படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள்?

ஒவ்வொரு நாளும் நம்முடைய எண்ணங்களைச் சீரமைத்து மன அமைதியைப் பெறுவது எப்படி?
மன அமைதி
மன அமைதி Gemini image
முனைவர் மா. அன்பரசு

வேளாண் அறிவியலில் முனைவர் (Ph.D.) மற்றும் முதுமுனைவர் (Post-Doctoral Fellow) பட்டம் பெற்றவர். உழவியல் துறை (Agronomy) உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் உள்ளிட்ட படைப்பிலக்கியத் தளங்களிலும் பல வருடங்களாக தடம் பதித்து வருகிறார்.

Updated on: 

வாழ்க்கையில் நமக்கு மிகவும் கடினமான வேலை, மற்றவர்களைப் புரிந்துகொள்வதல்ல; நம்மையே புரிந்துகொள்வது தான்.

ஒரு நாள் அலுவலகத்தில் மேலதிகாரி நம்மைக் கடிந்துகொள்கிறார். வீட்டுக்கு வந்தால், நாம் எதிர்பார்த்த அன்பு கிடைப்பதில்லை. நண்பர் ஒருவர் நம்மைப் புறக்கணிக்கிறார். நாம் பெரிதும் நம்பிய ஒருவர் நம்முடைய நம்பிக்கையை உடைத்துவிடுகிறார். இத்தனைக்கும் பிறகு இரவு படுக்கையில் கண்களை மூடினாலும் தூக்கம் வருவதில்லை. நடந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் மனம் அசைபோடுகிறது.

'நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதோ?'

'அவர் அப்படிச் செய்திருக்க வேண்டாமே!'

'எல்லோருக்கும் நான் மட்டும் ஏன் இப்படியிருக்கிறேன்?'

இப்படிப் பல கேள்விகள் நம்முடைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன. உண்மையில், நம்முடைய மனதுடன் நாமே நடத்திக்கொள்ளும் உரையாடல்கள் தான் சில நேரங்களில் நம்முடைய மிகப்பெரிய பிரச்னையாக மாறிவிடுகின்றன.

மற்றவர்களைக் கையாள்வதற்குப் பல வழிமுறைகளைக் கற்றுக்கொள்கிறோம். குழந்தைகளை எப்படிக் கையாள்வது, பணியாளர்களை எப்படிக் கையாள்வது, உறவுகளை எப்படிப் பேணுவது என்று புத்தகங்களிலும் பயிற்சி வகுப்புகளிலும் கற்றுக் கொள்கிறோம்.

ஆனால், கோபம் வரும்போது நம்மைக் கையாள்வது எப்படி? தோல்வி அடையும்போது நம்மைத் தேற்றுவது எப்படி? தனிமையில் இருக்கும்போது நம்முடைய மனதைச் சமாதானப்படுத்துவது எப்படி? இதையெல்லாம் யாரும் நமக்குத் தனியாகக் கற்றுக் கொடுப்பதில்லை.

முதலில் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்!

ஒரு சிறிய சம்பவம். அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரிடம் மேலதிகாரி, "நீங்கள் செய்த வேலையில் நிறைய குறைகள் இருக்கின்றன" என்று சொல்கிறார். உடனே அவர் கோபப்படுகிறார். அன்று முழுவதும் யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. வீட்டுக்குச் சென்றதும் மனைவியிடம் எரிந்து விழுகிறார். குழந்தைகள் ஏதாவது கேட்டாலும் சத்தம் போடுகிறார்.

மன அமைதி
மன அமைதி Gemini image

மேலதிகாரி சொன்ன சில வார்த்தைகள் அலுவலகத்திலேயே முடிந்திருக்க வேண்டியவை. ஆனால், அவற்றை மனதுக்குள் சுமந்துகொண்டு குடும்பத்தினரிடமும் வெளிப்படுத்துகிறார். இங்கே பிரச்னை மேலதிகாரி சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல; அந்த வார்த்தைகளைக் கையாளத் தெரியாத நம்முடைய மனநிலையும் தான்.

