'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' - ஒரு கதை படிப்போமா நண்பர்களே!

Man and boy
Man and boy
Published on

'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பது பழமொழி. நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளிடமும் நட்புகளிடமும் பல நேரங்களில் குறைகளை மட்டுமே காண்பதால் நம்மால் அந்த உறவுகளை தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாளலாம் என்பதை ஒரு கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு இளைஞர் ஒருவர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவருக்கு சிறிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. சிறிது நாட்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால் அந்த நிறுவனத்தில் அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் சரியான சிடுமூஞ்சி. எந்த ஒரு சிறு தவறு என்றாலும் உடனடியாக சற்றும் தயங்காமல் திட்டி விடுவார். மேலதிகாரியின் அத்தகைய குணம் அந்த இளைஞனுக்கு நாளுக்கு நாள் மன உளைச்சலை கொடுத்தது. வறுமையின் காரணமாக வேலைக்கு சென்றாலும் கூட அவரால் மேலதிகாரியின் குணத்துக்கு ஈடு கொடுத்து அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை.

இவ்வாறு சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் அந்த இளைஞர் அருகில் உள்ள கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்திருப்பதை அறிந்து அவரை பார்க்கச் சென்றார். அந்த துறவியை பார்ப்பதற்காக நிறைய மக்கள் அங்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரும் தம்முடைய மனக்குறையை அவரிடம் கூறி ஆலோசனை பெற்றுச் சென்றனர். சிறிது நேரம் காத்திருந்த பின் அந்த இளைஞன் துறவிமுன் சென்றான். "துறவி இளைஞனை பார்த்து உனக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.

"ஐயா, எனக்கு நெடு நாட்களாக வேலையே கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் எனக்கு மேலதிகாரியாக இருப்பவர் சரியான சிடுமூஞ்சியாக இருக்கிறார். சிறு தவறு செய்தாலும் உடனே கோபப்பட்டு வார்த்தைளை நெருப்பென கொட்டி விடுகிறார். என்னால் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் நான் வேலையை விட்டு விடலாம் என நினைக்கிறேன்," என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
மனோதத்துவத்தின் படி நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதை காட்டும் 7 பழக்கங்கள்!
Man and boy

இளைஞர் கூறியதைக் கேட்ட துறவி சிறிது நேரம் அமைதி காத்தார். மெதுவாக இளைஞரிடம், "வேலையை விட்டு விடலாமா? அல்லது வேண்டாமா? என்பதை மூன்று மாதங்கள் கழித்து முடிவு செய்யலாம். அதற்கு முன் உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன். நீ நாளைமுதல் அந்த மேலதிகாரியை ஒரு முறையேனும் பாராட்டி விடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி பாராட்டுவதற்காக அந்த மேலதிகாரியிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை உற்று நோக்கு. ஒரு நாளைக்கு ஒரு பாராட்டு என வைத்துக் கொள். மூன்று மாதங்கள் கழிந்த பின் மீண்டும் வந்து என்னை பார்!" என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார் துறவி.

மறுநாள் வழக்கம்போல் இளைஞன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றான். மேலதிகாரியுடன் பேசும் போது அவர் அணிந்திருந்த சட்டை நன்றாக இருந்ததால், "தங்களுடைய ஆடை தேர்வு நன்றாக இருக்கிறது" என பாராட்டினான். மறுநாள் மேலதிகாரி அந்த இளைஞனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதை டைப் செய்து எடுத்து வருமாறு கூறினார். அந்தக் கடிதத்தை டைப் செய்யும் போது அதன் ஆங்கில நடை நன்றாக இருப்பதை கவனித்த இளைஞன், அவரிடம் மீண்டும் கடிதத்தை கொடுக்கும் போது, "இக்கடிதத்தில் எழுதியுள்ள ஆங்கில நடை நன்றாக இருக்கிறது!" என பாராட்டினான். இப்படியாக தொடர்ந்து மூன்று மாதங்கள் கழிந்தன.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை வாழ்வதற்கே! எப்படி வாழ்வது?
Man and boy

அந்த இளைஞன் மீண்டும் அருகில் உள்ள கிராமத்திற்கு துறவியை தேடிச் சென்றான். இவனைப் பார்த்த துறவி, "இப்பொழுது நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய்? வேலையை ராஜினாமா செய்து விடலாமா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞனோ, "வேண்டாம், நான் இப்பொழுது மேலதிகாரியுடைய தனிப்பட்ட உதவியாளராக பதவி உயர்வு பெற்று விட்டேன். நீங்கள் கூறுவதை நான் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து அவரிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே என்னுடைய பார்வைக்கு பட்டது. அதனால் இப்பொழுது வேலையை ராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கு இல்லை," என்று கூறினான். இளைஞனின் மன மாற்றத்தை கண்ட துறவி மிகவும் மகிழ்ந்து அவனை ஆசிர்வாதம் செய்து வழியனுப்பினார்.

இதையும் படியுங்கள்:
சிறப்பாய், களிப்பாய் வாழ… நல்ல விஷயங்களை சிந்தியுங்கள்!
Man and boy

நாமும் நம்முடைய வாழ்வில் இருக்கும் உறவுகளையும் நட்புகளையும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கு அவர்களிடம் இருக்கும் குறைகளைத் தாண்டி நிறைகளை பார்ப்பதற்கு கற்றுக் கொண்டோமானால் நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சி தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com