
‘குட்டித் தூக்கம்’ எனப்படும் மதிய நேரத்தில் எடுத்துக்கொள்ளும் சிறிது நேர தூக்கமானது, நம்முடைய செயல் திறனை மேம்படுத்தும். அதிகபட்சம் ஒரு அரை மணி நேரம் தூங்குவது நம்மை உற்சாகமாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ள உதவும். குட்டித் தூக்கம் போடுவது அந்நாளை மீண்டும் ஆற்றலுடன் தொடங்குவதற்கான உந்துதலைத் தரும். குட்டித் தூக்கத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பு அலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
1. மூளையை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் வைத்திருக்க: வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக பலரும் இன்று தூக்கமின்மையினால் அவதிப்பட்டு வருகிறார்கள். கடுமையான வேலைகளுக்கு இடையில் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுப்பது மூளையை புத்துணர்வுடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். பகலில் சிறிது நேரம் தூங்கி எழுவது அதிக விழிப்புணர்வையும், நினைவாற்றலையும் தருவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. நாள் முழுவதும் ஆற்றலை தக்கவைத்துக்கொள்ள கணினியில் இருப்பது போல நம் ஆற்றல் குறையும்பொழுது ஒரு ரீஸ்டார்ட் பட்டனை அழுத்தி மீண்டும் சார்ஜ் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டன்தான் இந்த குட்டித் தூக்கம் என்பது.
2. உடலின் வெப்பநிலையை சமப்படுத்தும்: பிற்பகல் உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்குவது நம் உடலினுடைய வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவும். உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் நிறைய கோளாறுகள் ஏற்படும். அவற்றிலிருந்து மீள்வதற்கு இந்த சின்ன தூக்கம் உதவும்.
3. உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும்: பிற்பகலில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுப்பது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் சிறிது நேரமாவது மதியத்தில் ஒரு குட்டித் தூக்கம் போடுவது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும். இப்படி மனமும் உடலும் அமைதி அடைவதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்னைகளின் அபாயத்தை குறைத்து, வலுவான நோய் எதிர்ப்பு தன்மையை வழங்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4. நினைவாற்றலை மேம்படுத்தும்: பிற்பகலில் சிறிது நேரம் படுத்து உறங்குவது நம் நினைவுகளை ஒருங்கிணைத்து கற்றலை மேம்படுத்தும். நினைவாற்றலை அதிகரிக்கும். நம் சிந்தனையை தளர்த்தவும், புதிய யோசனைகள் வெளிவரவும் உதவும். படைப்பாற்றலை மேம்படுத்தும் திறன் மதிய நேர குட்டித் தூக்கத்திற்கு உண்டு. நமது அறிவாற்றல் மற்றும் கிரியேட்டிவிட்டியை மேம்படுத்த உதவும்.
5. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்: மதிய நேரத் தூக்கம் கார்டிசோலின் அளவை குறைக்க உதவும். இதனால் மன அழுத்தம், பதற்றம், கவலைகளைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஹார்மோன்களின் சமநிலையை மேம்படுத்துகிறது. பகல் பொழுதில் குட்டித் தூக்கம் போடுவதால் நம்முடைய மனம் ரிலாக்ஸ் அடைந்து எண்ண ஓட்டம் மேம்படும். கவலை, சோர்வு போன்றவை குறைந்து உடல் புதுவித ஆற்றலைப் பெறும் என்று கூறப்படுகிறது.
6. மதிய நேரத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்குமா?: மதிய நேரத்தில் சாப்பிட்டவுடன் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தூக்கம் என்பது இயற்கையான பழக்கங்களில் ஒன்று. சாப்பிட்டுவிட்டு தூங்குவதால் உடல் எடை கூடிவிடும் என்பது தவறானது. அதிகப்படியான மாவு சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதும், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு மூன்று, நான்கு மணி நேரம் தூங்கினால் நிச்சயம் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். ஆனால், குட்டித் தூக்கம் (15 முதல் 30 நிமிடங்கள் வரை தூங்குவது) உடல் எடையை கூட்டாது. உடல் சோர்வை குறைத்து நம்மை சுறுசுறுப்பாகும். குட்டி தூக்கம் என்பது சிறிது நேரம் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நேரம் தூங்குவது இரவு நேர தூக்கத்தை கடினமாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.