நமக்குக் கோபம் வரலாம். வருத்தம் ஏற்படலாம். பொறாமை தோன்றலாம். பயம் நம்மை ஆட்கொள்ளலாம். இவை மனிதர்களுக்கு இயல்பான உணர்வுகள். அவற்றைத் தவறு என்று மறுப்பதற்குப் பதிலாக, அவை ஏன் உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கோபம் வரும்போது, 'எனக்குக் கோபம் வரக்கூடாது' என்று நம்மை நாமே கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, 'எனக்கு இப்போது ஏன் கோபம் வருகிறது?' என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த ஒரு கேள்வி நம்முடைய எதிர்வினையை மாற்றக்கூடும்.

எதிர்வினைக்கும் பதிலளிப்பதற்கும் வித்தியாசம் உண்டு!

யாராவது நம்மை அவமதித்தால் உடனே பதிலுக்குப் பதில் பேசுவது எளிது. ஆனால், சில நொடிகள் அமைதியாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.

ஒருவர் நம்மிடம் கடுமையாகப் பேசுகிறார் என்பதற்காக நாமும் அதே கடுமையுடன் பேசவேண்டிய அவசியமில்லை. அவருடைய செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதற்கு நாம் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும்.

ஒரு நிமிடக் கோபம் பல ஆண்டுகால உறவை முறித்துவிடலாம். அதேபோல், ஒரு நிமிடப் பொறுமை பல ஆண்டுகால உறவைக் காப்பாற்றி விடலாம்.

அமைதி என்பது எல்லாவற்றையும் சகித்துக்கொள்வது அல்ல. எப்போது பேச வேண்டும், எப்போது விலக வேண்டும், எப்போது மன்னிக்க வேண்டும், எப்போது நமக்கான எல்லையை வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது தான் உண்மையான மனப்பக்குவம்.

மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்!

இன்றைய உலகில் நம்முடைய மகிழ்ச்சியைத் திருடிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று ஒப்பீடு.

ஒருவர் கார் வாங்கிவிட்டார்; நம்மிடம் இன்னும் இருசக்கர வாகனம் தான் இருக்கிறது. ஒருவர் வீடு கட்டிவிட்டார்; நாம் இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். ஒருவர் உயர்ந்த பதவிக்குச் சென்றுவிட்டார்; நாம் இன்னும் அதே இடத்தில் இருக்கிறோம்.

இப்படிப் பிறருடைய வாழ்க்கையை அளவுகோலாக வைத்துக்கொண்டு நம்முடைய வாழ்க்கையை மதிப்பிடுகிறோம். ஆனால், அவர்களுடைய பயணமும் நம்முடைய பயணமும் ஒன்றல்ல. அவர்களுடைய வாய்ப்புகள், குடும்பச் சூழல், பொருளாதார நிலை, போராட்டங்கள் என எல்லாமே வேறுபட்டவை.

நேற்று இருந்த நம்மைவிட இன்று சிறிதளவாவது முன்னேறியிருக்கிறோமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். மற்றவர்களை முந்துவதற்காக ஓடிக்கொண்டிருப்பதை விட, நம்முடைய நேற்றைய நிலையை முந்துவதற்காக ஓடுவது ஆரோக்கியமானது.

தோல்வியையும் தனிமையையும் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்!

தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவல்ல. அது நாம் எதிர்பார்த்த முடிவு கிடைக்காத ஒரு நிகழ்வு மட்டுமே. ஒரு தேர்வில் தோற்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கிறோம். ஒரு வேலை கிடைக்கவில்லை என்றால் நம்முடைய திறமையையே சந்தேகிக்கிறோம். காதலில் தோற்றால் இனி யாரையும் நம்ப முடியாது என்று முடிவெடுக்கிறோம்.

ஆனால், ஒரு தோல்வி நம்முடைய முழுத் தகுதியையும் தீர்மானிக்க முடியாது.

அதேபோல், தனிமையும் எப்போதும் தண்டனையல்ல. சில நேரங்களில் நம்மை நாமே சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு. கூட்டத்தில் இருக்கும்போது மற்றவர்களின் குரல்களைக் கேட்கிறோம். தனிமையில் இருக்கும் போதுதான் நம்முடைய மனதின் குரலைக் கேட்க முடிகிறது.

