மனசும் வாக்கும் ஒன்றா? உண்மை பேசும் அனைத்தும் சத்தியமாகுமா? கணிதம் சொல்லும் விளக்கம்!

மனதில் உள்ளதை அப்படியே பேசுவதும், பிறர் குற்றம் சொல்வதும் ஏன் சத்தியமாகாது?
சத்தியம்
சத்தியம் Gemini image
அகிலா சிவராமன்

கடந்த 5 வருடங்களாக அகிலா சிவராமனின் கட்டுரைகளும் கதைகளும் கிட்டத்தட்ட 500க்கும் மேல் வெளி வந்துள்ளன. இறைவன் மீது பல பாடல்களை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதை 'புயலின் மறுபக்கம்' 2025 ஜனவரியில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். 'கல்கியில் எழுத ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய திறன் என்னவென்று எனக்கே தெரிய ஆரம்பித்தது' என்று கூறும் அகிலா, சமூக நலன் அடிப்படையிலும், தேச நலன் அடிப்படையிலும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்.

Updated on: 

இந்த உலகத்திலுள்ள அனைத்து மக்களும் அதாவது எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுடைய வாழ்நாளில் இரண்டு முக்கியமான விஷயங்களை கடைபிடித்தே ஆக வேண்டும். 

முதலாவதாக அன்பு அதாவது அஹிம்சையை கடைபிடிக்க வேண்டும். அடுத்தபடியாக உண்மை அதாவது சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும். சத்தியம் என்றால் என்ன? வாக்கும், மனசும் ஒன்றாக இருப்பதற்கு பெயர் தான் சத்தியம். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதை அசத்தியம் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். சரி இந்த சத்தியம் என்பது எப்படி இருக்க வேண்டும்?? எப்படி எல்லாம் பேசினால் அது சத்தியமாகாது? பார்க்கலாமா?

சத்தியம் என்றால் மனதிலும் வாக்கிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சரி அதற்காக மனதிலுள்ள எல்லாத்தையும் வெளிப்படையாக சொன்னால் அது சத்திய வார்த்தையாகுமா என்றால் கண்டிப்பாக ஆகாது.உதாரணத்திற்கு நம்மை சுற்றி பலவிதமான அயோக்கியர்களும் கெட்டவர்களும் இருப்பது சகஜம் தான். அதைப் பார்த்து ஒரு சில பேருக்கு மனம் கசந்து போய் கோபம் உண்டாகிறது.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்லி அவன் செய்த தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அவர்களுக்கு வாக்கும் மனதும் ஒன்றாகத்தான் இருக்கிறது. அதில் கொஞ்சம் கூட சந்தேகமுமில்லை, பொய்யுமில்லை. ஆனாலும் அப்படிச் சொல்வதால் அவர்களுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. ஆகவே இந்த வாக்கு முற்றிலும் உண்மையாக இருந்த போதிலும் அதை சத்தியம் என்று எடுத்து கொள்ள முடியாது.

அடுத்தபடியாக, நீங்கள் மனதில் ஒரு கெட்ட எண்ணத்தை வைத்துக்கொண்டு அந்த எண்ணத்தையே வெளிப்படையாக அடுத்தவர்களிடம் பேசினால் அதுவும் சத்தியமாகாது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் திடீரென நான்கு நாட்கள் வேலைக்கு வரவில்லை. அந்த காரணத்தினால் நீங்கள் கோபமாக மனதிற்குள், அவள் வேலைக்கு வரட்டும், கண்டபடி திட்டி அவள் சீட்டை கிழித்து அனுப்பி விடுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

இவ்வாறு மனதில் நினைத்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில பேர் நேரடியாக அதை சொல்ல முடியாமல் மேலோட்டமாக திட்டி விட்டு போய் விடுவார்கள். ஆனால் ஒரு சில பேர் எனக்கு உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேச தெரியாது என்று சொல்லிக் கொண்டு மனதில் இருந்ததை அப்படியே சொல்லி அந்த வேலை செய்யும் பெண்மணியை கண்டபடி கடிந்து கொண்டு வேலையில் இருந்தும் எடுத்து விடுவார்கள். இதற்குப் பெயர் சத்தியமா?? மனதில் இருந்ததை அப்படியே சொல்லும் இந்த மாதிரியான வார்த்தைகள் சத்தியத்திற்கு நிச்சயமாக ஈடாகாது.

