
உலகில் மாபெரும் சக்தி உங்கள் மனதுதான். பிரபஞ்ச சக்தியையே ஒன்று திரட்டும் தன்மை உள்ளது. ஆழ்மனதில் எதை விதைக்கிறீர்களோ அதுவே முளைத்து, வளர்கிறது. ஆழ் மனதின் அற்புதச் சக்தியை மேலோட்டமாகப் பார்த்தால் அறிந்துகொள்ள முடிகிறது.
மனதில் பயம் வந்துவிட்டால். அவன் என்றும் பயந்தாங்கொள்ளிதான். மனதில் தைரியம் வந்துவிட்டால் அவனுக்கு யானைப் பலம் வந்துவிடும். உடம்பின் பயத்தைவிட, உள்ளம் பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். உடம்பில் பெரிய பயில்வானைப் போல் ஒருவன் இருந்தான். அவனைப் பார்ப்பவர். அனைவருக்குமே மனதில் அச்சம் வந்துவிடும்.
அவன் தெரு வழியே வரும்போது, முரடன் போல் காட்சி அளிப்பான். புதிதாய் முதலாவதாக அவனைப் பார்ப்பவர்களும் முரடன் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அவனோ கரப்பான் பூச்சிக்குக் கூடப் பயப்படுவான்.
அப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளிக்கு உடம்பில் பலம் இருந்து என்ன செய்ய முடியும். அதே சமயம் அவனின் நண்பன் ஒல்லிக்குச்சி உடம்புடன் இருந்ததால் அவன் உடம்பில் பலம் இல்லை என்றாலும், உள்ளத்தில் பலசாலியாக இருந்தான். அவனைப் போல் எதற்கும் பயப்படமாட்டான்.
இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது நமக்கே புரிகிறது அல்லவா!
மனிதனின் முழுமையான சக்தி அவன் மனதில்தான் இருக்கிறது. அஞ்சாத நெஞ்சம் வேண்டும். எதற்கும் அஞ்சிச் சாகும் கோழை தினந்தோறும் இறக்கிறான். துணிவே துணை என மனசக்தியுடன் இருப்பவனே. மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.
மனதுக்குள் கோழைத்தனம் புகுந்துவிட்டால், நம்மால் எதையும் செய்துவிட இயலாது. கோழைத்தனத்தை அகற்றி, நம்மால் முடியும் என நினைக்கவேண்டும்.
உலகில் இன்று வானளாவ அனைத்திலும் சாதனை செய்துள்ளது மனித சக்தி. அந்த மனித சக்தி ஆக்க பூர்வமான வேலைகளைச் செய்ய உதவியதும் மனதின்சக்திதான் அதுதான் அனைத்து வேலைகளுக்கும் உந்து சக்தியாய் இருக்கிறது.
மனதினை என்றும் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். குளம்பிய குளத்தில் மீன் பிடிக்க முடியாது .அதுபோலத்தான் மனிதனின் மனமும் எந்த ஒரு செயலிலும் முடியும் முடியாது எனக் குழப்பிக் கொண்டால். அந்தக் காரியம் செயல்படமுடியாது. மனதில் தெளிவான சிந்தனையுடனும், ஒருமுக சக்தியுடனும் செயலாற்றும் போது தொடர்ந்து வெற்றிபெற முடியும்.
பூமிக்கும் கீழே வெடிக்கும் அணுகுண்டு முதல் அண்டவெளி சென்று சுற்றிவரும் இராக்கெட் முதல் அனைத்தும் மனதின் சக்தியால் உருவானவைதானே! மனதின் சக்தி மிகவும் அபாரமானது .அந்தச் சக்தியை செல்லரித்துவிடச் செய்யாதீர். பயன்படுத்தாமல் மழுங்கச் செய்யவும் கூடாது.
எப்பொழுதும் ஆக்கபூர்வமான வேலைகளுக்கே மனதின் சக்தியைப் பயன்படுத்தவேண்டும். அதை மறந்து அழிவு வேலைகளுக்குப் பயன் படுத்தினால். அனைவரும் அதன் பாதிப்பை அடையவேண்டும்.
உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கவேண்டும் எனஆசைப்படுங்கள். இந்த ஆசை நிறைவேற்றி வைக்கப்படும் ஏனென்றால் இது முற்றிலும் நியாயமான ஆசைதானே அத்துடன் அது யாரையும் பாதிக்கவும் செய்யாது மனதின் சக்தி இப்படி ஒரு வட்டத்துக்குள் வந்துவிட்டால் வளமான எதிர்காலம் என்றென்றும் அமையும் என்பதில் ஐயமில்லை.
மனதின் சக்தியை நீங்கள் ஆளுங்கள். அது உங்களை ஆள இடம் கொடுக்காதீர்கள். தேவையில்லாத குப்பைகளை மனதுக்குள் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள். உங்கள் உணர்வுகள் யாவும் உண்மையாகட்டும், மனதின் சக்தி உண்மையை மட்டுமே நேசிக்கும். இந்த உண்மையை இப்பொழுது உணர்ந்து கொண்டால், அச்சம் இன்றி வாழலாம்!