
உங்களை நீங்கள் நேசிப்பது என்பதே உங்களின் வெற்றிக்கு முதல் படிக்கட்டு ஆகும். மற்றவர்கள் செய்த சாதனையைப் பார்க்கிறீர்கள். அதுபோல் சாதனை செய்யும் ஆசை உங்களுக்கும் வருகிறது. அப்படி ஆசை மட்டும் வந்தால் போதாது, நம்மால் சாதிக்க முடியும் என்ற உறுதியான சிந்தனையும் வேண்டும்.
அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களை முதலில் நேசிக்கவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால். "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்களே. அது போல்தான் உங்களை நீங்கள் நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
உங்களிடம் இருக்கும் ஆற்றலை நீங்கள் தெளிவாக உணரவேண்டும். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாவிட்டால் ஒன்றும் சாதிக்க முடியாது.
உங்கள் ஆற்றல் அறிந்து தெரிந்து கொள்ளும் போதுதான்,எதையும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.
தன்னம்பிக்கை பிறந்துவிட்டாலே உங்களை நேசிக்கவும் கற்றுக் கொண்டுவிட்டீர்கள்.உங்களின் சாதனைக்கு உருவமோ அழகோ தேவையில்லை. அறிவும், ஆற்றலும் இருந்து தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் சாதிக்க முடியும்.
அன்றும், இன்றும் சாதித்துக் காட்டியவர்கள் அனைவரும் அழகை வைத்தோ, உருவத்தை வைத்தோ சாதிக்கவில்லை. தம் அறிவையும், செயல்படும் திறனையும் வைத்துதான் சாதித்தார்கள்.
நம்மால் முடியுமா? என்ற கேள்வி மட்டும் உங்களுக்குள் வரக்கூடாது. இந்தக் கேள்வி மட்டும் உங்களுக்குள் எழுந்து, உங்களை ஆட்சி செய்தால் நீங்கள் செய்யவிருக்கும் சாதனைக்கு அதுவே தடைக்கல்லாக அமைந்துவிடும்.
உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துவிட்டால், தேசிப்பும் உடனே வந்துவிடும். தன்னம்பிக்கையான வார்த்தைகளை வரமாகப் பெறுங்கள். அதுவே உங்களின் இலட்சியப் பாதையை அடைய வழிவகுக்கும்.
திரை உலகில் அழகு இல்லாத நடிகர்களும் தம் திறமையால் மிகவும் புகழ் பெற்றிருக்கிறார்கள்.
அழகு என்பது என்ன? முக அழகு, உடைகளில் மட்டும் இல்லை. வாழ்க்கையில் நாம் நடந்து கொள்ளும் முறையிலும்தான் அது இருக்கிறது.
உங்கள் மனம் அழகு பெற்றால் போதும். அப்படி இருக்குமாறு, நீங்கள்தான் செயல்படவேண்டும், சோம்பலைத் தவிர்த்து விடுங்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருங்கள் .
உங்களின் தகுதிக்கேற்ப செயல்பட்டால் வெற்றி பெறமுடியும் உங்களால் முடியாது என்பது இல்லை.
தகுதி இல்லாத இடங்களில், உங்கள் செயல்திறனைக் காட்டி வீணாக்க வேண்டாம். நம் தகுதியை மேலும் முறையாக வளர்த்துக் கொண்டு. முன்னேற்றம் காணமுடியும் என நம்புங்கள்.
இந்த நம்பிக்கை மட்டுமே உங்களை நேசிக்கச் செய்யும். உங்களை முழுமையாக நீங்கள் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் உலகம் உங்கள் கையில்தான்.
உங்களை நீங்கள் நேசிக்கும் போதுதான் அளவிட முடியாத புத்துணர்வைப் பெறுகிறீர்கள். உங்களின் செயல்பாட்டிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படமுடியும்.
முதலில் உங்களை நீங்களே அக்கறையுடன் தெளிவாக நேசிக்கக் கற்றுக்கொண்டாலே உங்களது வாழ்க்கை இனிமையாக அமையும்.