மூன்றாவதாக, மனதிலே கெட்ட எண்ணத்தையும் தீய எண்ணத்தையும் வைத்துக் கொண்டு அதை அப்படியே நடைமுறையில் சொல்லியும் செய்தும் காண்பித்தால் நிச்சயமாக அதுவும் சத்தியமாகாது. கடவுளே!! எனக்கு ஏன் சத்திய சோதனை ஏன் கொடுக்கிறாய்? என்று ஒரு சில பேர் கேட்பது உண்டு.

சத்தியம்
சத்தியம்Gemini image

சத்ய சோதனை என்றால் என்ன?? எந்த மாதிரியான சோதனைகள் வந்த போதும் துன்பங்கள் வந்த போதும் எவன் ஒருவன் மனதில் நல்ல எண்ணத்தை வைத்துக் கொண்டு நல்லதையே பேசிக்கொண்டு அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காதவாறு மனதில் நினைத்து கொண்டு அதன்படியே வாக்கில் உண்மையாக நடந்து கொள்கிறானோ அவனுடைய வாக்கு தான் சத்தியம். அப்படிப்பட்டவர்களை தான் கடவுள் அதிகமாக சோதிப்பார். அந்த சோதனை தான் சத்திய சோதனை.சரி இந்த மூன்று வகையான விளக்கங்களையும் ஒரு கணக்கின் மூலமாக இன்னும் விவரமாக புரிந்து கொள்ளலாமா?

இதையும் படியுங்கள்:
தீர்ப்புகளைத் தள்ளி வைப்போம்: அவசர முடிவுகளால் சிதையும் உறவுகளைக் காக்கும் வழி என்ன?
சத்தியம்

1. (-3) × (-3) = 9

இதில் -3 ஐ -3 ஆல் பெருக்கும் போது அதன் விடை +9 வருகிறது. அதாவது நீங்கள் பார்த்த கெட்ட விஷயமும் பேசிய கெட்ட விஷயமும் முற்றிலும் உண்மையாக இருந்த போதிலும், இதை பேசுவதால் எந்த பயனுமில்லை. +3ஐ + 3 ஆல் பெருக்கும் போதும் +9 தான் வரும், ஆனால் -3க்கும் +3க்கும் மதிப்பு வேவ்வேறு தானே இருக்கும். அதைப் போல தான் நீங்கள் பேசியது உண்மையாக இருந்தாலும் இந்த வாக்கிற்கு அதாவது அடுத்தவர்களின் கெட்ட குணங்களை பற்றி பேசுவதினால் பயனில்லை.

2. (-3) + (-3) = -6
3. (+3) + (+3) = +6

இங்கே இரண்டிற்கும் விடை 6 தான் வந்திருக்கிறது. ஆனால் ஒன்று (-) குறியீட்டிலும் மற்றொன்று (+) குறியீட்டிலும் வந்திருக்கிறது. (+) குறியீட்டில் வந்த விடைக்கு தான் மதிப்பு கிடைக்கும். அதாவது நீங்கள் தீயதையோ அல்லது கெட்டதையோ மனதில் நினைத்து கொண்டு அதையே பேசி அதன்படியே நடந்து கொண்டால் உங்களுக்கு விளைவும் கெடுதலாக தான் இருக்கும். மேலும் உங்களின் மதிப்பும் மற்றவர்களின் மத்தியில் எதிர்மறையாக தான் இருக்கும். நல்லதையே நினைத்து அதன்படியே பேசி நடந்து கொள்ளும் போது பலனும் நேர்மறையாக தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள்?
சத்தியம்

மற்றவர்களின் மத்தியிலும் உங்களை பற்றி உயர்வான கருத்து தான் இருக்கும். இப்போது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன். ஆகவே, எனக்கு மனதில் இருக்கிறதை அப்படியே சொல்லி விடுவேன், செய்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டு மனதில் இருப்பது போல் மற்றவர்களுக்கு தீங்கிழைத்து கொண்டோ அல்லது கடினமான வார்த்தைகளால் புண்படுமாறோ பேசாதீரகள். அதை போல அடுத்தவர்கள் செய்த குற்றத்தையும் சொல்லி கொண்டே இருக்காதீர்கள். இவை இரண்டுமே சத்தியமாகாது. நல்லதையே நினைத்து அதையே பேசி அதன்படியே நடந்து கொள்ளுங்கள். அதுதான் உண்மையான சத்தியம்.

உள்ளொன்று வைத்துப் பேசுவது தவறு என்றாலும், மனதில் தோன்றிய கசப்பையும் கோபத்தையும் அப்படியே கொட்டித் தீர்ப்பதோ, பிறர் செய்த குற்றங்களையே பேசிக் கொண்டிருப்பதோ ஏன் உண்மையான சத்தியமாகாது என்ற தெளிவை வாசகர்கள் பெறுவார்கள்.