

தொழில் நுட்ப மாற்றங்களால், பெண்களின் வீட்டு வேலைகள் எளிதாகியுள்ளன. கிச்சனில் குறைந்த நேரமே செலவிடுகின்றனர். ஆனாலும், நிறைய பேர் மனதளவில் சோர்வாகவே இருக்கிறார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு டென்சன். வீட்டிலிருப்பவர்களுக்கு சலிப்பு. இதைப் போக்க தங்களை ஸ்மார்ட்டாக மாற்றிக் கொள்வதன் மூலம் வருங்காலத்தில் வாழ்க்கை போரடிக்காமல் இருக்கும்.
அதற்கு அப்டேட்டாக இருப்பது பெஸ்ட். இன்றைக்கு ஆன்ட்ராய்டு போன் இல்லாத இல்லத்தரசிகள் அரிது. வாட்ஸ் அப்பில், பிரியமானவர்களுக்கு எண்ணங்களை மெசேஜாக டைப் செய்து அனுப்பலாம். அதை ரசித்து வரும் பதில் மெசேஜ்கள் உற்சாகம் தரும். ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம். அவர்கள் குரலில், விஷயங்களை கேட்டு லைக் மற்றும் கமெண்ட் போடும்போது மகிழ்ச்சி அதிகரிக்கும். பிடித்தமான விஷயங்கள் கூகுளில் கொட்டிக்கிடக்கும். முகநூலிலும் நிறைய விஷயங்கள் பார்க்கலாம். படிக்கலாம். பிடித்த இசையை சில நிமிடங்கள் ரசித்தாலே நெஞ்சுக்குள் பெய்திடும் "தூறல்".
குடும்பப் பெண்மணிகள், அனைவருக்கும் ஏதோ ஒரு துறையில் நாட்டம் இருக்கும். அது சம்பந்தமான ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம். தையலில் சிலருக்கு ஆசை இருக்கும். சிலருக்கு பெயிண்ட், டிராயிங்கில் விருப்பம் அதிகமாக இருக்கும்.
இன்று ஆரி ஒர்க்கிற்கு மவுசு அதிகம். குறுகிய காலத்திலேயே கற்றுக் கொள்ளலாம். தங்கள் கையால் செய்த ஆரி ஒர்க் பிளவுசை மணப்பெண் அணிந்திருக்கும்போது சட்டையில் மட்டுமா... மனசுக்குள்ளும் பூ பூக்கும். அது போலவே, வீடுகள், வணிக வளாகங்கள்,ஹோட்டல்களின் சுவர்களை அலங்கரிக்கும், பெயிண்ட் மற்றும் சித்திரங்கள் தங்களுடையது என்னும்போது நெஞ்சமெல்லாம் சந்தோசச் சாறல்தான்.
பல நேரம், பயணங்களில் தனிமை இனிமைதாங்க. கூட்டமாக நட்புடனோ, உறவுகளுடனோ போகும்போது, அவர்களுடைய சூழ்நிலை, விருப்பங்களுக்கேற்றவாறு பயணங்களை மாற்றி அமைக்கவேண்டி வரலாம். தனியே போகும்போது, பிடித்த இடத்தில் அதிக நேரம் இருக்கலாம். இஷ்டப்பட்ட விஷயங்களை ரசிக்கலாம். புதிய இடங்கள், அறிமுகமில்லாதவர்களின் சந்திப்பு, புதிய அனுபவங்கள் ஆர்வத்தைக் கூட்டி, வாழ்க்கையை இனிப்பாக்கும்.
முக்கியமான விஷயம் என்னன்னா, இல்லப்பொறுப்பு களையும், இஷ்டப்பணிகளையும் கலந்து குழப்பக் கூடாது. நாளைக்கான வேலைகளை இன்றே பட்டியலிடலாம். சமையல் செய்வது போன்ற அன்றாடப் பணிகள் போக மீதமிருக்கும் நேரம் ஓரளவு புரிபடும். அவர்களுக்கான அந்த பொன்னான நேரத்தை எப்படி கழிக்கலாம் என கனவு காணலாம். அப்போதானே நனவாகும்.
பிடித்தமான விஷயமானாலும் விடாது உழைத்தால், உடல் களைப்பாகி மனமும் சோர்ந்து போரடித்துவிடும். அதை தவிர்த்து, உற்சாகம் பெருக சின்னதாக ஒரு பிரேக் அவ்வப்போது அவசியம். நிதானமாக ரிலாக்ஸ் ஆகலாம். தேவையான தூக்கமும், அவசியமான சத்தான உணவும் எக்ஸ்ட்ரா எனர்ஜி தரும். அப்புறமென்ன குடும்பத் தலைவிகளே, ஒரே மாதிரியான நடைமுறை வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தி சலிப்புக்கு குட் பை சொல்லி, சந்தோசமாக வாழுங்கள்.