தனியாக இருப்பதற்கும் தனிமையில் தவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மனதுக்குப் பிடித்த புத்தகத்தை வாசிப்பது, ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வது, தோட்டத்தில் செடிகளுடன் நேரம் செலவிடுவது, மனதில் இருப்பதை எழுதுவது என நமக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

நம்மை நாமே மன்னித்துக்கொள்ள வேண்டும்!

மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிக்கச் சில நேரங்களில் தயாராக இருக்கிறோம். ஆனால், நம்முடைய தவறுகளை மட்டும் பல ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

'அன்று அப்படிச் செய்திருக்கக் கூடாது.'

'அந்த வாய்ப்பைத் தவறவிட்டிருக்கக் கூடாது.'

'அந்த மனிதரை நம்பியிருக்கக் கூடாது.'

கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். தவறு செய்த நம்மைத் தண்டித்துக்கொண்டே இருப்பதால் அந்தத் தவறு சரியாகிவிடாது. நம்முடைய தவறுகளை ஒப்புக்கொள்வது பலவீனமல்ல. அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் எழுவது தன்னம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
முதுமையில் சுய அன்பை மீட்டெடுப்பது எப்படி? இனி உங்களுக்காக வாழும் பொற்காலம்!
மன அமைதி

நமக்கான சில நிமிடங்கள்!

ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன்பு நம்மிடம் நாமே மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்.

இன்று நான் செய்த நல்ல விஷயம் என்ன?

இன்று நான் எங்கே தவறு செய்தேன்?

நாளை என்னைச் சிறிதளவாவது எப்படிச் சிறப்பாக மாற்றிக்கொள்ளப் போகிறேன்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை எழுதிவைத்தால் நம்முடைய எண்ணங்களையும் செயல்களையும் புரிந்துகொள்ள முடியும். அதற்காக ஒரே நாளில் நம்மை மாற்றிவிட வேண்டும் என்ற அவசரம் தேவையில்லை. சிறிய மாற்றங்களே தொடர்ந்து நிகழும்போது பெரிய முன்னேற்றமாக மாறுகின்றன.

நமக்குப் பிடிக்காத விஷயங்களுக்கு 'இல்லை' என்று சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடித்த விஷயங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். எல்லோரிடமும் நல்லவராக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் நம்முடைய மன அமைதியை இழந்துவிடக் கூடாது.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் நம்மால் சரிசெய்ய முடியாது. எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் முடியாது. எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றவும் முடியாது. ஆனால், நம்முடைய எண்ணங்கள், செயல்கள், பழக்கங்கள், எதிர்வினைகள் ஆகியவற்றைச் சிறிது சிறிதாகச் செம்மைப்படுத்த முடியும்.

இறுதியாக, ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நிரந்தரமாகத் துணையாக இருக்கப்போவது நாம்தான். உறவுகள் மாறலாம். நண்பர்கள் விலகலாம்.

இதையும் படியுங்கள்:
உங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா? தேவை முடியும்போது விலகும் போலி உறவுகள்!
மன அமைதி

வாய்ப்புகள் மறையலாம். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரலாம். அத்தனை மாற்றங்களுக்கும் நடுவில் நம்மை நாம் இழந்துவிடாமல் பார்த்துக்கொள்வதே வாழ்க்கையின் முக்கியமான கலை.

மற்றவர்களைக் கையாள்வதற்கான திறமை நமக்கு சமூகத்தில் இடத்தைப் பெற்றுத்தரலாம். ஆனால், நம்மைக் கையாளத் தெரிந்திருப்பதுதான் வாழ்க்கையில் நிம்மதியைப் பெற்றுத்தரும். ஏனெனில், உலகத்தையே வெல்வதற்கு முன்பு நாம் வெல்ல வேண்டிய முதல் மனிதர் நாமே!

ஒவ்வொரு நாளும் இரவு உறங்குவதற்கு முன் நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.