோசித்து, சமாளிக்க வைத்த சம்பவம் இது.
பெரியம்மாவின் பேத்திக்கு திருமணம். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு. அதன் சிறப்பு, மண்டபத்தினுள் மாப்பிள்ளை நுழையும் போது, ஆரத்தி எடுப்பது. ஒற்றைப்படையில், வித விதமாக பெண் வீட்டார் எடுக்க, மாப்பிள்ளை கிப்ட் தந்து தேங்க்ஸ் சொல்வார். நானும், தங்கையும் ரொம்பவே யோசித்து ஆரத்தி ரெடி பண்ணியிருந்தோம். முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டோம்.
ஆறு ஆரத்தித் தட்டுக்கள்தான் இருந்தது. மாப்பிள்ளை வாசலுக்கு வந்துவிட்டார். ஒரு தட்டை குறைக்க முடியாது. என்ன செய்ய..? சுற்றிலும் பார்த்தேன். ரிசப்ஷன் டேபிளில், ஒரு தட்டில் ரோஜாப்பூக்கள் இருந்தது. அதிலிருந்த ஹேர்ப்பின்களை எடுத்துவிட்டு, அதன் நடுவில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன்.
பக்கத்தில் நின்ற பெண்ணை அழைத்து, "பாப்பா, மாப்பிள்ளையின் முன் நின்று, இந்த ட்ரேயை கிளாக்வைசில் மூன்று சுற்று, ஆன்ட்டி கிளாக்வைசில் மூன்று தடவை சுற்று என்றேன். அவளும், சொன்னபடி செய்து, மகிழ்ச்சியோடு கிப்ட்டை வாங்கிட்டு, தேங்க்ஸ் ஆன்ட்டின்னு சொல்லிச்சென்றாள்.
பிரச்னைகள் உங்களை ஆளவிடாதீர்கள். எதிர்த்து நில்லுங்கள். சாதனைகள் சரணடையும். சவாலான சமயங்களிலும், டென்ஷன் ஆகாமல் சரி செய்ய, what nextன்னு யோசியுங்கள்.
எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென, மகளோ, மகனோ வந்து, காதலிக்கும் விஷயத்தை சொன்னால், படபடப்பாயிருக்கும். கோபம் கூடும். பிரஷர் எகிறும். இதெல்லாம் உங்களை டென்ஷனாக்கும் விஷயம்தான். சற்றே நிதானத்துக்கு வந்து, அவர்கள் சரியான இணையை தேர்ந்து எடுத்துள்ளார்களா என விசாரியுங்கள்.
உங்களுக்கு சாதகமான பதில் வந்தால் திருமணக் காரியங்களை உடனே ஆரம்பியுங்கள். திருப்தியான பதில் கிடைக்க வில்லையா.. அவர்களுக்கு எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் சங்கடங்களை எடுத்துக் கூறி புரியவைத்து, வழிநடத்த முயற்சி செய்யுங்கள். சூழ்நிலை சாதகமாகும். நம்பிக்கை, முயற்சியுடன் பொறுமையும் சப்போர்ட்டாக உடன் இருந்தால், சொல்யூசன் சீக்கிரம் கிடைக்கும்.
சாவியின்றி பூட்டு தயாராவதில்லை. பாஸ்வேர்டுக்குள் மறைந்திருக்கும், ஆப் போலவே பிரச்னைகளும், தீர்வுகளும். சரியான பாஸ்வேர்டு போட்டால், திறக்கும் ஆப் போலவே சரியான தீர்வைத்தேடி, கண்டுபிடித்து முயற்சி செய்தால் வெற்றி வாசல் திறக்கும். வாழ்க்கை வசப்படும்.