தனிக்குடும்ப வாழ்வில் வயோதிகம் ஏன் 'சுமை' ஆகிறது? நெஞ்சை உலுக்கும் உண்மை!
தனி மரம் தோப்பாகாது. இன்று மழலை, அதன்பின் பருவம். இருபதில் தொடரும் வாலிபம், அதோடு குடும்ப பந்தம், சுற்றமும் நட்பும், அது முடிந்து வருவதோ முதுமை எனும் வயோதிகம். எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும் வயோதிகம் தாங்கும் வலிமை இல்லை. ஆசை இருக்கிறது துடிப்புடன் வாழ. ஆனால், அங்கே வருவதோ ஒடுங்கிப்போன நாடி நரம்புகள்தானே! ஓயாது உழைத்த வகையில் வயோதிகம் வந்தால் அது வரம் என்றும் சொல்லலாம். அதேநேரம் பாரம் என்றும் அதை சொல்லலாம்.
கூட்டுக் குடும்ப ஒற்றுமையில் வேற்றுமை இல்லை. தனிக்குடும்ப வாழ்வுதனில் வயோதிக பெற்றோா்களே தொல்லை. நிலைமை தலைகீழாய் மாறிவிட்டதே! அதுவே வேதனையின் எல்லை. காலம் செய்த குற்றம், இதில் யாரைச் சொல்லியும் பயனில்லை. நமக்கு நாமே நீதிபதி. வாழ்வில் ஆனந்தம் பேரானந்தமே! அதேநேரம் முதுமையில் ஆனந்தம் தேட வேண்டுமே!
வீட்டில் ஒரு பெரியவர் இருந்தால் அது சுகம். அதுவோ மெல்ல மெல்ல மாறி சுமையானதோ! முதியவர்களுக்கு முதுமையில் தேவை அன்பு, பாசம், நேசம், இவைதான். ஆனால், வாாிசுகளிடம் கிடைப்பதோ வெளிவேஷம். பெற்று வளா்த்து பிள்ளைகளை ஆளாக்கி வேறு பந்தம் தேடி புகுந்தகம் அனுப்பி, பின்னர் குலம் தழைக்க மருமகள் தேடி, பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடுவதே வாழ்வு. அதுதான் உறவின் இலக்கணம். இங்கே இலக்கணம் மீறியதால் வருகிறதே துயரம்.
ஆக, எந்தத் தருணத்திலும், எத்தகைய சூழலிலும் வயோதிக பெற்றோா்களை நேசியுங்கள். அவர்களை நேசிக்க வேண்டும். சந்தோஷமாய் வாழவைக்க வேண்டும். அதுவே அவர்களுக்கான அங்கீகாரம். நம்மைப் பெற்றெடுத்து வளா்க்கும்போது நம்மை அவர்கள் பாரமாக நினைக்கவில்லையே! அப்படிப் பெற்றோா்கள் நினைத்திருந்தால் இளமையில் சந்தோஷம் வாாிசுகளுக்கில்லையே!
ஆக, முதியவர்களை நேசியுங்கள். அவர்கள் மனது குழந்தை மனது. அவர்கள் உங்களுக்கு பாரம் இல்லை. அவர்களே உங்கள் வாழ்வின் ஆதாரம். உலக முதியோா் தினத்தில் முதியவர்களை மனம் கோணாமல், அன்பு அரவணைப்பு காட்டி உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் சாப்பிடாமல் உண்ணாமல் இருந்து நம் பசி அறிந்து உணவு வழங்கியவர்கள். அதனால்தான் நாம் இன்று பூமியில் நிலைத்து நிற்கிறோம்.
பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களையும் நிற்க வையுங்கள். தாங்கிப் பிடியுங்கள். உயிரே போனாலும் உங்கள் வசதிக்காக முதியோா் இல்லத்திற்குள் அவர்களை அடைக்காதீா்கள். மாறாக, அவர்களை உங்கள் அன்பு எனும் இதயச் சிறையில் வாழ்நாள் கைதியாக வைத்திருங்கள். அவர்களுக்கு இளமை முடிந்து முதுமை வந்துவிட்டது. நமக்கும் முதுமை வரும். ஆக, எந்த முதியவர்களாக இருந்தாலும் இயன்ற உதவியைச் செய்யுங்கள். இயலாமையில் தவிக்கும் முதியவர்களை நேசியுங்கள். தன்மானத்தைக்கூட அடகு வையுங்கள். ஆனால், வயோதிகத்தில் முதியவர்களை முதியோா் இல்லத்தில் அடகு வைத்துவிடாதீா்கள். புண்ணியத்தை சோ்த்தால் பாவத்தைத் தொலைக்லாமே!