
புதிய பள்ளியில் சேர்வது, புது வேலைக்கான இன்டர்வியூ, உயர் அதிகாரியுடன் மீட்டிங் இப்படிப்பட்ட நாளில், நேரத்தில் பதற்றத்தில் மூழ்கித் தவிப்பவர்கள் நிறையப் பேர். சிலருக்கு வெட வெடக்கும் பயத்தில் உடலெங்கும் வியர்வையும், வாய் உலர்ந்து நாக்கு ஒட்டிக் கொண்டு பேச்சற்று போகும். எதிர்காலத்தை செதுக்கும் அந்தப் பொன்னான தருணத்தில் பதற்றத்தால் தோற்றுவிடக்கூடாது.
இதற்கு பதற்றம் தவிர்க்க வழிகள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்.
அமைதியான சூழலில் அமரவும்
அமைதியான சூழலில் அமருங்கள். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். வயிறு முழுக்க காற்று நிரம்புவதுபோல வேகமாக மூச்சை இழுத்து விடுங்கள். 'இதில் மார்க் குறைந்து விடுமோ, இண்டர்வியூவில் நமக்கு தெரியாத கேள்வி கேட்பார்களோ என்பது போன்ற நினைப்புகளை தூக்கிப்போட்டுவிட்டு, உங்கள் நாசி வழியே சென்று திரும்பும் மூச்சில் மட்டுமே கவனம் வையுங்கள்.
மனமும் உடலும் அமைதி அடையும். நடக்காத எதிர்காலம் பற்றிய கவலைகள் போய் நிகழ்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் அதன் பின் யோசிக்கலாம்.
சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்
இப்படிப்பட்ட தருணங்களை பசியோடு எதிர்கொள்ளாதீர்கள். ஒருவேளை கிளம்பும்போது பசிக்கவில்லை என்றாலும் அங்கு சென்றுகாத்திருக்கும் நேரத்தை கணக்கிட்டு ஏதாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். பசியில் இருக்கும்போது மனம் ஒரு வித எரிச்சலில் எதிர்மறையான விஷயங்களை யோசிக்கும். அதனால் குழப்பம் ஏற்படும் இந்த குழப்பம் பதற்றமாக வெளிப்படும்.
பிடித்ததை செய்யுங்கள்
நடக்கப்போகும் அந்த சந்திப்பு. அந்த நிகழ்வு பற்றிய எண்ணமே உங்களுக்கு பதட்டம் வருகிறதா? மனம் முழுமையாக உன் கட்டுப்பாட்டில் இல்லை எனும்போது அதை நினைத்து வருத்தப்படுவதால் மட்டும் என்ன ஆகப்போகிறது? பிடித்த டி.வி. சானல், புத்தகம் படிப்பது, நண்பர்களோடு பேசுவது என மன நிறைவு பெறலாம்.
எதிர் கொள்ளுங்கள்
'நெருப்பு சுடும்' என பாடம் படித்த குழந்தையைவிட தொட்டு பார்த்து உணர்ந்த குழந்தை இன்னும் எச்சரிக்கையாக இருக்கும். பிரச்னையை கண்டு ஒதுங்கினால் அது உங்கள் மனதை துரத்திக் கொண்டே இருக்கும். எதிர்கொள்ளுங்கள் பிரச்னை நினைத்து பயப்படுவதைவிட அதை எதிர்கொண்டு போராடுவது ஒன்றும் கஷ்டமான விஷயம் இல்லை.
ஆலோசனை கேளுங்கள்
ஒரு பைக்குள் ஏதாவது ஒரு பொருள் இருக்கும்போதுதான் எடை கூடுகிறது. உங்கள் மனதில் பிரச்னையை ஏற்றி வைத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதை எப்படியாவது துரத்தும் வழியை தேடுங்கள். இதை எப்படி எதிர்கொள்வது என நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். இதேபோன்ற சூழலை எதிர்கொண்டவர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவும்.
மன மகிழ்ச்சி பெறுங்கள்
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது? அதுதான் இந்த வாழ்வை சுவாரசியம் ஆக்குகிறது. எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் உங்கள் காலத்தில் இன்பங்களை இழந்து விடாதீர்கள். உங்கள் சூழலில் இருக்கும் சுவாரசியங்களை உற்றுப் பாருங்கள். ஒரு குழந்தையின் சிரிப்பு, ஒரு அழகிய ஓவியம், ஒரு வண்ணமயமான மலர் இவை தரும் ரசனைகளால் மன மகிழ்ச்சி பெறுங்கள். இதனால் மனம்பதற்றம் அடையாது.
பாசிட்டிவாக நினையுங்கள்
உங்கள் பதட்டத்தை நீங்கள் கேள்விகளால் எதிர் கொள்ளுங்கள். கடந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகைளை எப்படி எதிர்கொண்டீர்கள்? என யோசித்துப் பாருங்கள். இப்படித்தான் நீங்கள் அப்போதும் பயந்தீர்கள்.
ஆனால் பயந்ததுபோல எதுவும் ஆகவில்லை.
ஒன்றுமே இல்லாத விஷயத்தை பூதாகரமாக ஆக்கி வருத்தப்பட்டீர்கள். ஆனால் எல்லாமே சுபமாக முடிந்து, 'இதற்கா இப்படி பயந்தோம்' என நீங்கள் வெட்கப்படும்படி ஆகிவிட்டது. இப்போதும் அப்படி நல்லதே நடக்கும் என பாசிட்டிவாக நினையுங்கள்.