

வாழ்க்கையில் தான் என்ற அகந்தை வந்துவிட்டால், மூலைக்கு அழையாத விருந்தாளியாக தலைக்கனம் எனும் அரக்கன் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுவான். பிறகு அதிலிருந்து விலகி வருவது ரொம்ப கஷ்டம். ஆகவேதான் என்பதை புறம் தள்ளி நாம் என்ற ஒற்றை சொல்லில் அறநெறி பற்றி வாழ்வோம்.
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று நம் எண்ணங்கள்.வாழ்வில் எண்ணங்கள் பிறழ் தழுவினால், வாழ்க்கையே உருக்குலையச் செய்துவிடும். நம்முடைய எண்ணங்களில் மாசற்ற நல்ல மாற்றங்கள் உருவாக்கி வாழ்ந்தால், பல மாற்றங்களோடும், ஏற்றங்களோடும் சிறப்பான வாழ்க்கை பயணம் உருவாகும். எண்ணங்களில் கல்மிஷம் தவிர்த்து, வாழ்வோம்.
வாழ்க்கையில் தீர்க்கமான பார்வை என்பது மிகவும் முக்கியமான அம்சம். நதியின் சீரான ஓட்டம் போன்று வாழ்க்கை பாதையில், பல நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்து நம்மை வெற்றிக்கான இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே வாழ்க்கையில் கள்ளப் பார்வை தவிர்த்து வாழ்வோம்,
வாழ்க்கையில் ஆரோக்கியமான போட்டி இருப்பது அவசியம். அதில் பொறாமை விஷம் கலக்க வேண்டாம். பொறுமை கொண்ட மனம், வாழும் நெறிமுறை நல் வித்துக்களை விதைக்காது. மாறாக மனிதம் எண்ணங்களை வேரறுக்கும் தகாத செயல்களை செய்ய தூண்டி, வீழ்ச்சி நோக்கி நம்மை தள்ளிவிடும். போட்டியில் வெல்வோம். பொறாமையை தவிர்ப்போம்.
வாழ்க்கையில் மெளனமாக இருந்து காரியத்தை சாதிக்கும் வல்லமை நம்மிடம் இருந்தால், எதிர்வினை என்ற வார்த்தை அர்த்தமற்று, அர்த்தமுள்ள வாழ்க்கை சிறகுகளை விரித்து சிகரம் தொடும். ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கும். ஆகவே வார்த்தையை அளந்து பேசுவோம். நம்மிடம் மலரும் வார்த்தைகள், மற்றவர்கள் மனதில் வாசம் செய்யட்டும்.
வாழ்க்கையில் பணமும் பதவியும், இவைகள் இரண்டும் மட்டுமே இருந்து விட்டால், ஒளிமயமான எதிர்காலம் வந்துவிடாது. அவற்றோடு ஒழுக்கம் எனும் மாண்பு விழுமியங்கள் சார்ந்து இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஒழுக்கம் இல்லாத மனமும், உப்பில்லாத உணவும் குப்பைக்கு சமம். எனவே ஐயன் வள்ளுவன் குறலுக்கு ஏற்ப 'ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க்கையில் விரலுக்கு ஏற்ற வீக்கம் போல், வரவுக்கு ஏற்ற செலவு செய்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகி, ஆசைக்கு அடிபணிந்து, கடன் சுமை ஏற்றி, கடைசியில் திக்கு தெரியாத நிலையில் வாழ்ந்தால், மீள்வது கடினம், ஆசை என்பது கூட இருந்து குழி பறிக்கும். அதுவே பேராசையாக மாறி, நம்மை அந்த குழியிலேயே தள்ளிவிடும். வரம்போடு வாழ்வோம். நிலைத்து நிற்ப்போம்.
வாழ்க்கையில் தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது. ஏற்ப்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்வோம். எப்படியும் வாழ்வது என்பது காட்டாறு. இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஓடும் நதியைப் போன்றது. நதிக்கு கரைகள்போல், நமக்கு வாழ்வியல் நெறிகள் என்பதை உணர்வோம்.
வாழ்க்கையில் வாழ்வியல் நெறிகள் படித்து பார்த்து, பாதுகாத்து வைப்பது அல்ல என்பதை புரிந்து கொள்வோம். அதனை வாழ்க்கையில் தவறாமல் பின்பற்றி நடப்போம். வாழ்க்கையில் உச்சம் எட்டுவோம்!