

எழுபது வயதைத் தாண்டிய நம்மில் பலர், வயதாகி, வயோதிகம் வந்து விட்டதே என்ற ஏக்கத்தில் தான் இருக்கிறோம். அதிலும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் (கொழுப்பு) போன்ற நெடு நோய்கள் இருப்பவர்களின் கதையைக் கேட்கவே வேண்டாம். எப்பொழுதும் ஆற்றாமையிலும், வெறுப்பிலுமே காலத்தை ஓட்டுவார்கள். நமது முன்னோர்களோ விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள் என்றார்கள்.
தற்போதைய மருத்துவமோ, மேற்கண்ட நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட்டே ஆக வேண்டுமென்கிறது. பெரும்பாலான விஷயங்களில் உலகம் ரிவர்ஸ் கியரையே போடுகிறது. உண்மையில், எழுபதைத் தாண்டியவர்கள் ஏகமாக மகிழலாம். இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததே வரலாறுதானே! கவிஞர் கண்ணதாசன் சொல்வார்: ‘நூறு வயது வரை வாழ வழி சொன்னவர்கள் எவரும் ஐம்பதைக் கடந்ததில்லை!' என்று. எழுபதைக் கடப்பது எளிதல்லவே.
என்ன? சிலருக்குக் கால் வலி, மூட்டு வலி பிரச்னைகள்; சிலருக்குப் பல் சம்பந்தப்பட்ட உபாதைகள்; பலருக்கு இதய நோய்கள்; சிலருக்குக் புற்றுநோய் என்று பிணிப் புராணமே பெரும் புராணமாக வாழ்வை ஆக்கிரமித்தால், சிரமமாகத் தான் இருக்கும்! இருந்தாலும், தெளிந்தவர்கள் இதெல்லாம் வயோதிகத்தில் சகஜமே என்பதை உணர்வார்கள். எந்த நோய்க்கும் ஆளாகாத அதிர்ஷ்டசாலிகளோ, தூக்கம் வராமல் தவிப்பார்கள். ஒன்றை நாம் மனதில் ஆழமாக இறுத்த வேண்டும். உலகத்தில் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் மன உறுத்தல் கொண்டே இருப்பார்கள்.
அனைத்துக்கும் காரணம் நம் மனமே!
இப்பொழுதெல்லாம் அமைதியாக வாழ, குடும்ப வருத்தங்களைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி விட்டு, மனதை வேறு திசைகளில் செலுத்துங்கள் என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.
மனதை வருத்தாத, அதேசமயம் விளையாட்டாகச் சிலவற்றை யோசிக்கச் சில ஐடியாக்கள்!
- மருந்துகளுக்குக் காலாவதி (Expiry) தேதி நிர்ணயிக்கிறார்களே, அதில் விஷத்திற்கும் காலாவதி நிர்ணயித்து அச்சிடுகிறார்கள். காலாவதியான விஷத்தின் பவர் கூடுமா? அல்லது அது விஷத்தன்மையை இழக்குமா?
- நாம் வாசனைக்காக உபயோகிக்கும் செண்டில் (Scent), எந்த எழுத்து சைலண்ட், ‘S’ஆ அல்லது ‘c’யா?
- இரட்டையாகப் பிறந்தவர்கள், தங்களில் ஒருவர் திட்டமின்றி வந்தவர்கள் என்பதை எப்போதாவது உணர்வார்களா?
- ஆங்கில எழுத்தான ‘W’ வை உண்மையில் ‘டபுள்V’ என்றுதானே அழைக்கவேண்டும். ஓ! ‘U’வளைந்திருப்பதால் அதற்குச் சிறப்போ?
- ஒவ்வொரு முறையும் நாம் ஒரு பொருளைச் சுத்தம் செய்கையில், மற்றொன்றை அழுக்காக்குகிறோம் என்பதைச் சிந்திப்பதுண்டா?
- அதெப்படீங்க…‘SWIMS’ஐத் தலைகீழாகப் பார்த்தாலும் SWIMS ஆகவே தோன்றுகிறது. நம்மைத் தலைகீழாகத் தொங்கவிட்டாலும் நாம் நல்ல நிலையிலிருந்து பிறழக் கூடாது என்று நமக்கு உணர்த்தவா?
- சுமார் 70,80 வருடங்களுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் குதிரை வைத்திருந்தார்கள். பணக்காரர்கள் மட்டும் கார் வைத்திருந்தார்கள். இப்பொழுதோ… ஏகப்பட்டோர் கார் வைத்திருக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் மட்டுமே குதிரை வைத்திருக்கிறார்கள்.
- தியேட்டர்களில் உள்ள நாற்காலிகளில் நாம் உட்காருகையில், எந்தப் பக்கக் கைப்பிடி (arm) நமக்காக ஒதுக்கப்பட்டது?
- குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்பது உண்மையானால், இன்னும் உலகில் குரங்குகள் வசிப்பது எப்படி?
- ரெப்ரிஜிரேடரைச் சுருக்கமாக Fridge (ப்ரிட்ஜ்) என்கையில் வரும் ‘d’, Refrigerator என்று முழுதாகச் சொல்லும்போது வருவதில்லையே, ஏன்?
- இறுதிச் சடங்கை ஆங்கிலத்தில் ‘FUNERAL’ என்கிறோமே, அதில் முதல் மூன்று எழுத்து FUN, அதாவது ‘வேடிக்கை’ என்று வருகிறதே அது எதனால்? மரணமும் ஒரு வேடிக்கை விளையாட்டுத்தான் என்பதை நமக்குச் சொல்லவோ!
சரிங்க! எல்லாமே ஒரு ஃபன்(fun)னுக்காகத்தான்! மனசு கொஞ்சம் லேசாயிட்டா?
தூக்கம் வருதா? அப்போ தூங்குங்க!